பின் அட்டைக் காவியங்கள்

ஓர் எழுத்தாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஆக மோசமான இரண்டு பணிகள் நாவலுக்குச் சுருக்கம் எழுதுவதும் புத்தகங்களுக்குப் பின்னட்டை வரிகள் எழுதுவதும்தான்.

ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஏஜென்சிகள் இருக்கின்றன. பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை அங்கே எழுத்தாளர்கள் செய்ய அவசியப்படாது. நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தவர்கள் அல்லவா? இது நம் பணி. நாமேதான் செய்தாக வேண்டும். ஏஜென்சிக்கு சம்பளம் கொடுத்து விற்பனை வரிகளை உருவாக்கும் அளவுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் வளம் பெறவில்லை. அப்படி ஏஜென்சி நியமித்து மார்க்கெடிங் மெட்டீரியல்களை உருவாக்கும் அமேசான் போன்ற பெருநிறுவனங்களின் விளம்பரத் தமிழ் எவ்வளவு கூகுள்த்தனமாக இருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். வேறு வழியில்லை. நாமேதான் இதையும் எழுதியாக வேண்டும்.

என் புத்தகங்களுக்கான பின்னட்டை விவகாரங்களை எப்போதும் யோசிக்காமல் மருதன் மற்றும் பிரசன்னாவிடம் ஒப்படைத்துவிடுவதே என் வழக்கம். எத்தனையோ நூற்றுக் கணக்கான புத்தகங்களுக்கு நான் எழுதியிருக்கிறேன். ஆனால், என் புத்தகங்களுக்கு என் சிறந்த அனுகூல சத்ருக்களான இவர்கள் இருவரும்தான் எழுதுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு பிரசன்னாவின் முதல் வரி, மருதனின் இரண்டாவது வரி, பிரசன்னாவின் மூன்றாவது வரி, மருதனின் நான்காவது வரி என்று எடுத்துத் தொகுத்துப் போட்டால் அழகான பின்னட்டை வாசகம் கிடைத்துவிடும். பட்டி டிங்கரிங் பணிக்கே அவசியம் இராது. அவர்கள் படித்துவிட்டுத்தான் எழுதுவார்களா, ஆழ்நிலை தியானத்தில் அனைத்தையும் உணர்ந்து எழுதுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சரியாக இருக்கும். மொழி நடை உள்பட துல்லியமாக உட்காரும். அது ஒரு கலை. அவர்கள் இருவரும் அதில் பெருங் கலைஞர்கள்.

சமீபத்தில் ஒரு நிறுவனம் என்னிடம் ஒரு நாவல் எழுதக் கேட்டது. ஒப்புக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒருநாள் விளம்பரத் தேவைக்காக ஒரு சிறிய கதைச் சுருக்கம் வேண்டும் என்றார்கள். எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. ஒரு நாவலுக்கு எப்படிக் கதைச் சுருக்கம் எழுதுவது? ‘கதையே இல்லாமல் எப்படி நீ இவ்வளவு கதைகள் எழுதுகிறாய்?’ என்று என் மனைவி அடிக்கடிக் கேட்பார். அதனை நினைத்துக்கொண்டேன். இந்த நாவலின் தேவையற்ற பகுதி என்று தலைப்பிட்டு, இங்கே அங்கே பீறாய்ந்து ஒரு கதைச் சுருக்கத்தை எழுதி அனுப்புவதற்குள் நாக்குத் தள்ளிவிட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு சங்கதி இருக்கிறது. நான் எழுதிய அந்த உலக மகா கதைச் சுருக்கத்தை நான் என்ன எழுதினாலும் அனுப்பி, கருத்துக் கேட்கும் என் நண்பன் ராஜேஷுக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். உடனே, ‘திராபை’ என்று சொன்னான். பிறகு அத்தியாயங்களை எழுத ஆரம்பித்ததும் வரிசையாக அனுப்பத் தொடங்கினேன். ‘இது பிரமாதமாக இருக்கிறது; ஆனால் நீ அனுப்பிய சுருக்கத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டான்.

இதனால்தான் எனக்கு சுருக்க அலர்ஜி என்று சொன்னேன்.

விடுங்கள். விஷயத்துக்கு வருகிறேன். என்னுடைய அனைத்துப் புத்தகங்களையும் விரைவில் புதிய மறு பதிப்பாகக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். பல பதிப்புகளாகத் தொடர்ந்து இருந்து வரும் பின்னட்டை வரிகளை மாற்ற நினைக்கிறேன். இந்தப் பொறுப்பை வாசக வைடூரியங்களிடமே ஒப்படைத்தால் என்ன என்று தோன்றுகிறது. யதிக்கு முன்னுரை எழுத வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்கள் இந்தச் சிறு உதவியைச் செய்ய மாட்டீர்களா?

bukpet.com தளத்தில் என் அனைத்துப் புத்தகங்களையும் நீங்கள் பார்வையிடலாம். நீங்கள் ரசித்து வாசித்த என்னுடைய புத்தகங்களின் புதிய பதிப்புக்குப் பொருத்தமான பின் அட்டை வரிகளை நீங்களே எழுதலாம். அத்தளத்திலேயே ஒவ்வொரு புத்தகத்துக்குமான அறிமுகக் குறிப்பு இருக்கும். அதனை உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆனால் பின்னட்டை வரிகள் என்பது கட்டுரையல்ல. அதை கவனத்தில் கொள்ள வேண்டும். நூலைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தைத் தந்து, புதிய வாசகர்களைச் சுண்டி இழுப்பது ஒன்றே அதன் பணி. ஒவ்வொரு பின்னட்டையிலும் அதிக பட்சம் 100 சொற்கள் வரலாம். அதற்கு மேல் கூடாது. இந்த நூறு சொற்களும் மூன்று முதல் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது இலக்கணம்.

ஒருவர் எவ்வளவு புத்தகங்களுக்கு வேண்டுமானாலும் பின்னட்டை வாசகங்களை எழுதலாம். எப்படியானாலும் தேர்வாகப் போவது ஒன்றுதான். அப்படித் தேர்வாகி, புத்தகத்தின் பின் அட்டையில் இடம் பெறும் வாசகங்களை எழுதும் வாசகர்களுக்கு, என்னுடைய நூல்களில் ஒன்று – அவர்கள் விரும்பும் எதுவானாலும் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் பின்னட்டை வாசகம் எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பே வேண்டுமென்றாலும் அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் பின் அட்டைக் காவியங்களை writerpara@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி