work from home

குறித்து இப்போது நிறையப் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 2011 முதல் நான் அதைத்தான் செய்கிறேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் பழகிவிட்டால் பரம சுகம் இது. இதன் லாபங்களாவன:

1. வேளை தவறாமல், சூடு ஆறாமல், சுவையாகச் சாப்பிடலாம். டப்பா கட்டும் அவலம் இல்லை.

2. நினைத்த நேரத்தில் வேலை பார்க்கலாம். நினைத்த பொழுது படுத்துத் தூங்கலாம்.

3. ஆபீசர் மாதிரி பேண்ட் சட்டை அணிந்து நாளெல்லாம் விரைப்பாகவே இருக்க வேண்டிய துயரம் இல்லை.

4. ஆபீசில் இருந்து வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருந்து வேலை பார்த்தால் கவனம் கூடும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது சில ஒழுக்கங்கள் அவசியம். வேலைக்காக ஒதுக்கும் நேரத்தில் வேறெதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். நான் எழுதிக்கொண்டிருக்கும்போது போன் வந்தால் எடுக்க மாட்டேன். ஃபேஸ்புக் பார்க்க மாட்டேன். வீட்டுக்கு யாராவது வந்தாலும் காத்திருக்கச் சொல்லிவிட்டு, எழுதி முடித்த பிறகுதான் போய் வணக்கம் சொல்வேன். எழுதிக்கொண்டிருப்பதை முடித்த பிறகு பத்து நிமிடம் ஃபேஸ்புக். அழைத்தவர்களைத் திரும்ப அழைத்தல். ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு நாலு பக்கம். ப்ரைம், சன் நெக்ஸ்ட், ஹாட் ஸ்டார் எதிலாவது, ஏதாவது ஒரு நகைச்சுவைக் காட்சி. மீண்டும் வேலையில் இறங்கிவிட்டால் முடிக்கும்வரை ஒன்றுமில்லை.

காலை பத்து முதல் மதியம் ஒரு மணி வரை வேலை செய்வேன். இந்த மூன்று மணி நேரத்தில் முப்பது நிமிடங்கள் ஓய்வு. அதை மூன்றாகப் பிரித்துக்கொண்டு அனுபவிப்பேன். மதிய உணவுக்குப் பிறகு தூங்கிவிடுவேன். மீண்டும் மாலை ஆறு மணி முதல் அன்றைய வேலை முடியும்வரை (பன்னிரண்டு மணி வரை போகும். நாவல் எழுதும் நாள்களென்றால் அதிகாலை மூன்று, நான்கு வரை போகும்.)

இதில் எனக்கு நானே வகுத்துக்கொண்ட முக்கியமான விதி ஒன்றுண்டு. ஒருநாள் வேலையை மறு நாளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பதே அது. இரண்டு சீரியல்களிலும் இரண்டு யூனிட் ஷூட்டிங் போட்டாலும் நான்குக்கும் சேர்த்து எழுதி முடிக்காமல் படுத்ததில்லை. அம்மாதிரி நாள்களில் என் ஓய்வுப் பொழுது சிறிது குறையும். ஃபேஸ்புக் வர மாட்டேன். படம் பார்க்க மாட்டேன். ஒரு காட்சிக்கும் இன்னொன்றுக்கும் இடையில் ஏதாவது புத்தகம் மட்டும் படிப்பேன். சில பக்கங்கள்தாம். எனக்கு அது போதும்.

புருஷனாகப்பட்டவன் வீட்டோடு புருஷனாக இருந்துவிடுவது மனைவியானவருக்கு சிறிது சிரமத்தைக் கொடுக்கும். பல வீடுகளில் கொலைக் கொடூர சண்டைகள் வரும் என்று நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படி ஆவதில்லை. ஏனெனில் இந்த உலகில் தலைசிறந்த புருஷனும் அதி தலைசிறந்த தந்தையும் நானே ஆவேன். (இதனைப் படித்துவிட்டு என் அட்மினின் டெல்லி ஒற்றர் உடனே வாட்சப்பில் இதன் உண்மைத்தன்மை பற்றி விசாரித்துவிடுவார் என்பதையும் அறிவேன்.) அவர்களது சுதந்தரங்களில் நான் தலையிடுவதே இல்லை. பதிலுக்கு அவர்கள் என் வேலையில் தலையிட மாட்டார்கள்.

என்றைக்காவது டிஸ்கஷன், மீட்டிங் என்று அதிகாரிகளைச் சந்திக்கப் போகவேண்டி வரும்போதுதான் மனக் கழுதை எட்டி உதைக்கும். கூடியவரை அவற்றைத் தள்ளிப் போட உத்திகள் யோசிப்பேன். (பெரும்பாலும் வெற்றியடைவேன்) நவீன காலத்தில் நேரடி சந்திப்புகளுக்கு அவசியமே இல்லை என்பது என் கருத்து. போன் போதும். வாட்சப் போதும். மெசஞ்சர் போதும். என் நண்பர் குமரேசன் (கல்யாணப்பரிசு திரைக்கதை ஆசிரியர்) வாட்சப்பையே தனது அலுவலகம் போலப் பயன்படுத்துவார். நாங்கள் கதை விவாதம், காட்சி விவாதம் அனைத்தையும் அங்கேதான் நடத்துகிறோம். ஒன்லைனையே வாட்சப்பில் பேசி அனுப்பிவிடுவார். அதற்குமேல் நேரில் போய்ப் பார்த்தே தீரவேண்டும் என்பதற்கு அவரோ நானோ உலக அழகியல்ல.

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, வேலை செய்யும் இடத்தை வேலைக்கான மூட் உருவாக்கும்படியாகச் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நடிகைகள் படம் எதிரே இருந்தால் நன்றாக வேலை செய்ய முடியும் என்றால் மனைவியிடம் அனுமதி பெற்று வைத்துக்கொள்ளுங்கள். தவறே இல்லை. என் மகள் பாட்டு கேட்டுக்கொண்டேதான் படிப்பாள். அப்படிப் படித்தால்தான் கவனம் சிதறாமல் இருக்கிறது என்கிறாள். அதற்காகவே ஒரு ப்ளூ டூத் ஹெட்போன் வாங்கிக் கொடுத்தேன். இதெல்லாம் கெட்ட பழக்கம் என்று சொல்லித் தடுப்பது தவறு. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பழக்கம். எனக்கு யோசிக்கும்போது சேஷாத்ரி சுவாமிகள் படத்தைப் பார்க்க வேண்டும். எழுதும்போது ராமானுஜர், ஷீர்டி பாபா படங்கள். முடித்துவிட்டு ஓய்வெடுக்கும்போது கோரக்கர் படம். என் மேசையில் எப்போதும் இந்த நான்கு பேரும் எனக்காக இருப்பார்கள்.

அதே போல எனக்கு உணர்வெழுச்சி தரக்கூடிய சில புத்தகங்களை எப்போதும் கண்ணில் படும்படியாக வைத்துக்கொள்வேன். எடுத்துப் படிக்க வேண்டும் என்பதல்ல. கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாலே போதும். என் கீ போர்ட், ஐபோனில் உள்ள பியானோ ஆப் இரண்டும் எனக்கு மிகப்பெரிய ஸ்டிரெஸ் பர்ஸ்டர்கள். எதையாவது நான்கு வரி வாசித்து மூடிவிடுவேன். ஆனால் அது தரும் மனக்கிளர்ச்சி அடுத்த ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். ஆபீசில் இந்த சௌகரியங்கள் கிடைக்காது. எப்போதாவது சிஎஸ்கேவுக்கு மெசஞ்சரில் ஏதேனும் யூட்யூப் லிங்க் அனுப்புவேன். ஐயோ ஆபீஸில் இருக்கிறேன், இப்போது கேட்க முடியாது என்பார். எவ்வளவு அவலம்!

வீட்டில் இருப்பது ஒரு ராஜ வாழ்க்கை. இந்த சொகுசுக்கு நிகரே சொல்ல முடியாது. இந்தக் கட்டாய வீட்டிலிருந்து வேலை செய்தாக வேண்டிய தினங்களில் அதை முழுதாக அனுபவியுங்கள்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!