ஒரு சமர்ப்பணப் பிரச்னை

ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார்.

சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன் தொடர்ச்சியாக அபுனைவு நூல்கள் எழுதிக்கொண்டிருந்தபோதும் இந்த சமர்ப்பண விவகாரத்தை மௌனமாக கவனித்துக்கொண்டிருப்பேன். அவனும் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதியவன். அவற்றில் பல விற்பனையில் மிகப்பெரிய வெற்றி கண்டவை. ஒவ்வொரு புத்தகத்தையும் யாருக்காவது சமர்ப்பணம் செய்திருப்பான். அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். உறவினர்களாக, ஆசிரியர்களாக, மதிப்புக்குரியவர்களாக – யாராக வேண்டுமானாலும் இருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு சமர்ப்பணதாரி நிச்சயம்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நூற்றுக் கணக்கான மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர்களுள் நினைவில் தங்குபவர்களும் நன்றியுடன் நினைவுகூரத் தக்கவர்களும் பெரும்பாலும் சொற்பமே. ஓர் எழுத்தாளர் தனது புத்தகத்தை ஒருவருக்கு சமர்ப்பணம் செய்வது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய செயல். உயிர்த்துளியின் ஒரு சொட்டுக்கு உரிமையாளர் ஆக்குவது போன்றது அது. அவசரத்துக்கு அஞ்சு பத்து கைமாத்து கொடுத்து உதவியவர்களுக்கெல்லாம் புத்தகத்தை சமர்ப்பணம் செய்துவிட முடியாது. இதனால்தான், நூற்றுக் கணக்கான புத்தகங்களையும் சமர்ப்பணம் செய்ய ஓர் எழுத்தாளருக்கு யாராவது இருந்துகொண்டே இருப்பது எனக்கு வியப்பைத் தருகிறது. எழுதுவது தவிரவும் அவர் எவ்வளவு பேருடன் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறார்! அவ்வளவும் அர்த்தமுள்ள தொடர்புகள்.

எண்ணிப் பார்த்தால் சிறிது ஏக்கமாகத்தான் இருக்கிறது. என் வாழ்வில் இதுவரை நான் தொடர்பில் இருந்த நபர்களின் மொத்த எண்ணிக்கையே நூற்றைம்பது, இருநூறுக்குள் அடங்கிவிடும் என்று நினைக்கிறேன். அவர்களுள் நன்றியுடன் நினைவுகூரத் தக்கவர்கள் என முப்பது நாப்பது பேரைச் சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் கணத்தில் தன்னியல்பான உணர்வெழுச்சி உண்டாகி, இவருக்கு இந்நூல் சமர்ப்பணம் என்று எழுதியது அதிகம் போனால் பதினைந்து முறை இருக்கும். என்னுடைய பல புத்தகங்களில் சமர்ப்பணமே இருக்காது. அது ஒன்றும் சடங்கல்லதான். இருப்பினும் மற்ற எழுத்தாளர்களின் சமர்ப்பணங்களைக் காணும்போது நான் மட்டும் ஏன் எப்போதும் தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலே நின்றுகொண்டிருக்கிறேன் என்று தோன்றிவிடுகிறது.

நெடுநாள் பழகியவர்கள், பூர்வ ஜென்ம பந்தம் உள்ளவர்களுக்குத்தான் புத்தகங்களை சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்பதில்லை. கணப் பொழுது நெகிழ்ச்சிக்குக் காரணமாக ஒருவர் இருந்துவிட்டால் போதும். அந்த ஒரு கணத்தை நிரந்தரப்படுத்திவிட முடியும்.

https://amzn.to/30sdmvU

ஒரு சம்பவம் சொல்கிறேன்.

எந்தப் பாதுகாப்புணர்வும் இல்லாமல் மனத்தில் தோன்றுவதை அப்படியே நாம் யாருடன் பேச முடியுமோ அவர்களை நண்பர்கள் என்று வரையறை செய்துகொள்கிறேன். அந்த விதத்தில் கடைசியாக எனக்கு நண்பர் ஆனவர் சரவண கார்த்திகேயன். பல வருடங்களாக அவரைத் தெரியும் என்றாலும் சில வருடங்களாகத்தான் நண்பர். இறவான் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் – பெரும்பாலும் நள்ளிரவுப் பொழுதுகளில்தான் எழுதுவேன் – எனக்காக விழித்திருந்து அன்றைக்கு எழுதியதை உடனே படித்து, கருத்து சொல்லுவார். விமரிசனம் செய்வார். வேகத்தில் எங்காவது எழுத்துப் பிழை ஏற்பட்டிருந்தால் சுட்டிக் காட்டுவார். முந்தைய, அடுத்த அத்தியாயங்களின் தொடர்ச்சியை ஒப்பு நோக்கி, முக்கியமானவற்றை கவனப்படுத்துவார்.

மற்ற நாவல்களின்போது எனக்கு அப்படி ஒரு துணை தேவைப்பட்டதில்லை. இறவான் இதுவரை நான் எழுதியவற்றிலேயே மிகவும் சிக்கலான நாவல். ஒரே கதை, ஒரே கதா நாயகன், ஆனால் இருவேறு மொழி நடையைக் கொண்டது அது. அதிலும் ஆப்ரஹாம் ஹராரியாகக் கதைசொல்லி பேசும் அத்தியாயங்களின் மொழி, இசைக்கு மிக நெருக்கமாக வந்துவிடும். பல இடங்களில் சொற்களை அழித்து வெறும் இசையால் நிரப்பும் பேய்த்தனமான முயற்சியை அதில் மேற்கொண்டேன்.

மொழி சார்ந்த அந்த என் கவனம் கதை ஓட்டத்தில் பிரச்னை உண்டாக்கிவிடக்கூடாது என்பதால் எழுத எழுத உடனுக்குடன் படித்துவிட்டுப் பேச ஒருவர் தேவைப்பட்டார். நான் கேட்டதும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டு, என் நேர ஒழுங்கீனங்களுக்கு ஈடுகொடுத்து அந்நாவல் முடியும் வரை என் பக்கத்திலேயே இருந்தவர் சரவண கார்த்திகேயன்.

அந்த அன்புக்கும் உதவிக்கும் என்னால் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?

சென்ற ஜனவரியில் என்னுடைய பதினைந்து புத்தகங்களின் மறு பதிப்புகள் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தபோது, அதில் ஒரு புத்தகத்தை இறுதி செய்துகொண்டிருந்த கணத்தில் இது நினைவுக்கு வந்து, உடனே ‘சமர்ப்பணம் – சரவண கார்த்திகேயனுக்கு’ என்று எழுதிக் கொடுத்துவிட்டேன்.

பிறகொரு சமயம் அவருடன் பேசும்போது, என்ன புத்தகம் என்று சொல்லாமல், இந்தத் தகவலையும் அவருக்குச் சொன்னேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவ்வளவுதான். ஏழு மாதங்களாகிவிட்டன. இன்னும் அவருக்கு அந்தப் புத்தகத்தை அனுப்பவில்லை. என்ன புத்தகம் என்று சொல்லியிருந்தால் அவரேகூட வாங்கிப் பார்த்திருப்பார். அதையும் சொல்லவில்லை.

இன்று ஜெயமோகனின் புதிய புத்தகம் ‘கதாநாயகி’யின் சமர்ப்பண விவரத்தைப் படித்தபோது இது நினைவுக்கு வந்துவிட்டது. ஜீரோ டிகிரியில் ஒரு வார்த்தை சொன்னால் அவர்களேகூட அவருக்குப் புத்தகத்தை அனுப்பிவிடுவார்கள். பிரச்னை அதுவல்ல. அந்தப் பதினைந்தில் எந்தப் புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தேன் என்பது மறந்துவிட்டது.

0

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

2 comments

  • நன்றி என்பது செய்யப்பட்ட உதவியின் அளவைப் பொறுத்து அல்ல. உதவி செய்யப்பட்ட கால சூழ்நிலை தேவை என்பதை பொறுத்து என்று நினைக்கிறேன்.

  • நல் கருத்து மனம் ஒன்றிப் பேசமுடிபவேனே நண்பன்..

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading