நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள் கழித்து, என் புத்தகப் பிரதி இருந்தால் கொடுத்து உதவவும் என்று அதே நண்பர்களுக்கு வேண்டுகோளும் விடுப்பார்கள்.)
என் முதல் இரண்டு புத்தகங்கள் வெளிவந்தபோது எனக்குக் கிடைத்த பத்துப் பிரதிகளை யார் யாருக்குக் கொடுத்தேன் என்று நினைவில்லை. முதல் நூலின் ஒரு பிரதி இப்போது இருக்கிறது. இரண்டாவது புத்தகம் போன இடம் தெரியவில்லை. மறு பதிப்புக்கோ, கிண்டில் பதிப்புக்கோகூடக் கைவசம் பிரதி இல்லை. அதன் பிறகு ஏதோ ஒருநாள் என்னவோ ஒரு வேகத்தில் முடிவெடுத்தேன். யாருக்கும் இலவசமாகப் புத்தகங்களைத் தரக்கூடாது.
இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து வருவதன் விளைவு, வீட்டில் ஒரு பீரோ நிறைய ஆத்தர் காப்பிகளாக உள்ளன. வருடம் ஒருமுறை வெளியே எடுத்து தூசு தட்டி உள்ளே வைப்பேன். மீண்டும் அடுத்த வருடம் தூசு தட்ட வெளியே எடுப்பேன். அவ்வளவுதான். சில உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள் உள்ளார்ந்த ஆசையுடன் புத்தகம் கேட்டாலும் நிர்த்தாட்சண்யமாகத் தர மறுத்து, பதிப்பகத்தில் வாங்கிக்கொள்ளச் சொல்வதே வழக்கம். யாருக்காவது புத்தகம் அனுப்பியே ஆகவேண்டும் என்று எனக்கே தோன்றினாலும் பதிப்பகத்தில் சொல்லி, என் கணக்கில் அனுப்பச் சொல்வேனே தவிர, இந்தப் பிரதிகளில் இருந்து அனுப்புவதில்லை. அபூர்வமாக ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டுமே என் பிரதிகளில் இருந்து தந்திருக்கிறேன்.
எதற்கு இந்த முரட்டுத்தனம் என்று எப்போதாவது நினைப்பேன். உண்மையிலேயே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் விரும்பிக் கேட்டால் தரலாமே என்று எண்ணும்போதே இந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்றும் உடனே தோன்றும். புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் நண்பர்கள் தமது புத்தகத்தைத் தருகிறேன் என்றாலும் உடனே மறுத்து, நான் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். அப்படிப் பல சமயம் என் விருப்பப் பட்டியலில் இல்லாத நூல்களைக் காசு கொடுத்து வாங்கியதும் உண்டு. ஒரே காரணம், இலவசமாகத் தரக்கூடாது என்ற கொள்கைக்குள்ளேயே இலவசமாகப் பெறக்கூடாது என்கிற விதியும் உள்ளடங்கியதாக நினைப்பதுதான். (கிண்டில் இலவசங்கள் குறித்துப் பிறகொரு சமயம் எழுதுகிறேன்.)
இதையெல்லாம் இப்போது எண்ணிப் பார்க்க ஒரு காரணம் உள்ளது. இன்று ஒருவர் போன் செய்தார். கிண்டிலில் ‘இறவான்’ படித்துவிட்டு மிகவும் பாராட்டினார். அதை இசை மயமான ஒரு வெப் சீரிஸாகத் தயாரிக்க முடியும் என்று சொன்னார். பெரிய இடம். பெரிய நிறுவனம். கதைப் பிரிவு முக்கியஸ்தர்களுக்குத் தந்து படிக்கச் சொல்ல உடனே ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டார். அதற்கென்ன. கிழக்கு முகவரியும் பிரசன்னாவின் போன் நம்பரையும் கொடுத்து, வாங்கிக்கொள்ளச் சொன்னேன். லட்சக்கணக்கில் செலவு செய்து படமெடுக்கக்கூடியவர்களுக்கு ஒரு பிரதி வாங்குவதா கஷ்டம்? போன் செய்தால் மறுநாளே வந்து சேரும் என்றும் சொல்லிவைத்தேன்.
விதித்திருந்தால் எதுவும் நடக்கும். இல்லாவிட்டால் என்ன முட்டி மோதினாலும் ஒன்றும் இராது. வாழ்க்கை சிலவற்றைக் கற்றுத் தந்திருக்கிறது. அற்ப இச்சைகளுக்குக் கொள்கைகளைத் தின்னத் தரக்கூடாது என்பது அதிலொன்று.