பச்சைக்கனவு

[மார்ச் மாதத்தையெல்லாம் இனி வெயில் காலம் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது போல் உள்ளது. கடந்த இரு தினங்களாகச் சென்னையில் அவ்வப்போது மழை பொழிந்துகொண்டிருக்கிறது. வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு.

நேற்றுக் காலை கண் விழித்ததும் உண்டான உணர்வை 2004 ஜூலையில் எழுதிய இக்கட்டுரை பிரதிபலிப்பதைத் தற்செயலாக கவனித்தேன். தமிழோவியத்தில்என்னுடைய வலைப்பதிவு இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எழுதியது.

நான்கு வருட இடைவெளியில் பெரிய மாறுதல்கள்ஏதுமில்லை. கனவுகள் அப்படியேதான் உள்ளன.

ஒரே ஒரு வித்தியாசம். என்தம்பி இப்போதெல்லாம் செடிகளுக்கு நீர் ஊற்றுவதில்லை. அந்தப் பூச்செடிகளும் இப்போது இல்லை.]

*

ஒரு பெரிய மரத்தின் கீழே நிழலில் அமர்ந்து படிக்கவோ, எழுதவோ, சிந்திக்கவோ, அல்லது சும்மா கிடக்கவோ வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அடுக்குமாடி வாழ்க்கையில் அதற்கெல்லாம் இனி சந்தர்ப்பமே வராது என்று தோன்றுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் என்ற கிராமத்தில் என் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தினங்கள் கழிந்தன. அந்த ஊர் பள்ளிக்கூடத்துக்கு என் தந்தையார்தான் தலைமை ஆசிரியர். ஆகவே நாங்கள் மாற்றலாகிப் போனதுமே ஊர்ப்பெரியவர்கள் நல்ல, விஸ்தாரமான வீடொன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். நாலைந்து தென்னை மரங்கள், ஒரு மாமரம், பெரியதொரு கிணற்றடி இருந்த வீடு அது.

அந்த மா மரத்துக்கும் கிணற்றடிக்கும் இடையிலிருந்த பகுதியில் என் அம்மா அரைக்கீரை விதைகளை இட்டார். கிணற்றின் பின்புறம் இருந்த இன்னும் கொஞ்சம் இடத்தில் சிறு வெங்காயம் பயிரிட்டார். கீரையும் வெங்காயமும் செழித்து விளைந்தன. வீட்டில் பறித்த கீரை என்று சில ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் உணவு விருந்தானது நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் அதை ரசிக்கவோ, அனுபவிக்கவோ தெரியவில்லை.

இப்போது மூடிய அறைக்குள் கணினி வெளிச்சத்தின்முன் எப்போதும் அமர்ந்திருக்கும்போது அந்தத் திறந்தவெளிக்கும் தென்னையின் சலசலப்புக்கும் விதைத்து முளைத்த அரைக்கீரைக்கும் மனம் ஆசைப்பட்டுத் தொலைக்கிறது.

தோட்டம் அழகானதுதான். ஏனோ தோட்டவேலை எனக்குச் சரிப்படுவதில்லை. குனிந்து நாலு கொத்து மண்வெட்டியால் கொத்தினால் மூச்சிறைக்கிறது. உட்கார்ந்து பழகிய உடம்பு வளைய மறுத்து அவமானப்படுத்துகிறது. இப்போதிருக்கும் வீட்டில் கூட முன்னும் பின்னுமாக இரண்டு அடி இடம் இருக்கிறது. என் தம்பி எங்கிருந்தோ வாங்கிவந்து சில பூச்செடிகளையும் ஒரு வாழைக்கன்றையும் ஒரு கருவேப்பிலைச் செடியையும் நட்டிருக்கிறான். தினசரி வீடு திரும்ப எத்தனை நேரமானாலும் அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நாலு வாளி நீர் ஊற்றிவிட்டுத்தான் உள்ளே வருகிறான்.

அலுவலகம் புறப்படும் சில காலை வேளைகளில் அவன் நட்ட செடியில் அபூர்வமாக செம்பருத்தி மலர்ந்தாடுகிறது. பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் நிழலில் உட்காருகிற விதத்தில் ஒரு மரக்கன்று நடும் அளவு இடமில்லாதது வருத்தமே.

ஒருமுறை பத்திரிகை வேலை நிமித்தம் பாலக்காட்டுக்குச் சென்றிருந்தேன். முடித்துவிட்டு, அப்படியே திருச்சூர் போய் பூரம் சேவித்துவிட்டு, அங்கிருந்த என் அலுவலகச் சகா ஒருவரின் பாட்டி வீட்டுக்குப் போனேன். பெரிய வாழையிலையில் அருமையான விருந்து. பலாச் சக்கையில் பொறியல் மாதிரி சமைத்திருந்தார்கள். பலாச்சுளைகளாலான பாயசம். பதார்த்தங்கள் அனைத்திலும் தூக்கலான தேங்காய் வாசனை. தேங்காய்ப்பாலே தனியொரு தம்ளரில் இருந்தது. தவிர, மா, பலா, வாழை, சப்போட்டா எனக் குவியலான பழவகைகள்.

இதிலென்ன விசேஷம் என்றால் அத்தனையுமே அவர்கள் வீட்டிலேயே விளைபவை. சாப்பிட்டதும் அவர்களது தோட்டத்துக்குப் போனேன். கால் கூசுமளவு செடிகளால் நிரம்பியிருந்தது அது. மரங்களுக்குச் சிப்பாய் போலச் சுற்றிலும் செடிகள். மூலிகைச் செடிகள், பூச்செடிகள், மிளகுக் கொடிகள் இன்னபிற. அந்தப் பலா மரங்களைச் சொல்லவேண்டும். தாங்கமாட்டாமல் பழங்களின் சுமை தரையை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தன. குட்டைத் தென்னையின் காய்களோவென்றால் தரையிலிருந்து இரண்டடி உயரத்திலேயே ஆரஞ்சு நிறத்தில் கொத்துக்கொத்தாகக் காய்த்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. குனிந்து பறித்து, சீவிக்குடிக்கும் இளநீர்!

இந்த மண்ணில் எதுவும் முளைக்கும் என்று அவர்கள் சொன்னபோது பெருமூச்சு விடமட்டுமே முடிந்தது.

அந்தப் பெரிய பலா மரத்தடியில் உட்கார்ந்து பேசுவீர்களா, படுத்துத் தூங்குவீர்களா என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்துவிட்டு இல்லை என்று சொன்னார் வீட்டுக்காரர். அத்தனை பெரிய வீட்டுக்குள் புழங்கவே ஆட்கள் அதிகமில்லை என்பது அவர் வருத்தம். தன் பேத்தி, ஊரைவிட்டுச் சென்னைக்குப்போய் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உத்தியோகம் பார்க்கிற வருத்தமே அவருக்கு அதைக்காட்டிலும் பெரிதாக இருந்தது.

இன்னொரு சந்தர்ப்பம். இது பொள்ளாச்சி. இங்கும் பத்திரிகை வேலையாகத்தான் போயிருந்தேன். அங்கே நசன் என்றொரு இலக்கிய ஆர்வலர், தமிழில் வெளியாகும் அத்தனை சிற்றிதழ்களையும் தொகுத்து ஒரு மாபெரும் நூலகமே வைத்திருந்தார். அவரைச் சந்தித்துவிட்டு வரலாம் என்று போனேன்.

நசனின் வீடு சிறிதாக இருப்பினும் அவரது தோட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. வெளியே கயிற்றுக்கட்டில் போட்டு அமர்ந்துதான் பேசினோம். பாரதியார் வருணித்த காணிநிலக்காட்சியை அங்கே நான் கண்டேன். அப்படியொரு சோலைக்கு நடுவே சொந்தக்காசில் அறை எழுப்பி, சிற்றிதழ்கள் சேகரித்து, அவற்றோடே வாழும் நசனின் மனம் அவரது தோட்டத்தைக் காட்டிலும் எழிலானதென்று தோன்றியது.

சிறிய வயதில் நான் அதிகம் புழங்கிய என் பாட்டிவீடு, சைதாப்பேட்டையில் இருந்தது. 40, பெருமாள் கோயில்தெரு என்பது விலாசம். சரக்கு ரயில்பெட்டி மாதிரி நீளமான வீடு. அடுக்கடுக்கான குடித்தனங்களில் விதவிதமான மனிதர்கள். நடக்க நடக்க வீடும் நம்மோடே நடந்துகொண்டே வருவது போல பிரமை தரும் விதத்தில் அத்தனை நீள நடையோடி. இருளோவென்று இருக்கும். துளி வெளிச்சம் இராது. துணிந்து கடந்து பின்புறம் அடைந்துவிட்டால் பளிச்சென்று துலங்கும் ஒரு தோட்டம். அங்கே இரண்டு தென்னை மரங்களும் ஒரு பாதாம் மரமும் துலுக்கசாமந்திச் செடிகளும் உண்டு. அங்கேயே ஒரு கூரை சரித்து இரண்டு பசுக்களும் இருக்கும். தோட்டத்தின் வாசனை பசுஞ்சாணத்தால் சாந்நித்தியம் அடைவதாக எப்போதும் தோன்றும். காலடியில் வைக்கோல் சரசரக்க மெதுவாக அங்கே நடந்துகொண்டிருப்பதே ஒரு அனுபவமாயிருக்கும்.

பொதுவாகப் பாட்டிவீட்டில் கழியும் என் ஞாயிற்றுக்கிழமைகள் என் சமவயதுச் சகோதரர்களுடன் அந்தச் சிறு தோட்டத்தில்தான் விடியும். மத்தியானம் மூன்று மணி சாவகாசத்துக்குக் கையில் ஒரு துரட்டுக்கோலுடன் பாட்டி அங்கே வருவாள். பாதாம் மரக் கிளையொன்றை இழுத்து இலைகள் பறித்து, அங்கேயே தொட்டியில் கழுவி, “வாங்களேண்டா, பசிக்கலியா?” என்று கேட்பாள்.

சுடச்சுட அரிசி உப்புமாவோ, ஒன்றரை தோசையோ அந்த பாதாம் இலையில் வைத்துச் சாப்பிடுவது அப்படியொரு ருசி தரும்.

பாட்டி அந்த வீட்டிலிருந்து புறப்பட்டதுடன் அந்தத் தோட்டமும் மாடுகளும் இல்லாமலாகிவிட்டன. என் மாமா, வீட்டை இடித்து பகுதி பகுதியாக ஃப்ளாட் ஆக்கும் தன் முயற்சியை இன்றுவரை செய்துகொண்டே இருக்கிறார்.

ஃப்ளாட் வாசம் சௌகரியமானதுதான். ஆனால் சந்தோஷமானதென்று சொல்லமுடியவில்லை. திரும்பத்திரும்ப சுவர்களையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. வாசல் கதவைத் திறந்துவைத்தாலும் எதிர் போர்ஷனின் மூடிய கதவும் சுவர்களும்தான் கண்ணில் படுகின்றன. மரங்களை அல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் மனிதர்களையாவது அவ்வப்போது பார்க்க முடிவதில்லையே என்றுதான் கஷ்டமாக இருக்கிறது. இதையெல்லாம் உத்தேசித்துத்தான் நானும் என் தம்பிகளும் சேர்ந்து சொந்தமாக ஒரு கர்ச்சீப் அளவு நிலம் வாங்கி ஒரு வீடு கட்டினோம். கர்ச்சீப்பில் எம்பிராய்டரி செய்ய இடம்விடத்தான் மறந்துவிட்டோம்.

நேற்றைக்கு இரவு கொஞ்சம்போல் மழை பெய்திருக்கிறது. ஒரு சிறு சத்தமும் கேளாமல் மூடிய அறைக்குள் உறங்கிக் கிடந்திருக்கிறேன். விடிந்து எழுந்து பார்க்கும்போது வீதியெல்லாம் குளித்து நிற்கிறது. வானம் பளிச்சென்று புன்னகை செய்கிறது. பறவைகள் எப்போதுமில்லாத சந்தோஷக் குரல் எழுப்பிக்கொண்டு எங்கோ பறக்கின்றன. ஒரு தோட்டம்  இருந்திருந்தால் இரவு பெய்த மழையின் சுவடு அங்கே தங்கியிருக்கும். செடிகளின் இலைகள் மழையின் மிச்சத்தைச் சேமித்து வைத்து உதிர்த்துக் காட்டியிருக்கும். ஈர வாசனையுடன் மரங்கள் புதுமணப்பெண் போல் சிரம் கவிந்து நின்றிருக்கும்.

கொடுப்பினை இல்லாததால் வெறும் கற்பனையில் எனக்கான தோட்டம் சூழ்ந்த இல்லத்தை எண்ணியபடி கிளம்பி வந்து இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

( நாள் : 7/13/2004 2:44:51 AM)

*

[பி.கு: என் பழைய வலைப்பதிவுகளிலிருந்து சில முக்கியமான கட்டுரைகளை இங்கே மீள் பிரசுரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். வாசகர்கள் தமது விருப்பம் அல்லது விருப்பமின்மையை எனக்கு மின்னஞ்சலில் எழுதலாம்.  குறிப்பாகச் சில கட்டுரைகளை விரும்பினாலும் பெயர் குறிப்பிட்டுத் தெரிவிக்கலாம். இவ்விஷயத்தில் என் பழைய கட்டுரைகளைத் தேடியெடுக்கும் பணியில் நண்பர் கணேஷ் சந்திரா ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றி.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter