காது, காதல், கடவுள்

எம்.வி. வெங்கட்ராம், தமது கடைசிக் காலத்தில் ‘காதுகள்’ என்று ஒரு நாவல் எழுதினார். ஒருவனுக்கு திடீரென்று காதுக்குள் வினோதமான சத்தங்கள் கேட்கும். சத்தம் இரைச்சலாகும். இரைச்சல் சமயத்தில் இசையாகவும், வேறு சமயத்தில் பயங்கரமான பிசாசுக்குரலாகவும் கூட ஒலிக்கும்.

வெங்கட்ராம், தம் காதுக்குள் கேட்ட குரலைத்தான் அந்நாவலில் எழுத்துவடிவில் பதிவு செய்து வைத்ததாகச் சொன்னார்.

காதுகள் நாவல் வெளியானபோது தமிழகத்தில் பலபேர் அதன் கருப்பொருளை ஒப்புக்கொள்ளவில்லை. வெறும் பேத்தல் என்று சொல்லிவிட்டார்கள். சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன், அந்நாவலை மதிப்புரை செய்வதற்காக சுந்தரராமசாமிக்கு அனுப்பினார். ஒரு நம்பிக்கையில் முந்தைய இதழில் ‘விரைவில் இதற்கு சுந்தரராமசாமி மதிப்புரை எழுதுவார்’ என்கிற ரீதியில் ஒரு சிறு அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார்.

ஆனால் என்ன காரணத்தாலோ சுபமங்களாவில் ராமசாமி, காதுகள் நாவலுக்கு மதிப்புரை எழுதவில்லை. பிறகு, எம்.வி.வி.யின் அந்நாவலுடன் சுந்தரராமசாமியால் ஒன்ற முடியவில்லை என்பதாகக் காரணம் சொன்னார்கள்.

திடீரென்று ஒருநாள் தமக்கு முருகனின் (கடவுள் முருகன்) குரல் கேட்டதாகவும் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் தன் காதில் இறைக் கட்டளை விழுந்துகொண்டே இருந்ததாகவும் பின்னர் ஒரு சமயம் சென்னை இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் சந்தித்தபோது எம்.வி.வி.யே என்னிடம் சொன்னார். மனரீதியில் மிகப்பெரிய அதிர்வுகளுக்கு உள்ளாகி, யதார்த்த உலகில் உருட்டிவிடப்பட்ட ஒரு பந்து போலத்தான் அப்போது அவர் எனக்குத் தென்பட்டார். அவருக்குக் கேட்ட குரல் பற்றியோ, அது முருகன் தான் என்பது பற்றியோ அவருக்குத் துளி சந்தேகமும் இல்லை. தமது ஆணித்தரமான நம்பிக்கையையே அவர் காதுகள் நாவலிலும் வெளிப்படுத்தியிருந்தார்.

துரதிருஷ்டவசமாக அந்த இரைச்சல், நாவலிலும் கொஞ்சம் அதிகமாகவே கேட்டுவிட்டபடியால் இலக்கிய ரீதியிலான அதன் வெற்றி பாதிக்கப்பட்டது.

முற்றிலும் கற்பனையில் அமானுஷ்யமான விஷயங்களைப் பறித்து மாதநாவலாக எழுதுவோர் பற்றிப் பிரஸ்தாபிக்க ஏதுமில்லை. ஆனால் எம்.வி.வி. அனுபவத்துக்கு அப்பாற்பட்ட எது ஒன்றையும் எழுதக்கூடியவரல்லர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழிலக்கியத்துக்குச் செழுமை சேர்த்தவர்களுள் ஒருவர். நித்யகன்னி, வேள்வித்தீ என்ற அவரது இரு நாவல்களையும் ‘எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பையும் நான் படித்திருக்கிறேன். கப்ஸா எழுத்தாளர் அல்லர்.

ஆனாலும் அவரது காதுகள் நாவலை ஒரு கப்ஸா என்று பலர் சொன்னார்கள். காரணம், அதிலிருந்த அமானுஷ்ய விவரங்கள். ஒரு உத்தியாக அல்லாமல், கருப்பொருளாகவே அவர் அதனை முன்வைத்திருந்ததுதான் மேற்படி விமரிசனத்துக்குக் காரணம். நாவலில் யதார்த்தமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

எனில், அமானுஷ்யமான விஷயங்கள் எல்லாமே கப்ஸாதானா?

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்குவேஸின் வாழ்க்கையைப் படித்தால் அவருக்கும் ஏராளமான அமானுஷ்ய அனுபவங்கள் இருந்திருப்பது தெரிகிறது. மார்குவேஸ் தன் உள்ளுணர்வு பெரும்பாலும் பின்னால் நடக்கவிருப்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். சில உதாரணங்கள் கூடக் காட்டுகிறார். எங்கோ கடற்கரையோர விருந்தினர் விடுதியில் இருந்தபோது ஒரு புயல்காற்றை மனம் முன்னறிவிக்க, உடனடியாகப் புறப்பட்டு ஊர்வந்து சேர்ந்து மறுநாள் செய்தித்தாள் பார்த்திருக்கிறார். உள்ளுணர்வு சொன்னபடி அந்த ஊரே புயலால் சர்வநாசமாகியிருக்கிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் காரில் போய்க்கொண்டிருக்கும்போது தன் வீட்டில் ஏதோ ஒரு முக்கிய சம்பவம் நடந்திருப்பதாக அவரது உள்குரல் சொன்னது. போன் செய்து பார்த்தபோது யாருக்கோ அதே சந்தர்ப்பத்தில் குழந்தை பிறந்திருந்தது என்று எழுதுகிறார்.

மார்குவேஸின் உள்ளொலிதான் எம்.வி.வியின் உள்ளொலியாகவும் இருந்திருக்கக்கூடும். அவர் ஒரு சௌகரியத்துக்கு அதற்கு முருகன் என்று பெயரளித்திருக்கலாம். ஆனால் மார்க்குவேஸ் அமானுஷ்யமான விஷயங்களைத் தமது படைப்புகளை முன்னகர்த்திச் செல்லும் ஓர் உத்தியாக மட்டுமே கையாண்டார் என்பதை கவனிக்கவேண்டும்.

இன்னும் கூடச் சொல்லலாம். சார்லஸ் டிக்கன்ஸுக்கும் இதே மாதிரியான அமானுஷ்ய அனுபவங்கள் நேர்ந்திருக்கிறது. அவரைப் பைத்தியம் என்றே கொஞ்சகாலம் ஊர் மக்கள் எண்ணியிருக்கிறார்கள்.

டிக்கன்ஸின் மனைவி கேதரினுக்கு அழகான தங்கையொருத்தி இருந்தாள். அவள் பெயர் மேரி. டிக்கன்ஸுக்கு எப்படியாவது மேரியையும் தாம் திருமணம் செய்துகொண்டுவிடவேண்டும் என்று ஓர் ஆசை. இத்தனைக்கும் கேதரினுடன் நடத்திய குடும்பத்தில் டிக்கன்ஸுக்குப் பத்து பிள்ளைகள்.

ஆனாலும் மேரியின் மீதான அவரது விருப்பமே அவரது தியானமாகி, சித்தம் முழுவதையும் மேரியாலேயே நிரப்பிவைத்தார். நின்றால் மேரி, நடந்தால் மேரி, எழுதினால் மேரி, பேசினால் மேரி, கண்ணை மூடினால் மேரி, மூடிய கண்ணைத் திறந்தாலும் மேரி என்று தம் உடம்பின், உணர்வின் அத்தனை செல்களிலும் மேரியைப் புதைத்துவைத்துக் கொண்டார். பதினைந்து, பதினாறு வயசுப் பெண்தான் அவள்.

மனுஷன் இந்தப் பாடு படுகிறாரே, போனால்போகிறதென்று அவரது மனைவியே தம் தங்கையைத் தன் கணவருக்கு இரண்டாவதாகத் திருமணம் செய்துவைத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாகத் தமது பதினேழாவது வயதிலேயே மேரி இறந்துபோனாள். அதுவும் டிக்கன்ஸின் மடியிலேயே.

டிக்கன்ஸை இச்சம்பவம் மிகவும் பாதித்தது. மறைவுக்குப் பின்னும் மேரி நிற்பதும் நடப்பதும் பேசுவதும் சிரிப்பதும் அவருக்குத் தெரிவதாகச் சொன்னார். காற்றைப் பார்த்து அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் அவரை முழுப்பைத்தியம் என்றே ஒரு கட்டத்தில் முடிவு செய்துவிட்டார்கள்.

“நீங்கள் இறந்தால் என் பக்கத்திலேயே உங்களையும் புதைக்கச் சொல்லுங்கள்” என்று கடவுளாகிவிட்ட மேரி தன்னிடம் கேட்டுக்கொண்டதாகக் கூட டிக்கன்ஸ் சொல்லியிருக்கிறார். அட அந்தப் பெண்ணுக்குத்தான், தன் அக்கா பாவம் என்று தோன்றியிருக்காதோ!

உருவமற்றுக் காற்றில் கரைந்து நின்று தன்னுடன் பேசும் மேரியின் குரலுக்குச் செவி கொடுத்தேதான் தன் காதுகள் மிகவும் கூர்மையடைந்துவிட்டதென்றும், அதனால்தான் சிறு ஒலிக்குறிப்புகளைக் கூடத் தவறவிடாமல் தன்னால் எழுத்தில் பதிவு செய்ய முடிகிறதென்றும் ஒருசமயம் டிக்கன்ஸ் சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களுக்கு அமையாத ஒரு வினோத முடிவு டிக்கன்ஸின் வாழ்க்கைக் கதைக்கு மட்டும் உண்டு. உடல்நிலை மிகவும் மோசமாகி, சிந்திக்கக்கூட முடியாமல் பரிதாபமாகப் படுக்கையில் விழுந்து, 1870ல் டிக்கன்ஸ் காலமானபோது, லண்டன் நகரில் ஒரு பெண்மணி, தினசரி ராத்திரி வேளைகளில் டிக்கன்ஸ் தன் கனவில் வந்து நாவல்களை டிக்டேட் செய்வதாகவும், அதைத் தான் டைப் செய்து வைத்திருப்பதாகவும் சொன்னார்!

டிக்கன்ஸின் வாழ்வில் காத்தரின், மேரி தவிரவும் சில பெண்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள். மேரிக்கும் சின்னவளான தங்கை ஒருத்தி இருந்திருக்கிறாள். அவள் பெயர் ஜார்ஜியானா. அவளைக்கூட டிக்கன்ஸ் கொஞ்சகாலம் காதலித்திருக்கிறார். எலன் டெனன் என்றொரு நடிகையுடனும் சிலகாலம் காதல் புரிந்திருக்கிறார். இன்னும் கூடச் சிலர் உண்டு. ஆனால் மேற்படி கனவில் வந்து கதை டிக்டேட் செய்வதாகச் சொன்ன பெண்மணியைக் குறித்து அவரது வாழ்க்கை வரலாறில் குறிப்புகள் ஏதும் கிடையாது. திடீரென்று முளைத்தவள் அவள்.

அமானுஷ்யமான சங்கதிகள் சந்தர்ப்பம், சூழ்நிலைகள், சம்பவங்களை மட்டுமல்லாமல் சில நபர்களையும்கூட அந்தரத்திலிருந்து பிறப்பித்துவிடவே செய்கிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter