ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கக்கூடிய ஆகப் பெரிய ஆசை என்று எதைக் கருதுவீர்கள்? பெயர், புகழ், பிரபலம், ஊருக்கு நூறு ரசிகர்கள், வீதிக்கொரு சிநேகிதி, விழா எடுக்க ஒரு கூட்டம், போஸ்டரில் போட்டோ, ஏமாற்றாத ராயல்டி, அவ்வப்போது ஒரு விருது – இதில் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தான் ஒரு எழுத்தாளர் மட்டுமே என்று உணரும் யாரானாலும் அவன் அல்லது அவள் மனத்தில் எப்போதும் ஈரப்பதம் குறையாதிருக்கும் ஒரே பெரிய இச்சை, தனது புத்தகம் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.
தமிழ்ச் சூழல் இன்று இதற்குச் சாதகமாக இல்லை. ஒரு புத்தகக் காட்சி வந்தால் ஐம்பது பிரதிகள் அச்சடித்து வைத்துவிட்டு, அதில் மீதமாவதை அடுத்தப் புத்தகக் காட்சிக்கு எடுத்துச் சென்று, அங்கும் மீந்தால் இன்னொன்றில் வைத்துத் தள்ளுபடி விலையில் விற்று முடித்துக் கடையைக் கட்டிவிடுவது பழகிவிட்டது. மீண்டும் அச்சிட்டு வைக்கத் தயக்கமாக இருக்கிறது. தமிழர்கள் எத்தனைக் கோடி இருந்தாலும் தமிழ் பதிப்புலகம் தெருக்கோடியில் இன்று உள்ளது. என்ன, முன்பெல்லாம் ஆயிரம், ஐந்நூறு பிரதிகள் அச்சடித்துவிட்டுக் கவலைப்படுவார்கள். இப்போது ஐம்பது நூறுக்கே கவலை வந்துவிடுகிறது. யாரைக் குறை சொல்ல? இது சூழல் செய்யும் ஊழல்.
பதிப்புலக நிலைமை குறித்து ஓரளவு அறிவேன் என்பதால் என்னால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஓர் எழுத்தாளனாக ஒவ்வொரு முறையும் ‘இந்தப் புத்தகம் ஏன் கிடைப்பதில்லை?’ என்று யாராவது கேட்கும்போது சோர்ந்துவிடுகிறேன். கொரோனா கட்டாய வீட்டிருப்புக் காலத்தில் என்னிடம் மிக அதிகம் கேட்கப்பட்ட புத்தகம், ‘ஓம் ஷின்ரிக்கியோ’. கிடைக்குமா? எங்கே கிடைக்கும்?
அது வரிக்கு வரி சிரிக்க வைக்கும் புத்தகம்; அதுவும் ஒரு தீவிரவாத இயக்கத்தினைக் குறித்த புத்தகம் என்று யாரோ ஒருவர் மதிப்புரை எழுதிவிட்டுப் போனதன் விளைவு. இரண்டாவது, யானியைக் குறித்த புத்தகம். அதற்கு நானே ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு மறு அறிமுகக் குறிப்பு காரணம்.
கேட்ட ஒவ்வொருவருக்கும் கிண்டிலைக் கைகாட்டியதுதான் என்னால் செய்ய முடிந்தது. ஆனால் என் அறிவுக்கு எட்டிய வரையில் தமிழ் வாசக சமூகத்தில் சுமார் பத்து முதல் பதினைந்து சதவீதம் பேர்தான் மனத்தடை இன்றி கிண்டிலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இருபதாண்டுகளுக்கு முன்னர் கம்ப்யூட்டரில் எழுதுவது தொடர்பாக எழுத்தாளர்களுக்கு இருந்த அதே மனத்தடை இன்று கிண்டிலில் வாசிப்பது சார்ந்து வாசகர்களுக்கு இருக்கிறது. இது மாறும். ஆனால் இன்னும் வருடங்களாகும். அதுவரை எல்லா புத்தகங்களும் அச்சில் இருப்பதுதான் ஒரே வழி. எல்லாம் அச்சில் இருக்க வேண்டுமென்றால் எல்லாம் விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதிய வாசகர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சமூகம் என்ன பேஸ்ட், சோப் வாங்குவது போலவா புத்தகம் வாங்குகிறது? திரும்பவும் அதேதான். சூழல் செய்யும் ஊழல்.
‘இருந்துவிட்டுப் போகட்டும்; உங்களுடையது இனி ஜீரோ டிகிரியில் எப்போது கேட்டாலும் கிடைக்கும்; நான் பொறுப்பு’ என்று ராம்ஜி சொன்னார்.
‘எப்போது கேட்டாலுமா?’
‘ஆம். நிச்சயமாக.’
எனவே என் அன்பான வாசக வைடூரியங்களே, இனி என் புத்தகங்களின் புதிய பதிப்புகள் வெளியாகும்போது தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் அவரைத் தட்டி எழுப்பிப் புத்தகம் கேட்கவும். அதிகாலை 3-4 மணிக்கும் போன் செய்து கேட்கவும். ஞாயிறு, புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் நாள்களிலும் கேட்கவும். ஏண்டா சொன்னோம் என்று அவரைக் கதற வைக்க வேண்டிய பொறுப்பை அன்புடன் உங்களுக்கு அளிக்கிறேன்.
முதல் கட்டமாக இப்போது எட்டு நூல்களுக்கு முன் பதிவுச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இப்போதே ஆர்டர் செய்தால் இருபது சதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். புத்தகக் காட்சியில் வாங்குவதென்றால் பத்து சதத் தள்ளுபடி.
24ம் தேதி புத்தகக் காட்சி தொடங்குகிறது. 25 அன்று ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் வெளியீட்டை நிகழ்த்தலாம் என்று நினைக்கிறேன். என் அன்புக்குரிய வாசகர்கள் பத்துப் பேர் இணைந்து புத்தகத்தை வெளியிடப் போகிறீர்கள். என் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஒருவர் முதல் பிரதி பெறுவார். விவரங்கள், விரைவில்.
குறிப்பு: 20 சதத் தள்ளுபடி விலையில் முன்பதிவு செய்வதற்கான சுட்டிகள் கீழே உள்ளன.
யதி
இறவான்
அலகிலா விளையாட்டு
பூனைக்கதை
டாலர் தேசம்
நிலமெல்லாம் ரத்தம்
ஆயில் ரேகை
ஹிட்லர்