அருகே இருத்தல்

ஏதோ ஒரு பொது நிகழ்ச்சி. ஒரு ரசிகை யானியிடம் கேட்கிறார். நீங்கள் வாசிக்கும்போது உங்கள் அருகே நான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு பாடலையாவது அப்படி ரசிக்க வேண்டும். உங்களைத் தொடமாட்டேன். தொந்தரவு செய்ய மாட்டேன். வேண்டியதெல்லாம் அருகே அமர ஒரு வாய்ப்பு.

யானி முதலில் திகைத்து விடுகிறார். பிறகு வெட்கப்படுகிறார். சிறிது சங்கடமாகிறார். அவர் அடுத்து வாசிக்கவிருக்கும் நாஸ்டால்ஜியா என்னும் பாடலின் ஸ்வரக்கட்டு முழு பியானோவின் நீளத்துக்கும் குறுக்கும் நெடுக்கும் போய்வரக்கூடியது. கை இடிக்கும். கஷ்டமாக இருக்குமே என்கிறார். அந்தப் பெண் விடுவதில்லை. தன்னால் நிச்சயமாகத் தொந்தரவு இருக்காது என்று சொல்கிறார். வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் பதற்றம் இருக்கிறது. எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்கிறார். வாசிக்கத் தொடங்குகிறார்.

அந்த விடியோவை நீங்கள் யுட்யூபில் பார்க்கலாம். எப்போதும் வாசிக்கும்போது அவர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியோ, பரவச உணர்வோ, லயிப்போ சற்றும் இருக்கவில்லை. ஒரு பதற்றம் மட்டும். அச்சம் மட்டும். மெல்லிய கலவர உணர்வு மட்டும். வாசித்து முடிக்கும்போதுதான் மூச்சு விடுகிறார். எத்தனை பெரிய இடர்.

யானிக்குத்தான் என்றில்லை. எல்லா கலைஞர்களுக்கும் இது இருக்கும். ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது தோளுக்குப் பின்னால் யாராவது வந்து நின்றால் செயல்தான் முதலில் சாகும். நீங்கள் உங்கள் சொத்தை எழுதி வைத்தாலும் நான் எழுதும்போது என் அருகே நீங்கள் இருக்கச் சம்மதிக்க மாட்டேன். எதிரே இருக்கலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் அருகே முடியாது. விரல் அசையக்கூட செய்யாது. இதெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது; எதனால் இம்மனத்தடைகள் வருகின்றன என்று தெரியவில்லை.

ஆனால், எனக்கு இரண்டு எழுத்தாளர்கள் அவர்கள் எழுதும்போது அருகே அமர்ந்து பார்க்க அனுமதி அளித்திருக்கிறார்கள். இரா. முருகனும் ம.வே. சிவகுமாரும். என் வாழ்நாள் முழுவதும் அதற்காக நான் அவர்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன். ஏனெனில், அது ஓர் அனுபவம். தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும் வேறு யாருக்கும் கிடைக்காது. அருகே ஓர் அன்னியன் இருந்தாலும் என் பணி கெடாது என்ற உள உறுதி உள்ளவர்கள் மட்டுமே இதற்கு அனுமதிப்பார்கள்.

இரா. முருகன் அப்போது தி. நகர் மோதிலால் தெருவில் குடியிருந்தார். விடுமுறை நாள்களில் அவரைப் பார்க்கச் செல்வேன். அப்போதெல்லாம் முருகனுக்கு எழுதுவதற்கு மேசையே தேவையில்லை. தொப்பையின்மீதே பேடை வைத்து எழுதிக்கொண்டிருப்பார். நான் அருகே அமர்ந்து அவர் எழுதுவதை ஆர்வமுடன் கவனிப்பேன். எந்தச் சொல்லுக்கு அடுத்து எது வந்து விழுகிறது என்பதிலேயே என் ஆர்வம் இருக்கும். என் கணிப்புக்கு மாறாக வரும் ஒவ்வொரு சொல்லையும் எடுத்து வைத்துக்கொள்வேன். நானாக எடுத்துக்கொண்டது அது. அவர் கொடுத்தனுப்பியது அந்தத் தொப்பை. இன்றும் வைத்திருக்கிறேன். ஆனால் அவரிடம் இப்போது அது இல்லை.

இன்னொருவர் ம.வே. சிவகுமார். குறைந்தது ஆறேழு சிறுகதைகளையாவது அவர் எழுதும்போது மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். சிவகுமார் எழுதும்போது சாமி வந்தவர் போலவே இருப்பார். பதற்றம் அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரியும். பார்வை ஓரிடத்தில் நிற்காமல் அலைபாய்ந்தபடி இருக்கும். ஒரு சிகரெட் முடியும் முன்பே இன்னொன்றைப் பற்ற வைத்துக்கொள்வார். எழுதிய வரி சரியில்லை என்றால் குறுக்கே அடிக்க மாட்டார். அப்படியே அந்தத் தாளைக் கீழே போட்டுவிட்டு இன்னொரு புதிய தாளை உருவி மீண்டும் எழுதத் தொடங்குவார். தாளைக் கசக்கக்கூடாது என்பதை அவரிடம் இருந்து கற்றேன். சிவகுமார் எழுதும்போது அவர் அறையெங்கும் பாரதிராஜா படத்தில் கைக்குட்டைகள் பறப்பது போலத் தாள்கள் பறக்கும். அவர் எழுதிய ஏதோ ஒரு வரி அல்லது ஒரு சொல் அல்லது ஒரு பத்தி எனக்குப் பிடித்துப் போய் அப்போதே பாராட்டிவிட்டால் அப்படியே எழுதுவதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது பேசுவார். மீண்டும் அவர் எழுதும் மனநிலைக்குச் செல்லக் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது ஆகும். ஆனால் பொதுவாக வேறு ஏதாவது பேசினால் அது அவரை பாதிக்காது. பதில் சொன்னபடியே எழுதுவார்.

இன்றைக்கு யானியின் அந்த வீடியோ தற்செயலாகக் கண்ணில் பட்டபோது முருகனையும் சிவகுமாரையும்தான் நினைத்துக்கொண்டேன். வணங்கக் கிடைக்கும் தருணங்களைத் தவறவிடக்கூடாது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter