வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து (மகாத்மா காந்தி நூல் தொகுப்புக்காக) பணம் கட்டச் சொல்லி கடிதம் வந்துவிட்டது. ரூ. பத்தாயிரம் மதிப்புள்ள இருபது தொகுதிகளை சலுகை விலையாக ரூ.6000க்கு அளிக்கும் புண்ணியாத்மாக்கள்.
காசோலையைப் பதிவுத் தபாலில் அனுப்பச் சொல்லியிருந்தார்கள். எனவே குரோம்பேட்டை தபால் நிலையத்துக்குப் போயிருந்தேன். மருந்துக்கும் அங்கே கஸ்டமர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டும் ஆளுக்கொரு பக்கம் ஆனந்த விகடன், குமுதம் படித்துக்கொண்டிருந்தார்கள். (நேரம் பிற்பகல் 12.35)
எனக்கு இந்தப் பதிவுத் தபால், வேகத்தபால் விவகாரங்கள் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது. முதல் கவுண்ட்டரில் இருந்த பெண்ணிடம் இதற்கு எத்தனை ஸ்டாம்ப் ஒட்டவேண்டும் என்று கேட்டேன்.
ஸ்டாம்ப்பெல்லாம் இல்லை; அவரிடம் கொடுங்கள், பதிவுத் தபால் தொகையைச் சொல்லி கவரை வாங்கிக்கொள்வார் என்றார். முத்திரையிட்டு அனுப்பிவிடுவார் என்றார்.
அவர் சுட்டிக்காட்டியது, அவருக்குப் பக்கத்து இருக்கைப் பெண்மணி. அன்னார், கம்ப்யூட்டரில் எதையோ தடவிக்கொண்டிருந்தார். (வேலை செய்வதற்கும் தடவுவதற்குமான வித்தியாசத்தைப் பின்புறம் பார்த்தே சொல்லிவிட முடியும் அல்லவா.) அவரிடம் கவரை நீட்டி, பதிவுத் தபால் அனுப்பவேண்டும் என்று சொன்னேன்.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் என்றார். கொஞ்சமென்றால் எவ்வளவு நேரம் எடுக்கும்?
ஒரு பத்து நிமிஷம் ஆகும். இல்லன்னா பதினஞ்சு நிமிஷம் என்றார்.
பதிவுத் தபால் அத்தனை சிரமமான வேலையா? ஒருவேளை ஃபாரம் கொடுத்து ஃபில்லப் செய்யச் சொல்லிவிடுவாரோ என்று கலவராமனேன். இல்லையாம். அவர் டெஸ்பாச் அனுப்பவேண்டுமாம். அதை முடித்துவிட்டு உள்ளே போய்விட்டு வந்து அதன்பிறகு என் கவரை வாங்கிக் கொள்வேன் என்று சொன்னார். கவனிக்கவும். அத்தனை பெரிய தபால் நிலையத்தில் என் ஒருவனைத் தவிர வேறு யாருமே இல்லை. குறிப்பாகப் பதிவுத் தபால் அனுப்ப அந்த அம்மணியைத் தொந்தரவு செய்ய ஒருத்தருமில்லை.
அம்மணி, பதிவுத் தபால் அனுப்ப எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அதெல்லாம் உடனே ஆகிவிடும் என்பது அப்போது தெரிந்தது.
இருப்பினும் யாருமற்ற டீக்கடையில் அவர் யார் கொடுத்த எதனை பதினைந்து நிமிடமெடுத்து டெஸ்பாச் செய்யப் போகிறார்?
கடுப்புடன் கூரியரில் போட்டுவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.
வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அரசு கொடுக்கும் மாதச் சம்பளம் என்னும் திமிரைத் தவிர இந்த அலட்சியத்துக்கு வேறு காரணமில்லை. இதனாலேயே அரசு ஊழியர்கள் அதுவும் மக்கள் பணியில் இருப்போர் என்றால் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது.
ஒரு கவரை வாங்கிப் போட்டுக்கொண்டு தன் வேலையை (அப்படி ஒன்று இருக்குமானால்) தொடர என்ன தடை? அல்லது, வேறு பணிகள் இருக்கும் ஒருவரை கஸ்டமர் கவுண்ட்டரில் எதற்கு அமர வைக்கவேண்டும்?
தந்தி ஒழிந்தது போல் தபாலும் ஒருநாள் ஒழியும். ஆனால் அன்றும் இந்தப் பெண்மணிக்கு பென்ஷன் வரும்.
இது அந்தத் திமிர்.