இறவான் மதிப்புரை

இறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்

“இறவான்” இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது.

சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் – “இறவான்” அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence நிச்சயம் நினைவுக்கு வந்தது. ஆனால் அது கூட – ஓவியத்தின் பாலுள்ள மிதமிஞ்சிய ஆர்வத்தால் தூய இயற்கை நிலைக்கு மீண்டு பிறகு மெல்ல மெல்ல அழியும் ஒரு ஓவியனின் கதை என்னும் அளவில் – “இறவானுக்கு”தொலைதூர சொந்தம் மட்டுமே. இந்த தனித்துவத்துக்காகவே இந்நாவலுக்கு என்றும் தமிழில் ஒரு இடம் இருக்கும்.

அடுத்து இந்த நாவலில் உள்ள ஒருவித விளையாட்டுத்தனம், பல சமயங்களில் வாசகனையும் ஏமாற்றி விடும் ஒரு குறும்புத்தனம். அது இதற்கு மதிப்புரை எழுதியவர்கள் இது ஒரு இசை மேதையின் கதை என சொல்வதில் இருந்து நாம் அறியலாம். ஆனால் இது பிளவாளுமை மனச்சிக்கல் (split personality disorder) கொண்ட ஒருவனின் கதை என முதல் சில அத்தியாயங்களில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. ஆனால் போகப் போக நாம் இந்த சிறுவனின், இளைஞனின் பிரமைகளை நம்பும்படி, அவன் பைத்தியமே இல்லை, நிஜமாகவே மேதைதான் என நினைக்கும்படி பா.ரா சாமர்த்தியமாக எழுதிச் செல்கிறார். மேதைமை என்பதை பிளவாளுமையாகக் காணும் இந்த சட்டகத்தை நான் ரசித்தேன். நாவலை இரண்டு விதமாக வாசிக்கும் ஒரு சாத்தியத்தை அவன் உண்டு பண்ணியிருக்கிறார்.

சிறுவனாக இருக்கும் அவன், எந்த இசைப்பயிற்சியும் இல்லாமலே, கிட்டத்தட்ட எல்லா வாத்தியங்களையும் அபாரமாக வாசிக்கிறான். இசை தன்னில் இருந்து பொங்கிப் பிரவாகிக்கிறது, அதைத் தான் கற்கத் தேவையில்லை என அவன் நினைக்கிறான். அடுத்து அவன் தன்னை அப்ரஹாம் ஹராரி எனும் பெயரிலான யூதன் என உணர்கிறான். இஸ்ரேலுக்குப் போய் வழிபட வேண்டும் எனக் கூறுகிறான். அவனது பெற்றோர்கள் பயந்து போகிறார்கள். அவர்கள் ஊரை மாற்றிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் அதுவும் அவனது மனப்பிசகை சரி பண்ணுவதில்லை. சென்னை நாட்களில் அவன் மேலும் இசை நோக்கி ஈர்க்கப்படுகிறான், பலரும் அவனது மேதைமையை ஆங்கீகரிக்கிறார்கள். பிற்பாதி நாவல் ஒரு “மேதையின் கிறுக்குத்தனங்களை” பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் வழி சித்தரிக்கிறது.

ஹராரி தற்கொலை செய்வதுடன் / உயிர்பிரிவதுடன் நாவல் ஒரு முடிவுக்கு வருகிறது. அப்போது அவன் தன்னை இருவேறு நபர்களாக துல்லியமாக அறிய வருவதை மற்றொரு மொழி விளையாட்டு வழி பா.ரா காட்டுகிறார் – சில வாசகர்கள் இந்த அத்தியாயத்தில் நிறைய இலக்கணப் பிழைகள் இருப்பதாக தவறாக நினைக்குமளவுக்கு தலைவர் விளையாடியிருக்கிறார். ஆனால் அவை பிழைகள் அல்ல, சுஜாதாவை நினைவுபடுத்தும் மொழிக் குறும்பு, அதன் மூலம் சுருக்கமாய் அழகாய் அவன் தன் மரணத்தை எப்படிப் பார்க்கிறான் எனக் காட்டுகிறார்.

ஒரு வாசகனாக என்னைப் பெரிதும் நெகிழ வைத்த இடங்கள் இந்நாவலில் உண்டு – பல கவித்துவமான உணர்வெழுச்சியான இடங்கள். குறிப்பாக இது: கேரளாவுக்கு அவன் தன் மனைவியுடன் செல்லும் ஒரு தேவாலையத்தை சுற்றிப் பார்க்கிறார்கள். அங்கு ஒரு சிலுவை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தர் இல்லை. இப்படி கர்த்தர் இல்லாத ஒரு தேவாலயமா என அவன் மனைவி வியக்கிறாள். அப்போது அவன் சென்று அந்த சிலுவையின் முன்னால் போய் தன்னை கர்த்தராக கைகளை அகல வைத்து நின்று கொள்கிறான். அற்புதமான இடம் அது. அந்த கட்டத்தில் அவன் ஒரு பிரசித்தமான இசை இயக்குநராக ஆகப் போகிறான். அவனது இசைக்கு நிறைய பணமும் பெயரும் கிடைக்கிறது. ஆனால் அது அவன் வாழ நினைக்கும் வாழ்க்கை அல்ல. அது அவன் அல்ல. அவனுக்கு அதில் இருந்து தப்பிச் செல்ல வேண்டும். இந்த மன உணர்வுகளை பா.ரா ரொம்ப சுருக்கமாய் இந்த சித்திரம் (சிலுவையில் அறையப்பட்ட கலைஞன்) மூலம் காட்டி விடுகிறார். சினிமாவில் தான் பொதுவாக இவ்வளவு காட்சிபூர்வமாய் கதை சொல்லுவார்கள்.

பா.ராவின் ஆராய்ச்சி, இசைஞானமும் பல இடங்களில் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

இந்த நாவலின் குறையையும் சொல்ல வேண்டும் – அப்ரஹாம் ஹராரியின் பிரச்சனை தன்னை அறிவது அல்லது இது தான் தான் என அறிந்த பின் அதை தனக்கே நிரூபிப்பது. அல்லது தன்னுடைய பிளவுண்ட மனத்தை தானாக வரித்து அதற்கு மேலும் பயணித்து ஒரு முழுமையை அடைவது. ஆனால் இந்த தேடலுடன் துவங்கும் நாவல் பிற்பாதியில் கடற்கரையில் பெற்றோரைத் தொலைத்து ஜாலியாக திரியும் குழந்தையைப் போல ஆகிறது. “அகத்துக்குள்” செல்லாமல் “புறத்திலேயே” நாவலை தக்க வைக்கிறார் பா.ரா. ஆழமாக பயணிக்க வேண்டிய இடங்களில் பா.ரா சற்றே பனிச்சறுக்கு சறுக்கி கடந்துபோய் விடுகிறார். மையப்பாத்திரம் யூதனாக விரும்பி, அங்கிருந்து இசையில் உச்சங்களைத் தொட்டு போதையில் ஜி.நாகராஜனைப் போல அலைந்து கடைசியில் ஒரு சிம்பனியை உண்டு பண்ண நினைத்து எங்கெங்கோ பயணித்து (நடுவில் ஒரு பெண்ணை காதலித்து மற்றொருத்து மணந்து கொண்டு அவளையும் ஒருநாள் கைவிட்டுப் போய்) கடைசியில் உயிர்விடுகிறான். எப்படி கடைசி வரை ஜெஸ்ஸி கார்த்திக்கு அல்வா கொடுக்கிறாளோ (VTV) அப்படியே பா.ராவும் நமக்கு அல்வா கொடுத்து விடுகிறார். என்ன ஜெஸ்ஸியைப் போன்றே இந்த அல்வாவும் சுவையாக இருக்கிறது என்பதால் மன்னித்து விடலாம்.

சுவைத்துப் பாருங்கள்!

நன்றி:  அபிலாஷ் | உயிர்மை

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி