படித்தவன்

இன்று புத்தக தினம். நான் படித்த லட்சணத்தைச் சற்று நினைவுகூர்ந்து பார்த்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் பாடப் புத்தகங்களை அவ்வளவாக விரும்பியதில்லை. வரலாறு, புவியியல் பிடிக்கும். ஆங்கிலத்தில் நான் – டீடெய்ல் புத்தகம் பிடிக்கும். தமிழ் பிடிக்காதா என்றால் பள்ளிக்கூடத் தமிழ்ப் புத்தகங்கள் அன்று எனக்குக் கொள்ளிவாய்ப் பிசாசுகளாகத்தான் தெரிந்தன. அது என்னால் விரும்ப முடியாத தமிழாக இருந்தது. கேளம்பாக்கம் அரசினர் பள்ளியில் ஒரு மிகச் சிறிய நூலகம் இருந்தது. குளியலறை அளவுக்கேயான நூலகம். அங்கே சில நூறு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தப்பித்தவறி உள்ளே போனால் கம்பன் காட்சி, கவியும் புவியும், அறிவு அற்றம் காக்கும் கருவி என்று அந்த வயதுக்கு ஒவ்வாதவையாகவே பெரும்பாலும் இருக்கும். பெருமைக்காக அங்கிருந்து ஒன்றிரண்டு நூல்களை எடுத்துச் செல்வேனே தவிர படித்த நினைவில்லை. நான் முறையாகப் படித்த முதல் புத்தகம் எம்.ஆர். காப்மேயர் என்பவர் எழுதிய ‘நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?’. எட்டாம் வகுப்பில் இருந்தபோது அதைப் படித்தேன். படித்தது பெரிதல்ல. அந்தப் புத்தகம் எனக்கு மிகுந்த மன எழுச்சியைத் தந்தது. இனி உலகத்தை வென்றுவிடுவது ஒன்றுதான் மிச்சம்.

அதன் பிறகு உதயமூர்த்தி, மெர்வின் போன்றோர் தமிழிலேயே எழுதிய அந்த ரகப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். எப்படியும் ஐம்பது புத்தகங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அந்த டெம்ப்ளேட் அலுத்துவிட்டது. பிறகு ஆவேசமாகக் கதைகள் படிக்கத் தொடங்கினேன். வீட்டுக்குக் குமுதம் வரும். வைரமுத்து அதில் வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்றொரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தார். 96 படத்துக்கெல்லாம் அதுதான் முன்னோடி. வகுப்பு இடைவேளையில் தண்ணீர் குடிக்க ஆண்கள் வரிசை, பெண்கள் வரிசை முன்னேறி வந்துகொண்டிருக்கும். கதாநாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் பார்த்தபடியே ஒவ்வோர் அடியாக எடுத்து வைப்பார்கள். ஒவ்வோர் அடிக்கும் வைரமுத்து ஒரு பத்தி வருணிப்பார். இறுதியில் இருவரும் தண்ணீர் டிரம்மை நெருங்கும்போது ‘நீ முதலில் குடி, நீ முதலில் குடி’ என்று மாற்றி மாற்றி விட்டுக் கொடுப்பார்கள். மணி அடித்துவிடும். இருவருமே தண்ணீர் குடிக்காமல் வகுப்புக்கு ஓடி விடுவார்கள். படித்துவிட்டு அரை மணி நேரம் என்னை மறந்து கண்ணீர் சிந்துவேன். எதற்காக என்று இன்று நினைவில்லை.

அந்த விதத்தில் வைரமுத்துவைவிட அன்று என்னை அதிகம் பாதித்தவர் கண்ணதாசன். கண்ணதாசனின் உரைநடை படிக்கப் படிக்க ஜிவ்வென்றிருக்கும். நிறுத்தவே முடியாது. அநேகமாக அவருடைய அனைத்து நாவல்களையும் வாசித்திருக்கிறேன். வாழ்க்கை வரலாறுதான் என்றாலும் வனவாசத்தையும் என்னால் நாவலாகத்தான் அன்று பார்க்க முடிந்தது. கண்ணதாசன், வைரமுத்துவையெல்லாம் கவிஞர்களாக நான் தெரிந்துகொண்டது பிற்பாடுதான்.

பத்தாம் வகுப்பில் இருந்தபோது மாத நாவல்கள் பக்கம் கவனம் திரும்பியது. உலகில் எங்கு பார்த்தாலும் ராஜேஷ்குமார் இருந்தார். லெண்டிங் லைப்ரரி உறுப்பினராகி தினமொரு புத்தகம் படித்தேன். எ நாவல் டைம் என்றொரு புத்தகம் வரும். பட்டுக்கோட்டை பிரபாகர் அதில் ஒரு நகைச்சுவைக் கதை எழுதியிருந்தார் (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்). நான் படித்த முதல் நகைச்சுவை நாவல் அதுதான். அன்று அதற்கு அப்படிச் சிரித்திருக்கிறேன். பார்க்கிறவர்களிடமெல்லாம் அதைச் சொல்லிப் படிக்கச் சொன்னது நினைவிருக்கிறது. அன்று முதல் பிரபாகரின் ரசிகனாகி, அவரை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். என் அப்பா, சுஜாதாவைப் படித்துப் பார் என்று சொன்னார். நைலான் கயிறு படித்தேன். பிடிக்கவில்லை. கரையெல்லாம் செண்பகப்பூ படித்தேன். அதுவும் பிடிக்கவில்லை. அன்றைய மனநிலையில் பட்டுக்கோட்டைதான் தமிழின் உன்னதமான ஒரே எழுத்தாளர் எனக்கு.

இப்போது எண்ணிப் பார்த்தால் சிறிது வியப்பாக இருக்கிறது. அதுவரை நான் சரித்திர நாவல் எதையுமே படித்திருக்கவில்லை. ஆனால் முதல் முதலில் எழுதிப் பார்க்கத் தொடங்கியது ஒரு சரித்திர நாவலைத்தான். ஸ்ரீராமஜெயம் எழுதி அடிக்கோடிட்டு, இருள் வேந்தன் என்று தலைப்பிட்டு ஒரு சரித்திரக் கதையை எழுத ஆரம்பித்தேன். முப்பது பக்கம் போயிருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பின் தொடரத் தெரியவில்லை. சேர சோழ பாண்டியர் யாரையும் அப்போது சரியாகத் தெரியாது என்பதுதான் காரணம்.

மிகுந்த மனச் சோர்வில் இருந்த அந்நாள்களில் பத்தாம் வகுப்புத் தேர்வும் எழுத வேண்டியிருந்தது. தேர்வுகளை அறவே வெறுத்தேன். படிக்கிற பையன்களை அதைவிட வெறுத்தேன். தேர்வுகளற்ற ஒரு பேருலகை அடைந்துவிட மாட்டோமா என்று மிகவும் ஏங்கினேன். ஒரு வழியாக அந்தக் கண்டத்தைக் கடந்ததும் அப்பாவிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிச் சென்று லெண்டிங் லைப்ரரி சந்தாவைப் புதுப்பித்தேன். அந்த விடுமுறை நாள்களில்தான் சரியாக வாசிக்கத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். அப்போதுதான் எனக்கு ஜானகிராமன் கிடைத்தார். ராமாமிருதம் கிடைத்தார். அசோகமித்திரனும் சுராவும் கிடைத்தார்கள். ராமாமிருதத்தைப் படித்துவிட்டு மொழி போதை உச்சத்துக்கு ஏறிவிட்டது. நான் முன்னர் எழுதி நிறுத்திய ‘இருள் வேந்தன்’ சரித்திர நாவலை முற்றிலும் புதிய மொழியில் திரும்ப எழுதிப் பார்த்தேன். அது முன்பு எழுதியதைவிட மோசமாகிவிட்டது போலத் தோன்றியது. கையோடு பொன்னியின் செல்வனைப் படித்தது பெரும் பிழை. அதன் கட்டுமானம் திகைப்படையச் செய்துவிட்டது. நாவலுக்கான உழைப்பெல்லாம் எளிதல்ல என்பது புரிந்தது. அப்படியே நாவல் எழுதினாலும் சரித்திர நாவல் பக்கம் திரும்புவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு இருள் வேந்தனைக் கிழித்துப் போட்டேன்.

எண்ணிப் பார்த்தால் இருபது வயதுக்கு முன்னால் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று தோன்றுகிறது. அதன்பின் இன்றுவரை வாசித்தவற்றைக் காட்டிலும் அதிகம். எல்லா தரப்பு எழுத்துகளையும் படித்தேன். நூற்றுக் கணக்கான ரஷ்ய மொழிபெயர்ப்புகளை அப்போது வாசித்துத் தீர்த்திருக்கிறேன். வெகுஜன எழுத்து, சிற்றிதழ் எழுத்து என்ற பேதமே கிடையாது. எதையும் படிப்பேன். அபிப்பிராயமே சொல்ல மாட்டேன். படித்துக்கொண்டே இருப்பேன். அவ்வளவுதான். ர.சு. நல்லபெருமாள் என்றொரு எழுத்தாளர். அவரது தரத்துக்கு இன்னும் பெரிய அளவு பேசப்பட்டிருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை என்று தெரியவில்லை. அவ்வளவு நன்றாக எழுதுவார். இன்றைக்கும் அவருடைய கல்லுக்குள் ஈரத்தை எடுத்துப் படித்தால், என்னால் படிக்க முடிகிறது. என் அளவுகோல் அதுதான். ஓர் இடைவெளிக்குப் பிறகு திரும்பப் படிக்கும்போதும் அது எனக்குப் பிடிக்க வேண்டும். புதிதாக எதையாவது தரவேண்டும். அதுதான் சரியான எழுத்து. மற்றவை இறந்தவை. அதே போலத்தான் ஆர். சூடாமணி. விட்டல் ராவ். நவீன இலக்கியத்தில் இவர்களுக்கெல்லாம் பெரிய இடமில்லை என்பார்கள். எனக்கென்ன அதைப் பற்றி? என் மனத்தில் என்றும் இருப்பார்கள்.

ஒரு சமயம் அட்டை இல்லாத ஒரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. ஆசிரியர் பெயரைக்கூட நான் பார்க்கவில்லை. நாவலைப் படித்து முடித்த மறுநாளே ஆ. மாதவன் யார் என்று விசாரித்துக்கொண்டு திருவனந்தபுரத்துக்கு பஸ் ஏறிவிட்டேன். கிருஷ்ணப் பருந்து உண்டாக்கிய தாக்கம் அப்படிப்பட்டது. பின்னாள்களில் அசோகமித்திரன் அறிமுகமாகி, பழக்கமாகி, நெருக்கமான பின்பு அவரிடம் இதைச் சொன்னேன். ‘ஓடின பாத்தியா? அதுதான். அப்படி ஒன்ன ஓட வெக்கறதுதான் நல்ல எழுத்து’ என்று சொன்னார்.

இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஐம்பது பக்கங்களாவது படிக்காத நாள் கிடையாது. ஆனால் அன்று கிடைத்த மன எழுச்சியோ, ஆவேசமோ, பரவசமோ இன்று வருவதில்லை. மிகவும் ரசிப்பனவற்றை மட்டும் குறித்து வைத்துக்கொள்கிறேன். கிண்டிலில் படிக்கும்போது அது ஒரு வசதி. ஹைலைட் செய்துவிட முடிகிறது. எனக்கெல்லாம் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாள்களும் புத்தக தினம்தான். தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கைதான். இது ஒன்றுதான் இறுதி வரை அலுக்காது என்று நினைக்கிறேன்.

குறைந்தபட்சம் எனக்கு.

Share