எழுபதில் ஒன்று

சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று சொல்லியிருப்பாள். யுத்தத்தில் நூறு புத்திரர்களும் கொல்லப்பட்ட பிறகு மொத்தமாகத்தான் அழுதிருப்பாள் என்றாலும் ஒவ்வொருவரைக் குறித்தும் ஒரு நிமிடமாவது தனித்தனியே நினைத்துப் பாராதிருந்திருக்க மாட்டாள். அந்த நூறு பேரின் மரணத்தைக் காட்டிலும் துர்சலையின் கணவன் ஜெயத்ரதனின் மரணம் அவளை இன்னும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும். பொறுக்கி என்றாலும் மாப்பிள்ளை அல்லவா.

இன்று, இதுவரை அச்சில் வெளியான என்னுடைய புத்தகங்களை எடுத்து எண்ணிப் பார்த்தேன். எழுபது என்பது என் மனத்தில் இருந்த கணக்கு. ஆனால் கைக்குக் கிடைத்தது அறுபத்து நான்கு மட்டும். எந்த ஆறின் பிரதிகள் இல்லை என்று கண்டு தெளிய மிகவும் திணறிப் போனேன். நூறு பிள்ளைகளைப் பெற்றவள் என்றைக்காவது இப்படித் திணறியிருப்பாளா. வரிசையில் உட்கார வைத்து சாப்பாடு போடும்போது தலை எண்ணாதிருந்திருப்பாளா? ஒருவன் உண்ண வரவில்லை என்றால் யார் என்று அடுத்தவனிடமா கேட்பாள்? அவளுக்கே அது தெரிந்திருக்காதா. அப்படித் தெரியாமல் கேட்டிருந்தால் அன்றிரவு அவள் உறங்கியிருக்க முடியுமா?

காந்தாரி சரியாகத்தான் இருந்திருப்பாள். எனக்குத்தான் மறதி. எப்படியோ முட்டி மோதி, பிரதி இல்லாத ஐந்து நூல்களை யோசித்துக் கண்டுபிடித்துவிட்டேன். அதில் மூன்று கணினியில் எழுதத் தொடங்குவதற்கு முந்தைய காலக்கட்டத்துப் புத்தகங்கள். மீதம் இரண்டில் ஒன்றின் பிரதிகளை யார் யாருக்கோ, எந்தெந்தத் தருணத்திலோ அளித்தே தீர்த்துவிட்டிருக்கிறேன். இன்னொன்று, அச்சானதில் இருந்து எனக்குப் பிரதியே வரவேயில்லை என்பதையே இன்றுதான் கண்டேன். இது உங்களுக்குப் புரியாது. டிசம்பரில் எழுதி முடித்திருப்பேன். ஜனவரி புத்தகக் காட்சியில் புத்தகம் வெளியாகியிருக்கும். கண்காட்சி முடிந்த பிறகு பிரதிகள் வீட்டுக்கு வரும் என்று எண்ணி விட்டிருப்பேன். அச்சான பிரதிகள் அனைத்தும் கண்காட்சியிலேயே தீர்ந்திருக்கும். பிறகு இரு தரப்புக்கும் அது அப்படியே மறந்திருக்கும்.

எப்படி ஆனாலும் 69க்குக் கணக்கு கிடைத்துவிட்டது. இன்னும் ஆட்டம் காட்டுவது ஒன்றுதான். ஒரு பிரதியும் இல்லாத, கணினியிலும் இல்லாத, நினைவிலும் இல்லாத அந்த ஒரு புத்தகத்தை எங்கே போய்த் தேடுவேன்?

இந்த அறுபத்தொன்பது நீங்கலாக மின் நூல்களாக மட்டும் வெளியானவற்றையெல்லாமும் தொகுத்திருக்கிறேன். அவை  இங்கே சேகரமாகியிருக்கின்றன. எல்லாம் இருந்தும், எது எதுவோ இருந்தும் என்ன பயன்? எல்லா புத்தகத்தையும் போல அந்த ஒரு புத்தகத்துக்கும் என் கணிசமான நேரத்தை அளித்திருப்பேன். அதை எழுதிக்கொண்டிருந்த நாள்களில் அதை மட்டுமே நினைத்திருந்திருப்பேன். அதனோடு மட்டுமே வாழ்ந்திருப்பேன். அது வெளியானபோது அவ்வளவு மகிழ்ச்சி, அவ்வளவு பரவசம், அவ்வளவு இறும்பூது எய்தியிருப்பேன். ஆனாலும் எப்படியோ இன்று நினைவில் இருந்து உதிர்ந்திருக்கிறது.

சரி. இதுவும் ஓர் அனுபவம். எழுதியவன் நினைவில் இல்லாவிட்டால் என்ன. உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு வாசகனாவது வாசித்து, விரும்பாதிருந்திருக்க மாட்டான். அவன் நினைவில் அது நிச்சயமாக சேகரமாகியிருக்கும். என்றாவது அவன் என்னைத் தொடர்புகொள்வான். அந்தப் புத்தகத்தைக் குறித்து நான்கு சொற்கள் நல்லவிதமாகப் பேசுவான். அன்று என் அச்சான எழுபதில் அடையாளமின்றித் தொலைந்த ஒன்றை மீட்டுத் தந்து என் நினைவில் வாழ்வான்.

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி