அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின் [11.12.1918 – 03.08.2008]

சோல்செனிட்ஸின் - படம் நன்றி:விக்கிபீடியா1970ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற [அன்றைய] சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்ஸின், நேற்று தமது 89வது வயதில் மாஸ்கோவில் காலமானார். மாரடைப்பு காரணம்.

சோவியத் இலக்கியத்தில் சோல்செனிட்ஸினின் படைப்புகளுக்குத் தனி அந்தஸ்து உண்டு. அவர் நோபல் பரிசெல்லாம் வாங்கி, எழுதி ஓய்ந்த பிற்பாடு இன்றைக்கு அவருடையதெல்லாம் அத்தனையொன்றும் உத்தமமான இலக்கியப் படைப்புகளல்ல என்று பலபேர் சொல்லுகிறார்கள். (தமிழில் கூட அவரது சில சிறுகதைகளும் ஒரு சிறு நாவலும் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறது. பழைய ராதுகா பதிப்பக வெளியீடுகளில் நிறைய சோல்செனிட்ஸின் படைப்புகள் கிடைக்கும்.) ஆனால் ஒரு காலகட்டத்தில் ஸ்டாலினின் கண்ணில் விரல் விட்டு ஆட்டியெடுத்தவர் அவர்.

ஒட்டுமொத்த ரஷ்யாவும் ஸ்டாலினுக்கு பயந்து ஒடுங்கிக்கிடந்தபோது துணிந்து அரசை விமரிசித்து வாங்கிக்கட்டிக்கொண்டவர் சோல்செனிட்ஸின். தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி, அதனால்தான் அவரை நாடுகடத்தினார்கள்.

அதுவும் எப்படி?

கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு முதலில் மரணதண்டனைக்கு உரிய கைதி என்று அவர் அறிவிக்கப்பட்டார். சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டது. அதன்பின் பெரிய மனது பண்ணி தண்டனையைக் குறைப்பதுமாதிரி பத்தாண்டுகள் கடுங்காவல் என்று சொல்லப்பட்டது. அனுபவித்தபிற்பாடு நாடுகடத்தப்பட்டார். குடியுரிமை ரத்துசெய்யப்பட்டது.

Gulag Archipelago என்கிற அவரது நாவல் ரஷ்ய சிறைக்கூட / சித்திரவதைக்கூடப் பின்னணியில் எழுதப்பட்டது. அதனை முன்வைத்தே அவருக்கு அந்த தண்டனையும் வழங்கப்பட்டது. ஆறு வாரகாலம் கேஜிபி ஆபீசர்கள் விசாரணை என்ற பெயரில் அவரைப் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள். விசாரணைக்காலத்தில் அவரைக் காட்டிலும் அவரைவிட சுமார் இருபது வயது இளையவரான அவரது மனைவிதான் மிகவும் பாதிக்கப்பட்டார் – மனத்தளவில்.

இனி சோவியத்தில் வாழமுடியாது என்கிற நிலை வந்ததும் அவர் முதலில் மேற்கு ஜெர்மனிக்கு உயிர்பிழைக்கப் போனார். பான் நகரை அடுத்த ஒரு சிறு கிராமத்தில் இன்னொரு நோபல் பரிசு வென்ற எழுத்தாளரான ஹென்ரிச் போலுடன் அவர் தன் வாழ்வைத் தொடங்கினார். ஆனால் வெகுகாலம் அவர் ஜெர்மனியில் இருக்கவில்லை. அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து போனார். அடுத்த பத்தாண்டுகள் அங்கே தான். மூன்று மகன்களும் நடாலியா என்கிற மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

1974 பிப்ரவரி 14ம் தேதி சோவியத்தைத் துறந்து வெளியேறிய சோல்செனிட்ஸினுக்கு, 1990ல் அங்கே கோர்பசேவ் வந்தபிறகுதான் சனிதசை முடிந்தது. கோர்பசேவ், இழந்த அவரது குடியுரிமையை மீண்டும் வழங்கி, ரஷ்யாவுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். மாஸ்கோவுக்கு அருகில் சோல்செனிட்ஸின் தங்குவதற்காகப் புதிய வீடு ஒன்றையும் கட்டித்தர ஏற்பாடு செய்தார். 94ம் வருடம் மே 27 அன்று சோல்செனிட்ஸின் மீண்டும் ரஷ்யாவுக்கு வந்தார்.

அவரது வருகை எதிர்பார்த்த அளவு சோவியத் மக்களிடையே பெரிய எழுச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. பலபேர் அவரை ஒரு ‘க்ராக்’ என்றே சொன்னார்கள். உலகைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர் என்று தூற்றினார்கள். ஆனாலும் சோல்செனிட்ஸின் தன் தாய்நாட்டை எந்த அளவு நேசித்தார் என்பது, திரும்பி வந்ததும் அவர் மேற்கொண்ட நாடு தழுவிய சுற்றுப்பயணத்தின்போது தெரியவந்தது.

வாழ்நாள் முழுவதும் சோவியத் மக்களைப் பற்றியேதான் நான் நினைத்துக்கொண்டு வந்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருக்கிறார். மக்கள் தான் அவரை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.

அவருக்குக் கிடைத்த நோபல் பரிசைக்கூட அவரது கம்யூனிச எதிர்ப்பு எழுத்துகளுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்று சொன்னார்கள்.

1962ல் வெளியான அவருடைய One Day in the Life of Ivan Denisovich மிகவும் புகழ்பெற்றது. அவரது நூல்கள் அனைத்தும் சுமார் நாற்பது உலக மொழிகளில் இன்றைக்குக் கிடைக்கின்றன. தமிழில் அவருடைய சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திலகவதியின் மொழிபெயர்ப்பில் ‘மேட்ரியோனா இருந்த வீடு’ மிகவும் சுவாரசியமாக இருக்கும். எங்காவது கிடைத்தால் படித்துப்பாருங்கள்.

[1994ம் ஆண்டு அவர் ரஷ்யாவுக்குத் திரும்பிய சமயம் எழுதிய குறிப்பு இது. மரணச் செய்தி மட்டும் இப்போது சேர்க்கப்பட்டது.]
Share

7 comments

  • பின் கதைச் சுருக்கத்தில் “One Day in the Life of Ivan Denisovich” பற்றி நீங்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
    அஞ்சலி!

  • நினைவுகூர்ந்த விதம் நன்றாக உள்ளது. சம்மந்தமில்லாமல் ஒரு கேள்வி. நீங்கள் ஏன் இப்போது சிறுகதைகள், நாவல் எழுதுவதில்லை?

  • நீங்கள் ஏன் இப்போது சிறுகதைகள், நாவல் எழுதுவதில்லை?//

    நீண்ட பதில் கோரும் வினா. ஆயினும் சுருக்கமாக. காலம் அவற்றுக்குச் சாதகமாக இல்லை – தமிழைப் பொருத்த அளவில்.கதை வடிவத்தைத் தொலைக்காட்சி எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு பத்திரிகைகள் செய்திக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்கின்றன.நேரடி புத்தக முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை. ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்போ, நல்ல நாவலோ சில நூறு வாசகர்களைச் சென்று சேரவே வருடமாகிவிடுகிறது. இந்நிலைமை மாறக்கூடியதுதான். மாறவேண்டுமென்றுதான் எப்போதும் விரும்புகிறேன்.

    ஒரு புதிய மாற்றாக, இன்றைய தலைமுறை திரைப்பட இயக்குநர்கள் கதாசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிறுகதை-நாவல் எழுத இடமில்லாத குறையைத் திரைக்கதை எழுதித் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் கூடிவருகிறது. இவ்வாண்டு இறுதியில் நான் எழுதும் ஒரு திரைப்படம் வெளியாகும். அடுத்த ஆண்டு மேலும் சில.

  • ஐயா..

    முன்பு (கமெண்ட் பெட்டி திறக்கப்படுவடுவதற்கு முன்பு) தங்கள் பதிவுகள் மூன்று Columnகளில் – இடது பக்கம் Search,Contact ,நடுவில் பதிவு, வலது பக்கம் Recent Posts, Ads வரும்.

    இப்போது பதிவு நடுவில் வராமல், முதலாம் Columnக்கு கீழே வருகின்றதே..?

    தாங்கள் அவ்வாறு மாற்றி அமைத்துள்ளீர்களா அல்லது என் கணிப்பொறியில் தான் சிக்கலா?

    மூன்று Columnகளாக வந்தது நன்றாக இருந்தது, படிப்பதற்கு! இப்போது சற்று கஷ்டமாக!

  • திரு. வசந்தகுமார்:

    எனக்கு இப்படிப்பட்ட பிரச்னை ஏதும் தெரியவில்லை. ஒருவேளை மற்றவர்களுக்கு இருக்கிறதோ என்னவோ? கணேஷிடம் விசாரித்திருக்கிறேன். பிரச்னை என்றால் அவர் தீர்த்துவிடுவார்.

  • எனக்கும் அப்படித்தான் வருகிறது சரி செய்ய வேண்டுகிறேன்.

    அந்த எழுத்தாளருக்கு எனது அஞ்சலி.

  • இப்பொதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

    பின் கதை சுருக்கத்திலும் அவரின் One Day in the Life of Ivan Denisovich பற்றிப் படித்திருக்கிறேன்.

    நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் இது. வதை முகாமை இவ்வளவு துள்ளியமாக, நறுக்கென கேளி செய்யும் அற்புத படைப்பு.

    இதன் தமிழாக்கத்தை திண்ணையில் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை தமிழில் வந்துள்ளதா, தெரியவில்லை.

    பதிவுக்கு நன்றி!

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!