மறக்க முடியாத ஒரு புத்தகம்

நினைவு சரியென்றால் 1989லிருந்து சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஓராண்டு கூடத் தவறியதில்லை. அதற்கு முன்பும் சென்றிருப்பேன். அப்பாவோடு. அல்லது வேறு யாராவது அழைத்துச் சென்றிருந்தால் உடன் சென்றிருப்பேன். அது என் கடமை, என் தேவை, என் மகிழ்ச்சி, எனக்காக நான் செய்துகொள்வது என்று எண்ணிச் செய்யத் தொடங்கியது 1989லிருந்துதான். அன்று அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடக்கும். தொலைவில் இருந்து பார்த்தால், கண்காட்சி வளாகம் ஒரு பெரிய ரங்க ராட்டினத்தைப் படுக்கப் போட்டாற்போல இருக்கும். 100-150 கடைகள் இருந்தால் அதிகம். ஒரே வட்டம். சுற்றி வந்தால் முடிந்தது. டெல்லி அப்பளக் கடைகளைப் பார்த்த நினைவில்லை. ஆனால் அரிசிப் பொரி கிடைக்கும். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் கிடைக்கும். நல்ல சுக்கு காப்பி கிடைக்கும். அதற்கு மேலும் கிடைத்திருக்கலாம். நான் உண்டதில்லை. அன்றைய எனது பொருளாதார நிலைமை இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளச் சொல்லும்.

புதிய பார்வையில் (பாவை சந்திரன் ஆசிரியராக இருந்த பத்திரிகை.) கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற தொடர் அந்த வருடம் புத்தகமாக வெளிவந்திருந்தது. தொடராக அது வந்துகொண்டிருந்தபோது ஒரு சில அத்தியாயங்களைப் படித்திருந்தேன். மொத்தமாக எப்போது படிப்போம் என்று ஏங்க வைக்கும் அளவுக்குச் சிறந்த தொடர். புத்தகக் காட்சியில் அதைக் கண்டபோது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாய்ந்து எடுத்து அவசர அவசரமாகப் புரட்டினேன். சில வினாடிகளில் என் ஆர்வம் வடிந்துவிட்டது. அது அன்று நான் வாங்கக்கூடிய விலையில் இல்லை. எனவே நின்ற வாக்கில் முன்னுரையை மட்டும் படித்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.

அடுத்த சில ஆண்டுகள் வரை என்னால் அந்தப் புத்தகத்தை வாங்க முடியவில்லை. இத்தனைக்கும் வாலியை நான் அறிவேன். பத்திரிகையாளனாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சௌகரியத்தில், போனில் பலமுறை பேசியிருக்கிறேன். (வாலி பேட்டிதான் தரமாட்டார். ஆனால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போனில் பேசுவார். நம்மைப் பிடித்துவிட்டால் நேரில் அழைத்தும் மணிக் கணக்கில் பேசுவார்.) எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும் என்று சொன்னால் கையெழுத்துப் போட்டுத் தயாராக வைத்துக்கொண்டு அழைப்பார். அவ்வளவுகூட வேண்டாம். பாவை என்னை நன்கறிந்தவர். நலம் விரும்பியும்கூட. எனக்கு அந்தப் புத்தகம் வேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ஒரு மணி நேரத்தில் யாரிடமாவது கொடுத்தனுப்பிவிடுவார். ஆனாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. என் வாழ்வோடு, என் முன்னேற்றத்தோடு, என் விருப்பங்களோடு நேரடித் தொடர்புடையது என்று நான் நம்பும் எதையும் – குறிப்பாகப் புத்தகங்களை – இலவசமாகப் பெறக்கூடாது என்றொரு எண்ணம்.

கல்கியில் என் வேலை உறுதியாகி, ஒரு சம்பள உயர்வும் வந்து கையில் கொஞ்சம் பணம் புழங்கத் தொடங்கிய வருடம்தான் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ புத்தகத்தை வாங்கினேன். முதல் பதிப்பின் விலையைக் காட்டிலும் அப்போது சிறிது அதிகம்தான். அதனால் என்ன? எனக்கு இரண்டே கொள்கைகள்தாம். 1. காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். 2. வாங்கித்தான் படிக்க வேண்டும். எனவே விலை ஒரு பொருட்டே அல்ல.

அதன் பிறகு என்னிடம் இருந்த அந்த நூலின் பிரதியை யாரோ எடுத்துச் சென்று, அது யார் என்று மறந்துவிட்டதால், திரும்ப வாங்கினேன். அதுவும் காணாமல் போய் இப்போது இருப்பது மூன்றாவது பிரதி. ஒவ்வொரு புத்தகக் காட்சி மாதத்திலும் எனக்கு வாலியின் அந்தப் புத்தகம் நினைவுக்கு வரும். என் வாழ்வில் அது ஒரு குறியீடு. ஒரு நூற்றைம்பது ரூபாய், இருநூறு ரூபாய்க்குக் கூட வக்கற்று இருந்தேனா என்பதல்ல. மாதச் செலவுகளில் மொத்தமாக இருநூறை ஒரு புத்தகத்துக்கு ஒதுக்கும் அளவுக்கு அன்று என் பொருளாதார நிலைமை இல்லை என்பதுதான் உண்மை. அதை நான் என்றுமே மறந்ததில்லை. இன்றுவரை ஒவ்வொரு புத்தகம் வாங்கும்போதும் அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை நினைத்துக்கொள்கிறேன். சில வருடங்கள் இருபதாயிரம், இருபத்தையாயிரம் ரூபாய்க்குக் கூடப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன் என்பது வருமான வரிக் கணக்கு பைசல் செய்வதற்காக ஆண்டுக்கொரு முறை ஆடிட்டரிடம் போகும்போது தெரியவரும். அப்போதும் வாலியின் புத்தகம் நினைவுக்கு வரும்.

இந்த வருடம் புத்தகக் காட்சி இல்லாமல் ஒரு பொங்கல் கடந்து போகிறது. நான் புத்தகம் வாங்காத ஜனவரி அநேகமாக இது ஒன்றாகத்தான் இருக்கும். புத்தகம் வாங்காத இம்மாதத்தை, ஒரு புத்தகம் வாங்க முடியாமல் தவித்த ஜனவரிகளுடன் சேர்த்து நினைத்துக்கொள்கிறேன்.

எல்லாம் கடந்து போகும். இதுவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி