நன்றி கெட்டவன் வாக்குமூலம்

நேற்றைய கலவரத்துக்கு சாட்சி ஆனவர்களுக்கு ஒரு சொல்.

அச்சுப் புத்தகம் – கிண்டில் இரண்டையும் நான் சமமாக மதிப்பவன் என்பது உங்களுக்குத் தெரியும். அச்சு நூல்களைக் காட்டிலும் கிண்டில் புத்தகங்களின் விலை ஏன் குறைவாக இருக்கிறது; எதனால் அதில் வாசிப்பது நல்லது என்று என்னைவிட விரிவாக எழுதிய இன்னொரு எழுத்தாளர் இங்கே கிடையாது. கிண்டில் என்பது காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வந்திருக்கும் ஒரு நவீன கருவி. அதனை வெறுத்தோ, அஞ்சியோ விலக்கி வைப்பது அறியாமை.

என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் கிண்டிலில் இருக்கின்றன. புதிதாக ஏதாவது வெளி வந்தாலும் ஓரிரு மாதங்களுக்குள் அவற்றின் கிண்டில் பதிப்பை வெளியிடுகிறேன். எந்தப் புத்தகத்துக்காவது தலைப்பை மாற்றினால் அதையும் இங்கே உடனுக்குடன் தெரிவிக்கிறேன். இவையெல்லாம் போதாமல் போய்விடுமோ என்றுதான் bukpet.com-இல் அனைத்துப் புத்தகங்களையும் வரிசைப்படுத்தி, ஒவ்வொன்றையும் கிண்டிலில் பார்வையிடுவதற்கு லிங்க்கும் தந்திருக்கிறேன். (ஜீரோ டிகிரியில் என் அச்சு நூல்களின் புதிய பதிப்புகள் வெளி வரத் தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அவற்றுக்கு bukpet-இல் லிங்க் தர நேரம் அமையவில்லை.)

இவ்வளவு செய்த பிறகும் ஒவ்வொரு புத்தக அறிவிப்பின்போதும் கிண்டில் வடிவம் உள்ளதா, அச்சு வடிவம் உள்ளதா என்று கேட்பது ஓர் எழுத்தாளனை எவ்வளவு எரிச்சலடைய வைக்கும் என்பது ஏன் புரிவதில்லை? அச்சு நூல், கிண்டில், bynge, ஆப்பிள் புத்தகம், கூகுள் புத்தகம், நூக் புத்தகம், ஆடியோ புத்தகம் – இன்னும் ஏதாவது வருமானால் அந்த வடிவம் உள்பட எதுவும் எந்த எழுத்தாளனுக்கும் விலக்காக இருக்க முடியாது. எழுதுகிற அனைத்தும் எல்லா தரப்பு வாசகர்களுக்கும் எல்லா வடிவங்களிலும் சென்று சேர வேண்டும் என்றுதான் ஒவ்வொரு எழுத்தாளனும் நினைப்பான், விரும்புவான். நானும் அதற்காக மெனக்கெடுகிறேன்; உழைக்கிறேன்.

நேற்றைய என் கோபத்துக்குக் காரணம், ஏ.பி. இருங்கோவேள் என்ற வாசகர். அவர் என்னுடைய நெடு நாள் வாசகர் என்பதும் என்னுடைய பெரும்பாலான புத்தகங்களைக் கிண்டிலில் படித்தவர் என்பதும், புதிதாக எது வெளி வந்தாலும் உடனே வாங்குபவர் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு வாசகன் புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு எழுத்தாளன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது கேவலத்தின் உச்சம். அப்படி நினைப்பவன் ஒரு நல்ல வாசகனே அல்ல. அப்படிப்பட்ட எண்ணமே அருவருப்பானது, நாகரிகமற்றது, கீழ்த்தரமானது.

எழுத்து எனக்குத் தொழில். வாசிப்பது உங்கள் பொழுதுபோக்கு அல்லது விருப்பம் அல்லது தேவை. இதில் நன்றிக்கு என்ன அவசியம்? பிடித்திருந்தால் படிக்கப் போகிறீர்கள். இல்லாவிட்டால் நகர்ந்து செல்வீர்கள். அவ்வளவுதானே? இதில் நன்றி எங்கே வருகிறது? நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்?

புத்தகங்களைப் பரவலாக்குவதும் விற்பனையை அதிகப்படுத்துவதும் பதிப்பு நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணி. துரதிருஷ்டவசமாக, மிகக் குறைவான வாசகர் எண்ணிக்கையே உள்ள தமிழ்ச் சூழலில், சிதறிக் கிடக்கும் அந்தச் சிறுபான்மையினரைப் பதிப்பாளர்களால் முழுதாக எட்டிப் பிடிக்க முடிவதில்லை என்பதால்தான் எழுத்தாளர்களே அவர்களுடைய புத்தகங்கள் வெளிவரும்போது அது குறித்து எழுதுகிறார்கள்; நானும் அதைத்தான் செய்கிறேன். இதை கெஞ்சுவதாகவோ பிச்சை எடுப்பதாகவோ நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் உங்களுடன் எனக்கு எந்தப் பேச்சும் கிடையாது; போய்விடலாம். ஏனெனில், என் வாசகர்களுக்கு நான் நேர்மையாக இருக்க விரும்புவேனே தவிர தலை வணங்கி, அடிமைப்பட்டு, கூப்பிய கரங்களுடன் இருக்க என்றும் விரும்ப மாட்டேன். அப்படி ஒரு நாள் வருமானால் அநேகமாக நான் இறந்திருப்பேன்.

கடந்த மூன்று நாள்களாக என்னுடைய புதிய மறு பதிப்புகள் ஒவ்வொன்றைக் குறித்தும் தினமும் ஒரு போஸ்ட் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் கிண்டில் பதிப்பு இருக்கிறதா என்று யாராவது அதன் கமெண்ட்ஸில் வந்து கேட்கிறார்கள். இந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலின் மேலேயே என்னுடைய கிண்டில் பக்கத்துக்கு லிங்க் உள்ளது. ஒரே ஒரு நிமிடம் செலவிட்டு அங்கே சென்று பார்த்தால் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். அப்படி அங்கே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் bukpet இணையத்தளத்தில் பார்த்தால் தெரியப் போகிறது. அதற்கும் இங்கேயே லிங்க் உள்ளது. இந்தச் சிறு முயற்சிக்குக் கூட நேரமில்லாதவர்கள் புத்தகங்களைப் படிக்க மட்டும் செய்வார்கள் என்று நான் ஏன் நம்ப வேண்டும்?

அச்சு நூல்களைக் குறித்த அறிவிப்பு வரும்போது கிண்டில் பற்றிக் கேட்பவர்களும், கிண்டில் வெளியீடுகளின்போது அச்சுப் பிரதி எங்கே என்பவர்களும் மட்டும் தவறாமல் அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிப் படித்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் அத்தனை எழுத்தாளர்களும் ஆடி கார் வாங்கியிருப்பார்கள். ஆனால் உண்மை என்ன? இப்படிக் கேட்கிற யாரும் வாசகர்களே கிடையாது. பொழுது போக்க ஃபேஸ்புக் வருபவர்கள்; அவ்வளவுதான்.

ஆனால் நண்பர்களே, ஃபேஸ்புக்கில் எழுதுவது உள்பட எதுவும் எனக்கோ என்னைப் போன்ற பிற எழுத்தாளர்களுக்கோ பொழுதுபோக்கல்ல. எழுத்து என்பது மிக நிச்சயமாகப் பொழுதுபோக்கு சாதனமல்ல என்று நம்புகிற சிறுபான்மையின் கடைசிப் பிரதிநிதியாக உங்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

எழுத்தாளன் என்றல்ல. யாரையும் சிறுமைப்படுத்தாதீர்கள். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் செய்கிறீர்கள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். அவ்வளவுதான். சக பயணியாக என்னுடன் வர விரும்புகிறவர்களை எப்போதும் வரவேற்பேன். நட்பு கொள்வேன். நட்பு கொண்டவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் யோசிக்க மாட்டேன். ஆனால் என் புத்தகங்களை வாங்குவதன் மூலம் எனக்குப் பிச்சை போடுவதாக நினைப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிப்பது தவிர நான் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை.

இந்த விஷயத்தில் இதற்கு மேல் பேச ஏதுமில்லை.

(ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த ஒரு கலவரத்துக்கு எதிர்வினை.)

Share

Add comment

By Para

Recent Posts

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி