50

ஒவ்வொரு நாளும் வாழ்ந்து, உறங்கி, எழுவதையே ஒரு சாதனையாக எண்ண வைத்திருக்கும் காலத்தில் வயது ஏறுவதெல்லாம் ஒரு பெருமையா. ஆனால் ஐம்பதைத் தொடும்போது சிறிது நிறுத்தி மூச்சு விட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்கலாம்; தவறில்லை. இவ்வளவு நீண்ட வருடங்களில் இதுவரை என்ன செய்ய முடிந்திருக்கிறது?

எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் அடிக்கடித் தோன்றும். நான் அதுநாள் வரை ஆட்டத்துக்கு வராததால்தான் யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவையல்ல. உண்மையிலேயே அப்படித்தான் நினைத்திருக்கிறேன். அறியாமையின் அழகிய புனிதம். அது கலைந்தபோது நடந்த உளக் கலவரம் இன்னும் நினைவிருக்கிறது. அதில் நான் தப்பிப் பிழைத்தது ஆச்சரியம். இப்போது உண்மையைச் சொல்கிறேன். நான் எழுத நினைத்ததை, எழுத விரும்பிய விதத்தை என்னால் அன்று எட்டித் தொட முடியவில்லை. எண்ணத்தில் இருந்த வடிவமும் தொனியும் எழுத்தில் வரவில்லை. மொழியின் போதாமை. அனுபவங்களின் போதாமை. வாசிப்பின் போதாமை. இரவு பகலாகப் பல மாதங்கள், வருடங்கள் இடைவிடாமல் உட்கார்ந்து எழுதி எழுதிப் பார்த்தும் திருப்தி வரவில்லை. என் தோல்வியை நானே அறிவித்துக்கொண்ட துயரம் நிகரற்றது. அன்று நான் உணர்ந்த அவமானத்தில், யாரையாவது அல்லது எல்லோரையும் மிகப் பெரிய அளவில் தோற்கடித்துவிட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்காகத்தான் சுமார் பத்தாண்டுக் காலம் புனைவெழுத்தில் இருந்து விலகி, அரசியல் எழுத ஆரம்பித்தேன். முன்னதாக, மொழியின் மீது மேற்கொண்டிருந்த இடைவிடாத பயிற்சி மற்றும் பரிசோதனைகளால் என்னால் என்ன விதமாகவும் எழுத முடியும் என்று தோன்றியது. அரசியல் எழுதவென்றே நான் உருவாக்கிய எள்ளலும் திருகலும் புயல் வேகமும் கொண்ட மொழி, நான் எண்ணிய வண்ணம் வேலை செய்தது. ‘அண்டார்டிகா தவிர உலகின் வேறு எந்த மூலைக்குச் சென்று இறங்கினாலும் என்னை அறிந்த ஒரு வாசகராவது அங்கே வரவேற்க இருப்பார்’ என்று அகம்பாவத்துடன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். அது உண்மையும்கூட.

ஆனால் அந்தப் பத்தாண்டுகளோடு சரி. மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய எது ஒன்றும் – புகழே ஆனாலும் சரி – நீண்ட நாள் மகிழ்ச்சியளிக்காது. இன்றும் பாராட்டுகிறார்கள். டாலர் தேசம் போல ஒரு அரசியல் வரலாறு கிடையாது. நிலமெல்லாம் ரத்தத்துக்கு நிகராக இன்னொரு மத்தியக் கிழக்கு அரசியல் புத்தகம் கிடையாது. அப்படியா? மகிழ்ச்சி என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறேன். இன்னும் ஒன்று சொல்லலாம். தமிழ்நாட்டில் புத்தக ராயல்டியால் மட்டுமே கார் வாங்கிய ஒரே எழுத்தாளன் நாந்தான். அந்தளவுக்கு அந்தப் புத்தகங்கள் வருமானமும் தந்தன. கிழக்கு நண்பர்களுக்கு இது தெரியும். ஆனாலும் போதும் என்றுதான் நினைத்தேன்.

இதனை எப்படிப் புரியவைப்பேன்? உழைப்புக்குக் கிடைக்கும் பாராட்டு வேறு. கலையை நாடும் மனம் விரும்புவது வேறு. இரண்டும் தொடர்பற்றவை. எதிரெதிர் எல்லைகள்.

*

ஆனால், பொருளாதார ரீதியில் நான் கவலையற்று இருக்கும்போதுதான் நான் விரும்பியதைச் செய்ய முடியும் என்று தோன்றியது. அன்றே, பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, வருமானத்துக்குத் தொலைக்காட்சித் தொடர் என்று முடிவெடுத்தேன். சினிமா என்று சிந்திக்காததுதான் என் வெற்றி. வீடு, கார், ஒன்றுக்கு இரண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர், ஐபோன், கடனற்ற வாழ்க்கை, பகையற்ற பிழைப்பு.

பத்தாண்டுகளுக்கு முன்னர் விட்ட இடத்தில் இருந்து இப்போது மீண்டும் தொடங்கினேன். உண்மையிலேயே பூனைக்கதை என் மறு பிறப்பு. நான் தோல்வியுற்றுப் போகிறவன் அல்லன் என்று எனக்கே நிரூபித்த நாவல். அது அளித்த நம்பிக்கையில்தான் யதியை, இறவானை எழுதி முடித்தேன். இப்போதும் நான் சீரியல் எழுதுவது குறித்துப் பொது வெளியில் வருத்தப்படும் வாசகர்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். முரகாமிக்கும் பாமுக்குக்கும் விற்பது போலத் தமிழ் எழுத்தாளனுக்குப் புத்தகம் விற்கும்போதுதான் அவன் நாவல் மட்டும் எழுதி வாழ முடியும். இது புரியாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்போருக்குப் பொதுவாக நான் பதில் சொல்வதில்லை. சீரியல் எழுதுகிற வேறு எத்தனைப் பேர் இப்படித் தொடர்ந்து நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் என்றாவது யோசிப்பார்கள்.

எழுத்தில் எனக்கு உள்ள சவால் ஒன்றுதான். எனக்கு நான் எழுதுவது பிடிக்கவேண்டும்.

எழுதும்போது ஒருவனாகவும் எழுதியதை வாசிக்கும்போது இன்னொருவனாகவும்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். இது ஒரு கொடூரமான அனுபவம். இன்னொருவர் நான் எழுதியதைப் படிப்பதற்கு முன்னால் நானே நிராகரித்து அழித்துவிட்டு இரவெல்லாம் அழுவேன். இதனால்தான் எனக்குப் பிடித்து, வெளியிட்டுவிட்ட பிறகு யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் இருக்க முடிகிறது.

*

இவ்வளவு நாள் வாழ்ந்ததில் இன்னும் நிறைய படித்திருக்கலாம். படிப்பின் போதாமை குறித்த குற்ற உணர்ச்சி இருக்கிறது. தமிழிலேயே அசோகமித்திரன், சுந்தர ராமசாமி இருவரை மட்டும்தான் முழுக்கப் படித்திருக்கிறேன். மாமல்லன் சொல்லி பஷீரைப் படிக்கத் தொடங்கி தமிழில் வந்திருக்கும் அவருடைய அனைத்தையும் படித்தேன். வேறு யாரையும் முழுதாக வாசித்ததில்லை. காந்தி, அம்பேத்கர் எழுத்துகளை முழுவதும் படிக்கவேண்டும் என்று ஆரம்பித்து இரண்டுமே பாதியில் நிற்கிறது. திரு அருட்பா, திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்களில் ஓரளவு நிறையவே படித்திருக்கிறேன். அல் புகாரி (4 பாகங்கள் மட்டும்), முஸ்லிம், திர்மிதி மூன்றையும் பயின்றிருக்கிறேன். யோசித்தால் இன்னும் சில நினைவுக்கு வரலாம். ஆனால் போதாது என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கிறது. எழுதும் யாவருக்கும் அடிப்படையில் ஒரு திமிர் இருக்கும். அதில் பெரும் பகுதியை வாசிப்பே அளிக்கிறது.

*

இதில் ஒரு சிக்கல் உள்ளது. வேறு எந்தப் பணியில் நீங்கள் இருந்தாலும் குடும்பத்துக்கான நேரம், உங்களுக்கான பிரத்தியேக நேரம் என்று சிறிது அமைந்துவிடும். எழுதுவதிலும் படிப்பதிலும் மட்டும் இருப்பவர்களுக்கு அது சிரமம். ஒரு நாளின் அனைத்து மணித் துளிகளிலும் நான் வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் நான் வீட்டில் இருப்பதாக என் மனைவியோ மகளோ உணர்ந்ததில்லை. நேற்று இரவு நான் வீட்டில்தான் இருந்தேன். என் மனைவியும் மகளும் வெளியே கிளம்பிச் சென்று, கேக் ஆர்டர் செய்து வாங்கி வந்திருக்கிறார்கள். டொமினோஸில் சொல்லி எனக்குப் பிடித்த கார்லிக் ப்ரெட் வரவழைத்திருக்கிறார்கள். (நேற்று நட்சத்திரப் பிறந்த நாள்.) இதை அவர்கள் மறைத்தெல்லாம் செய்யவில்லை. என் விஷயத்தில் அதற்கு அவர்களுக்கு அவசியமே இருப்பதில்லை. கண்ணெதிரே நடந்தாலும் எதையும் கவனிக்காத கயவனாகத்தான் இவ்வளவு காலமும் இருந்து வந்திருக்கிறேன். எப்படி சகித்துக்கொள்கிறார்கள் என்று நினைக்க முடிகிறதே தவிர, எப்படி என்னை மாற்றிக்கொள்வது என்று தெரிவதில்லை.

மகனாக, கணவனாக, தந்தையாக, உறவினனாக, நண்பனாக யாரிடமும் எப்போதும் சரியாக நடந்துகொண்டதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் என் இயலாமையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் ஒரு நேர்மை உள்ளது. அதை விழிப்புணர்வுடன் எப்போதும் கவனிக்கிறேன். பத்து காசுக்குப் பிரயோஜனமில்லாத நேர்மை என்றாலும் அதுவும் முக்கியமே அல்லவா?

யோசித்துப் பார்த்தால் என் குடும்பத்தினரிடம் காட்டிய அக்கறையைவிட என்னிடம் பணியாற்றியவர்கள் / பயின்றவர்களிடம் அதிக நேரம் – அதிக அக்கறை செலுத்தியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. அது ஒரு திருப்திதான். அவர்கள் ஜெயிக்கும்போது அந்தத் திருப்தி முழுமை பெறும்.

*

மீண்டும் ஒரு நாவலுக்குள் தீவிரமாக இறங்கியிருக்கிறேன். ஏற்கெனவே ஆரம்பித்து சுமார் முன்னூறு பக்கங்களுக்கு மேல் எழுதி, ஏதோ இடிப்பதாகத் தோன்றி, கணப்பொழுதில் டெலீட் செய்துவிட்டுத் திரும்ப ஆரம்பித்திருக்கும் நாவல். அழித்து எழுதும் ஆட்டத்தில் என்னை அடித்துக்கொள்ள இங்கே ஆள் கிடையாது. வாழ்க்கை சலிக்காமல் கலைத்துப் போட்டுத்தானே விளையாடிக்கொண்டிருக்கிறது? அந்த ஆட்டத்தை ரசிக்கப் பழகியவனும் அப்படித்தான் இருப்பான்.

*

இன்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!