நாவல் எழுதச் சில குறிப்புகள்

முன் எப்போதோ எழுதி வைத்த குறிப்புகள். என் மதிப்புக்குரிய எழுத்தாளர்கள் நேரில் சொன்னவை அல்லது கடிதம் மூலம் எனக்கு எழுதியவை. இன்று புதிதாக எழுத வரும் யாருக்காவது உதவலாம் என்பதால் வெளியிடுகிறேன். இதில் எதுவும் என் கருத்தல்ல. அனைத்துமே எனக்கு அளிக்கப்பட்டவை.

1. சுட்டிக்காட்டப் புதிதாக ஒரு வாழ்க்கை உன் வசம் இருந்தாலொழிய நாவல் எழுத எண்ணாதே. நாவல் என்பது கதை அல்ல.

2. அத்தியாயம் என்றல்ல; அடுத்த வரியைக் கூடத் திட்டமிடாதே. தன்னைத்தானே வழி நடத்திப் போகும் படைப்புதான் காலத்தில் நிலைக்கும். அப்படித் தானாகப் பொங்கி வராத ஒன்றை இழுத்துப் பறித்து வந்து தாளில் இறக்க நினைக்காதிருப்பது நல்லது.

3. ஒரு நாவலில் எத்தனைக கோணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை பார்வைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை நூறு பாத்திரங்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆதாரப் பிரச்னை, அதன் மீதான வினாக்கள் சிதறி திசை மாறாமல் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

4. ஒரு நாவலை உயிர்ப்புடன் வைத்திருப்பது, அதில் எழுப்பப்படும் கேள்விகளே. வலுவான கேள்விகளை எழுப்பிக்கொண்டு, அவற்றுக்கான விடைகளைத் தேடுவதே நாவலாசிரியனின் பயணம் என்பதாகும். விடை கிடைத்தாக வேண்டுமென்கிற அவசியமில்லை. ஆனால் விடைகளை நோக்கிய நேர்மையான பயணம் முக்கியம்.

5. நாவலில் ஒரு காட்சியில் வரும் பாத்திரம் கூட ஒழுங்காக சித்திரிக்கப்படவேண்டுமென்பது முக்கியம். பாத்திரச் சித்திரிப்பு என்பது பாத்திர வரு
ணனை அல்ல.

6. ஆறு அத்தியாயங்களுக்கு ஒரு முறையேனும் உரையாடல்கள் சற்று அதிகம் வருவது போன்ற அத்தியாயம் ஒன்று அமைவது நல்லது. சிறுகதையின் முழு இறுக்கம் இதில் தேவையில்லை.

7. இயல்பான வாழ்வின் நகைச்சுவை அம்சங்களை கவனித்துப் பதிவு செய்யத் தவறக்கூடாது. நகைச்சுவைக்குக் கிடைக்கும் எந்த ஒரு சாத்தியத்தை இழந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

8. ஒரே மூச்சில் உட்கார்ந்து எழுதி முடிப்பது சிறிய நாவல்களுக்குச் சரி. பெரிய படைப்பென்றால் அம்முறை வேண்டாம். ஒரு நாளில் குறிப்பிட்ட
நேரத்தில் விடாமல் எழுதுவதென்பது நல்லது. குறிப்பிட்ட நேரம் தவிர, குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட மேசை, குறிப்பிட்ட பேனா போன்றவையும் நாவலின் தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகளே.

9. விட்டு விட்டு எழுதும்போது மொழி மாறிவிடும் அபாயம் உள்ளது. இதற்கான உபாயம், ஒவ்வொரு முறை எழுதத்தொடங்கும் போதும் முந்தைய
அத்தியாயத்திலிருந்து தொடங்கி மீண்டும் எழுதுவதேயாகும். இதன் மூலம் ஒவ்வொரு அத்தியாயத்துக்குமே இரண்டு versions கிடைத்துவிடும். எழுதி முடித்ததும் இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

10. முக்கியமான அத்தியாயங்களைக் குறைந்தது ஐந்து விதமாகவாவது எழுதவேண்டும். நன்றாக வந்துவிட்டதாகத் தோன்றினாலும் மீண்டும் மீண்டும் எழுதவும். இறுதிப் பிரதி தயாரிக்கும்போது சரியான பிரதி எது என்று தானாக நமக்கே தோன்றிவிடும். ருஷ்டி தனத நாவலின் இறுதி அத்தியாயம் ஒன்றை இருபது விதமாக எழுதி வைத்தார் என்பதை நினைவில் கொள்ளவும்.

11. எழுத ஆரம்பிக்குமுன் மகத்தான நாவல்கள் இரண்டையாவது மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது. அந்நாவல் ஏன் மகத்தானதாக நமக்குத் தோன்றுகிறது என்பதற்கான காரணத்தைப் பிடித்துவிட்டால் போதும்.

12. எத்தனை புத்திசாலித்தனமாக எழுதினாலும் ஆதார மனித உணர்ச்சிகளைப் புறக்கணிக்கும் படைப்பு காலத்தின்முன் நிற்காது. உணர்வுத் தளத்தில் உறவு கொள்ளக்கூடிய படைப்பே நிலைத்து நிற்கும். முற்றிலும் அறிவுத்தளத்தில் இயங்கும் படைப்பு, வெளியாகும் காலத்தில் பேசப்படலாமேயொழிய நம் காலத்துக்குப் பிறகு நில்லாது.

13. பெண் பாத்திரங்களைச் செயல்களின் மூலமும், ஆண் பாத்திரங்களைப் பேச்சின் மூலமும்தான் இதுவரை வந்த சிறந்த நாவல்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இது ஏன் என்பதை யோசி.

14. நாவல் எழுதும்போது நடுவில் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதாதே. இலக்கியக் கூட்டங்களுக்குப் போகாதே. இலக்கிய விவாதங்களில் ஈடுபடாதே. மௌனமாக இரு. அளவோடு உண்டு, நேரத்துக்கு உறங்கு. மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவும். அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்துவிட்டுப் பத்து நிமிடம் அமைதியாக உட்கார். அல்லது சிறிது தூரம் நடக்கலாம். செய்தித்தாள், தொலைக்காட்சி படிக்காதே / பார்க்காதே.

15. எழுதி முடித்தால் உனக்கே உனக்கு அளித்துக்கொள்ள நீயே ஒரு பரிசைத் தேர்ந்தெடு. அதை வாங்கி மேசையின்மீது வைத்துவிடு. ஆனால் தொடாதே. எழுதி முடித்தால் மட்டுமே எடுத்துப் பார்.

பின்குறிப்பு: மேற்சொன்ன குறிப்புகளில் சில இன்றைக்கு எனக்கு உடன்பாடில்லாதவை. இதை நான் எழுதி வைத்தது 1998ம் ஆண்டு.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!