கோட்டை விடப்பட்ட கோப்பை

[கல்கியில் வெளியான அந்த கிரிக்கெட் கட்டுரை இதுதான். ஏதோ ஓர் உலகக்கோப்பை சமயம் எழுதியிருக்கிறேன். வருஷம் நினைவில்லை. போட்டியின் இறுதியில் கேப்டன் கங்குலி வீட்டில் ரசிகர்கள் கல்லெறிந்த காலம்.]

இந்தவாட்டி வேர்ல்டு கப் இந்தியர்களைப் பொறுத்த அளவில் “ஹைலைட்ஸ் பார்க்கக் கூட லாயக்கில்லாத”  சங்கதியாகிவிட்டதை துரதிருஷ்டம் என்றெல்லாம் அநாவசியத்துக்கு வருணிப்பது தப்பு. ஒரே சொல் தான் –  கொழுப்பு.

அணியில் எல்லாருமே மிக நன்றாகத் தொப்பை வளர்த்திருக்கிறார்கள்.  காட்ஸில்லா மாதிரி புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு ஓடுகிறார்கள். அல்லது ஓடுகிற பந்தை நோக்கி அறிஞர் அண்ணா மாதிரி அடுத்தவருக்கு விரல் உயர்த்திக் காட்டிவிட்டு அக்கடாவென்று இருந்த இடத்திலேயே காலால் புல் பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  இதெல்லாம் உருப்படாது. சம்பளம் இல்லாமல், விளம்பர வருமானங்களுக்கும் தடை போட்டு ஒரு ரெண்டு வருஷம் கட்டாந்தரையில் ஆடவிட்டால் தான் சரிப்படும்.

ஒரு பத்திருபது வருஷம் முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட் அணி இப்படி இல்லை. தோற்கிற ஆட்டங்களில் கூட ஒரு தரம் இருக்கும். டொக்கு வைத்தே கழுத்தறுத்த ரவிசாஸ்திரி போன்ற வீரர்களிடம் கூட ஒரு தொழில்நுட்பத் தேர்ச்சி இருந்தது. கட்டக்கடைசியில் பேட்டை எப்படிப் பிடிப்பது என்பது கூடத் தெரியாமல் ஆடவரும் (அதிகபட்சம் இரண்டு பந்துகளுக்கு) திலீப் ஜோஷி, மணீந்தர் சிங் கூட பல மேட்ச்களில் அற்புதம் செய்திருக்கிறார்கள். விளையாட்டை, பணத்துக்காக மட்டும் விளையாடாத காலம் அது.

ஆஸ்திரேலியாவுடன் ஆடிய ஆட்டத்துக்குப் பரிசாக கல்கத்தாவில் கங்குலி வீட்டின்மேல் ரசிகக் குஞ்சுகள் தாக்குதல் நடத்தினார்களாம்.  இந்தளவுக்கு கிரிக்கெட் மோகம் உண்டாக்கியதில் பாதியாவது கால்பந்து, ஹாக்கி வகையறாக்களுக்குச் செய்திருந்தால் அவற்றிலாவது மானம் விமானமேறாமல் தவிர்த்திருக்கலாம்.

கிரிக்கெட் ஆட ஆரம்பித்த காலத்திலெல்லாம் இத்தனை வெறிரசிகப் பட்டாளங்கள் இங்கே இல்லை. யோசித்துப் பார்த்தால் சரியாக இருபது வருஷம் முன்னால் தொடங்கிய ஜுரம் இது என்பது புலப்படும். அந்தப் புண்ணியமும் பாவமும் 83 உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கபில்தேவ் தலைமையிலான குழுவுக்குச் சேரும்.

அந்தப் பொன்னாளுக்குக் கொஞ்சநாள் கழித்து மேற்கிந்தியத் தீவு அணி இந்தியச் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டது. சேப்பாக்கத்தில் ஒரு மேட்ச்.

ரங்காச்சாரி, அப்துல் ஜப்பார், வானொலி அண்ணா கூத்தபிரான் எல்லாம் “பட்டாபிராம் முனையிலிருந்து மால்கம் மார்ஷல் வருகிறார்…ஓடிவருகிறார்…புயல் வேகத்தில் வ்ருகிறார்….இதோ வீசுகிறார்…ஆஃப் ஸ்டம்புக்குச் சற்று விலகி வந்த பந்து மொஹிந்தரின் முழங்காலுக்குச் சற்று முன்னே விழுந்து…ஆ! தென்னைமர உயரத்துக்கு எழும்பிச் சென்று….அதோ, விக்கெட் கீப்பர் கிர்மானியின் கர்ங்களில் அடைக்கலமாகிறது…” என்று திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் போல வானொலியில் , செந்தமிழில் வருணித்து ஒரு மாதிரி முதல் ஜுரத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

பஞ்சாயத்து ஆபீஸ்களில் மட்டுமே தொலைக்காட்சி வந்திருந்த காலம் அது. நான் வசித்த கேளம்பாக்கம் கிராமத்தில் ஒரு சில உப்பள முதலாளிகள் வீட்டிலும் தோல் தொழிற்சாலை ஆபீசர்கள் வீட்டிலும் மட்டும் டி.வி. இருந்தது.  தோல் தொழிற்சாலை ஆபீசர்கள் மட்டும்தான் நானறிய அக்காலத்தில் கிரிக்கெட் வெறியர்களாயிருந்தார்கள்.

ஐந்து நாள் மேட்ச் என்றால் முந்தைய நாளிலிருந்தே ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, சுருட்டிவிட்ட லுங்கியும் நாலைந்து பாக்கெட் சிஸர்ஸ் சிகரெட்டுமாக, சோபாவில் தலையணை வைத்து ஒரு மாதிரி ஸ்ரீரங்கநாதர் போஸில் படுத்துக்கொண்டு  டிவி வால்யூம், பிக்சர் பட்டன்களை அட்ஜஸ்ட் செய்து வைத்துக்கொள்ள் ஆரம்பித்துவிடுவார்கள்.

என்னைமாதிரி டிவி இல்லாத வீடுகளில் பிறந்த பாபாத்மாக்களிடம் தலா நாலணா வாங்கிக்கொண்டு ஆபீசர்களின் சம்சாரங்கள் வராண்டாவில் அமர்ந்து பார்க்க (“யாரும் பேசக்கூடாது?”) மனம் கனிந்து அனுமதிப்பார்கள்.

மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், பேட்ரிக் பேட்டர்சன், கார்னர் போன்ற பெயர்களைச் சொன்னாலே மனத்தில் பனைமரம் போன்றதொரு பிம்பம் உண்டாகும். என்ன வேகம்! என்ன லாகவம்! ஆனால் ஒருத்தர் மூஞ்சி கூட தனித்தனியாக மனத்தில் பதியாமல் ஒட்டுமொத்தமாக ஒரு நெகடிவ் பிம்பம் தான் உண்டாகும். (பிற்பாடு நெகடிவைக் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்க்க தினத்தந்தி உதவியது.)

அந்த சேப்பாக்கம் மேட்சில் இந்தியா தோற்கவில்லை. கவாஸ்கர் ‘ஏழெட்டுநாள்’ நின்று ஆடி இருநூற்று முப்பத்த்ஞ்சோ என்னவோ அடித்து டிராவாக்கிவிட்டு மேன் ஆஃப் தி மேட்சையும் வாங்கிக்கொண்டு ரயிலேறிவிட்டார்.

ஆனால் அந்த மேட்ச் எங்கள் அரசுயர் பள்ளி மாணவர்களிடையே அன்று மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.  அதுவரை ஸாஃப்ட் பால் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பள்ளிப் பையன்களின் பார்வை முதல் முதலாக கிரிக்கெட்டின் மீது விழுந்தது.

ஸாஃப்ட் பாலெல்லாம் ஒரு விளையாட்டா? ஸ்டம்பு இல்லை என்பது தவிர அதில் பெரிய அட்வாண்டேஜ் கிடையாது. ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு உருட்டுக்கட்டை மாதிரி இருக்கும் மட்டையை விசிறிக்கடாசிவிட்டு  பெரிதாக ஒரு சதுரம் ஓடவேண்டும். இதில் என்ன பெப் இருக்கிறது?  மேலும் ஆடும்போது வளர்மதி, ராஜாத்தி, ஜெயலலிதா போன்ற பள்ளியின் மாதர் குல மாணிக்கங்கள் நின்று ரசிப்பது கிடையாது.

ஆனால் அந்த லாரி கோம்ஸின் பஞ்சுமிட்டாய்த் தலை குறித்து வகுப்பில் வளர்மதி எத்தனை சிலாகித்துப் பேசினாள்? மொட்டைத்தலை ரிச்சர்ட்ஸின் சூயிங்கம் மெல்லும் அழகைக்கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.  ‘ஹேண்ட்ஸம்’ என்ற சொல்லை எங்கள் பள்ளி வளாகத்தில் அந்தப் பெண்கள் தான் முதல்முதலில் அறிமுகப்படுத்தினார்கள். அந்தப் பெரிய கௌரவம் முத்ல்முதலில் மேற்கிந்திய ஆட்டக்காரர்களுக்குக் கிடைத்ததன் சூட்சுமம் தான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

அது நிற்க. நாங்கள் ஒட்டுமொத்தமாக  ஸாஃப்ட்பாலைப் புறக்கணித்து கிரிக்கெட் ஆடுவது என்று முடிவு செய்தோம்.  உடனே பத்மநாபன் என்ற குடுமிநாதன் தன் கூந்தலைப் பாதியாக வெட்டிக்கொண்டு லாரி கோம்ஸ் மாதிரி சிகையலங்காரத்துக்கு முயற்சி செய்ய ஆரம்பித்து, தலையில் நிறைய காயங்கள் சம்பாதித்துக்கொண்டான்.

மாதவன் என்னும் ஒன்பதாங்கிளாஸ் பையன்  ஹோல்டிங் மாதிரி ஓஓஓடிவந்து பந்துவீசத் தொடங்கினான். அவனது பந்துவீச்சுக்கு நாங்கள் தேர்ட் மேனிலும் செகண்ட் ஸ்லிப்பிலுமாகத் தலா இரண்டு விக்கெட் கீப்பர்களை நிறுத்தவேண்டியதானது.

பள்ளியின் கூட்டுறவுச் சங்கக் கடையில் நிறைய சூயிங் கம்கள் விற்பனையாவதாக வாட்ச்மேன் எட்டியப்பன் வந்து சொல்லிவிட்டுப் போனான்.

உடற்பயிற்சி ஆசிரியர் மாசிலாமணி, பையன்களின் திடீர் கிரிக்கெட் மோகத்தை ஊக்குவிக்கும்விதமாக ஹெட்மாஸ்டரிடம் பேசி பளபளவென எண்ணெய் தடவிய இரண்டு பேட்டும் நாலு ஸ்டம்பும் (ரன்னர் ஸைடுக்கு ஒண்ணு போதும்!) ஒரு பொட்டி நிறைய ரத்தச் சிவப்பில் வாசனை மிக்க கிரிக்கெட் பந்துகளும் வாங்கிவந்துவிட்டார்.

ஆர்வம் மிக்க மாணவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு அணியிலும் 19 பேர் இடம் பெற்றிருந்தோம். ஆளுக்கு இரண்டு ஓவர் ஆடுவது, இரண்டு ஓவர் பந்து வீசுவது என்று பொதுவில் முடிவு செய்துகொள்ளப்பட்டது.

ஒரு ரெண்டு மாசகாலம் அந்த ஜுரம் எங்களுக்கு இருந்தது. கனவிலெல்லாம் பந்துவீசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருமுறையும் வளர்மதியும் ஜெயலலிதாவும் ராஜாத்தியும் கைதட்டிவிட்டு காதோடு வந்து ஹாண்ட்சம் என்று சொன்னார்கள்.

தினசரி மாலை நாலு மணி தொடங்கி இருட்டி, எதிராள் தென்படாமல் போகும்வரை விளையாடி ஒருமாதிரி பேட்டைப் பிடிக்கவும் பந்துவீசவும் பயின்றோம்.

மாசிலாமணி வாத்தியார் அபிஷியலாக ஒரு மேட்ச் ஏற்பாடு செய்தார். வேறு வழியில்லை கிரிக்கெட்டில் 11 பேர் தான் ஆடமுடியும் என்பதால் பயிற்சி காலங்களில் முதல் பந்தில் அவுட்டான பையன்கள் அனைவரையும் சப்ஸ்டிட்யூட் என்று அறிவித்துவிட்டு மிச்சமுள்ளோரை இரு குழுக்களாக்கி ஒரு ஞாயிற்றுக்கிழமை பள்ளி மைதானத்தில் அந்த உற்சவத்தைத் தொடங்கிவைத்தார்.

ஓரத்தில் பானையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. வீரர்களின் டிரிங்ஸ் இண்டர்வலின்போது அது பயன்படும். புதிதாக பிட்சுக்கு மேக்கப்பெல்லாம் போட்டு இருந்தார்கள். ஹெட்மாஸ்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்கார ஒரு பிரத்யேக காலரி தயார் செய்யப்பட்டது. மரத்தடியில் ஏழெட்டு நாற்காலிகள். பள்ளியின் முன்னாள் மாணவரும் வேலை இல்லாத ஆனால், கிரிக்கெட் அனுபவம் இருந்த (டிவியில் நிறைய மேட்ச் பார்ப்பார்) சௌந்தர் என்கிற வாலிபர் அம்பயராக (லுங்கியுடன்) வந்து நின்றார்.  மாசிலாமணி வாத்தியாரே லெக் அம்பயராக நின்றுகொண்டார். காலுக்குக் குறிபார்த்து யாரும் பந்துவீசமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் அவரது கையில் அந்தவார ஆனந்தவிகடனும் இருந்தது.

நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த எங்கள் சக மாணவிகள் ஒரு குழுவாக யூனிஃபார்ம் தவிர்த்து வண்ணப் பாவாடை சட்டையுடன் அடிக்கடி தமக்குள் பேசிச் சிரித்தபடி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்ததை பத்மநாபன் கவனித்துச் சொன்னான். அவனுக்குள் அப்போது தான் ஏன் லாரி கோம்ஸாக மாறினோம் (நின்ற இடத்திலிருந்து பந்து வீசுவான்.) ஒரு மார்ஷலாகியிருக்கலாமே என்கிற வருத்தம் மேலோங்கியிருந்ததை நாங்கள் உணர்ந்தோம்.

முதல் ஓவரை மாதவன் ஓடி வந்து வீசினான். எல்லா பந்துகளும் ஹெட்மாஸ்டரின் சோடாபுட்டிக் கண்ணாடியை நோக்கியே வீசப்படுவதாக எங்களுக்குத் தோன்றியது. (ஹெட் மாஸ்டர் இங்கிலீஷ் செகண்ட் பேப்பர் எடுப்பவர்.) “ஸ்டம்புக்குப் போடுப்பா” என்று மாசிலாமணி வாத்தியார் அருகே வந்து சொல்லிவிட்டுச் சென்றதும் அடுத்தபந்து அவரை நோக்கிப் பாய்ந்தது.

நான் இருந்த அணி பேட்டிங் வரிசையில் இருந்தது. பள்ளி வளாகத்தில் புகழ்பெற்ற் ஓபனிங் பேட்ஸ்மன் நான் தான் என்பதால் (நிச்சயம் முதல் ஓவர் தாக்குப்பிடித்துவிடுவேன்) மாணவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஓபனிங் எனினும் முதல் ஓவருக்கு நிற்கமாட்டேன். மாதவன் மீது என் நம்பிக்கை அப்படி. இரண்டாவது ஓவரில் நாலு ரன் எடுத்ததாக ஞாபகம்.

மேலும் ஓரிரு ஓவர்கள் கடந்திருக்கும். அதற்குள் விக்கெட் கீப்பர் கலியமூர்த்தி “எப்படா ட்ரிங்ஸ் இண்டர்வல் விடுவாங்க?” என்று கேட்டான்.  மாணவிகள் எதிரே ஸ்டைலாக பானை நீரை கோக்கோகோலாவாக பாவித்து அருந்தி, வியர்வையைத் துடைத்து போஸ் கொடுக்கும் உத்தேசம் அவனுக்கு இருந்திருக்கலாம்.

விதி மாதிரி அன்று ஒரு பந்து கூட ஸ்டம்புக்கு வராத்தால் யாரும் ரன் எடுக்கவோ , அவுட் ஆகவோ வாய்ப்பு இல்லாமல் இலங்கைப் பேச்சுவார்த்தை மாதிரி எங்கள் இன்னிங்ஸ் நீண்டுகொண்டே போனது.

ஹெட் மாஸ்டர் தோ வரேன் என்று எழுந்து போனதும் பிற ஆசிரியர்களும் “வரட்டா மாசிலாமணி?” என்று கழன்றுகொண்டார்கள். தூர்தர்ஷனில் அப்போதெல்லாம் காதுகேளாதோருக்கான செய்தி அறிக்கை ரொம்பப் பிரபலம். காது கேட்பவர்கள் கூட அதைத் தவற விடமாட்டார்கள். அது முடிந்ததும் அதிர்ஷ்டம் இருந்தால் தமிழ்ப்படம் கூடப் போடுவான் என்று மாணவிகளும் எழுந்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பத்து ரன்களைத் தாண்டாமல், ஒரு விக்கெட் கூட விழாமல் அன்றைய மாட்ச் பிற்பகல் ஒன்று முப்பது வரை அந்தரத்திலேயே நின்றது. மைதானத்தில் எங்களையும் மாசிலாமணி வாத்தியாரையும் தவிர வெறு ஆள் இல்லை. அம்பயராக நின்றிருந்த முன்னாள் மாணவர் சாப்பிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிப் போனவரை திருப்போரூர் பஸ்ஸில் பார்த்ததாக ப்யூன் கணபதி வந்து சொன்னான்.  ஓவர் கணக்கு வைத்துக்கொண்டு ஆடியிருக்கலாம் என்பதெல்லாம் சிற்றறிவுக்கு எட்டாத காலம் .

“முடிச்சிக்கலாம்டா” என்றார் மாசிலாமணி வாத்தியார்.

“நாங்க பேட்டிங் பண்ணவேண்டாமா?” முறைப்புடன் கேட்டான் மாதவன். உக்கிரமாக ஓடி வந்து பந்துவீசி வீசி அவன் பார்க்க ஒரு பிசாசு போலாகியிருந்தான்.

அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மேட்சைத் தொடரலாம் என்றும் அப்போது எதிரணி முதலில் பேட் செய்யலாம் என்றும் ஆசிரியர் சொன்னார்.

அரை மனத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டியதானது.

அந்த அடுத்தவாரம் அப்புறம் வரவில்லை. நடுவே இன்ஸ்பெக்ஷன் வந்துவிட ஆங்கிலம் செகண்ட் பேப்பரிலும் (ஹெட் மாஸ்டர் எடுக்கிற வகுப்பு) புவியியலிலும் மாணவர்கள் ரொம்ப வீக் என்று ஜீப்பில் வந்த இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  அவ்வளவுதான். எங்கள் பேட்டும் பந்துகளும் பீரோவுக்குள் போய்விட்டன. மாசிலாமணி வாத்தியாரை ஸ்டாஃப் ரூமில் மட்டுமே அப்புறம் பார்க்கமுடிந்தது. மைதானம் பக்கம் அவர் ஒண்ணுக்குப் போகக் கூட வரமறுத்தார்.

பத்மநாபன் மீண்டும் குடுமி வளர்க்க ஆரம்பித்தான்.  நாங்கள் சமர்த்தாக ஆங்கிலம் இரண்டாம் பேப்பரும் புவியியலும் படித்துக் கெட்டுப்போகத் தொடங்கினோம்.

கல்கத்தாவிலும் அநேகமாக இப்படித்தான் கிரிக்கெட் ஆர்வம் உற்பத்தியாகத் தொடங்கியிருக்க்வேண்டும்.  ஆனால் அந்த ஊர் மாசிலாமணி வாத்தியார் விடாப்பிடியாக அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மேட்சை நடத்தியிருப்பாராயிருக்கும்.

Share

4 Comments

  • கிரிக்கெட் அனுபவம் பற்றிய பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது! ஆனால், மார்ஷல் வீசிய பந்து, துஜான் கரங்களுக்கு தானே செல்ல வேண்டும்! கிர்மானி அல்லவே!

    நன்றி!
    நவீன பாரதி

    • நவீன பாரதி! நான் இரண்டு கைகளையும் மேலே தூக்குவது உங்கள் மனக்கண்ணில் தெரிகிறதா? தப்புதான். அவசரத்தில் ஆள் மாறாட்டம் நடந்துவிட்டது!

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி