ம்ஹும்!

கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது.

முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன், யு.ஆர். அனந்த மூர்த்தி குறித்த சாஹித்ய அகதமியின் டாக்குமெண்டரிகள்.

இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு உணர்த்திய ஒரு செய்தி, சம்பந்தப்பட்ட எழுத்தாளர், டாக்குமெண்டரியின் இயக்குநரை எந்தளவு அல்லது எந்த விதமாக பாதித்திருக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் படத்தின் தரமே தவிர வேறு விதமாக சாத்தியமில்லை என்பதுதான்.

இளவேனிலின் படத்தில் எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த விஷயம், டாக்குமெண்டரி இடைசெவலைப் பற்றியதா, கி.ராவைப் பற்றியதா என்பது. இடைசெவல் ஒரு கிராமம். அது ஒரு ‘மாதிரி கிராமம்’ என்று கி.ரா. சொல்கிறார். பச்சையாக, ஆடுகள் மேய, சிறுவர்கள் கிணற்றில் பாய, ஆள் அரவமற்ற வனாந்திரங்களுடன் அழகாக இருக்கும் கிராமம்.

கி.ரா. இடைசெவலை விட்டு இடம்பெயர்ந்து பல காலம் ஆகிவிட்டது. இந்தப் படத்துக்காகத்தான் அவர் மீண்டும் கிராமத்துக்குச் சென்றார் என்று கேள்விப்பட்டேன். பழைய பள்ளிக்கூடம், வேப்பமரம், நந்தவனம், பால்ய நண்பர் கு. அழகிரிசாமியின் வீடு, குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் என்று பல இடங்களை நினைவுகூர்கிறார். ஆனால் Nostalgiaவுக்கே உரிய பரவசம் அவரது விவரிப்பில் இல்லை. இந்த மண் எனக்கு மொழியைக் கொடுத்தது, பதிலுக்கு நானும் என் நண்பனும் ஆளுக்கொரு சாஹித்ய அகதமி விருது வாங்கிக் கொடுத்துவிட்டோம், அத்தோடு சரி என்பது போல் ஒரு தோரணை. இது நான் எதிர்பாராதது. எனவே, மிகுந்த ஏமாற்றமடைந்தேன்.

இளம் வயதில் காசநோய்த் தாக்குதலுக்கு உள்ளானது, அதற்கான சரியான மருந்து கிடைக்காத காலத்தில், உயிர் பிழைக்கப் போராடியது, 250 ரூபாய் செலவில் திருமணம் முடித்தது, இசையில் ஆர்வம் வந்தது என்று சில விஷயங்களை நினைவுகூர்கிறார்.

மிகத் தீவிரமான இசை ஆர்வத்துடன் இயங்கியவர், பாடவும் வயலின் வாசிக்கவும் கற்றுக்கொண்டவர், எந்தக் கணத்தில் எழுத்துக்கு இடம்பெயர்ந்தார் என்பதை இந்த டாக்குமெண்டரி சரியாகச் சொல்லவில்லை.

கலை மனம் என்பது ஒன்றுதான். பாடவும் வயலின் வாசிக்கவும் ஓவியம் வரையவும் பானை செய்யவும் போட்டோ எடுக்கவும் டான்ஸ் ஆடவும் எழுதவும் வேறு வேறு மனம் கிடையாது. ஆனால் ஓர் இடப்பெயர்ச்சி அல்லது தளப்பெயர்ச்சி நடக்கிறதென்றால் அதற்கான தருணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

கி.ராவின் சிறுகதைகள் போலவே அவருடைய கிராமாந்திரப் பலான கதைகளும் புகழ்பெற்றவை. மிகுந்த சர்ச்சைகளை உண்டாக்கியவை. அவர் ஏன் அக்கதைகளை எழுதினார் என்று தாயில் அவை தொடராக வெளியானபோது அவரது தீவிர ரசிகர்கள் ஆதங்கப்பட்டதை அறிவேன். கி.ராவின் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமான அது குறித்த நினைவுகூரல்கள் இந்த டாக்குமெண்டரியில் இல்லை.

தமிழில் இதுவரை நிகழ்த்தப்பட்ட சிறுவர் இலக்கிய முயற்சிகளுள் அவரது ‘பிஞ்சுகள்’ இன்றுவரை இன்னொருவர் நெருங்காத உயரத்தில் உள்ளது. அதன்பின் அவர் ஏன் அத்தகைய படைப்பை உருவாக்கவில்லை? தெரியவில்லை. இந்தப் படத்தில் பதில் இல்லை.

கி.ராவை ஆயிரம் பேர் படிப்பார்கள். அவர் யாரைப் படிப்பார்? தெரியவில்லை. அவரது இரு வாரிசுகளும் வேறு வேறு துறைகளுக்குச் சென்று விட்டார்கள். அது பிரச்னையில்லை. ஆனால் தந்தையின் படைப்புகளை அவர்கள் படிப்பார்களா? அவர் விரும்பியபடி நான் வளரவில்லை என்று அவரது ஒரு மகன் பேசுகிறார். நிச்சயம் வருத்தம் தோய்ந்த நினைவுகூரலாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் சரியாக வெளிப்படவில்லை. என்ன காரணத்தினாலோ இயக்குநர், படத்தில் இடம்பெறும் அத்தனை பேரையும் ஒட்டுச் சுவரைப் பார்த்தே பேச வைத்திருக்கிறார். கேமராவுக்கு முகத்தையல்லாமல் காதை மட்டுமே அனைவரும் காட்டுகிறார்கள்.

இதனை ஓர் உத்தியாக இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் பேசுகிற விஷயம் அதன் முழு வீச்சுடன் தாக்கம் ஏற்படுத்தத் தயங்கிவிடுகிறது. கடனே என்று அனைவரும் முகத்தைத் திருப்பிவைத்துக்கொண்டு பேசுவது போல.

இந்தப் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஏனோ திரும்பத் திரும்ப பஷீர் குறித்த டாக்குமெண்டரி நினைவுக்கு வந்தபடி இருந்தது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை அந்தப் படத்தில் பஷீரின் கைவிரல்களும் கால் விரல்களும் துடித்துக்கொண்டே இருந்தன. அது அவருடைய மேனரிஸம். வாழ்நாளெல்லாம் அலையும் துறவியாக இருந்துவிட்டு, வயோதிகத்தில் வீட்டில் அடைக்கலமானவருடைய வாழ்வின் கதியோட்டத்தை அந்த மேனரிசமே குறிப்பில் உணர்த்திக்கொண்டிருந்தது.

கி.ராவைப் பற்றி இன்னொரு படம் தயாரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி