இடைவேளைக்குப் பிறகு

புத்தாண்டு என்பது புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது தொடங்குவது. எனவே இவ்வாண்டின் புத்தாண்டுத் தினம் டிசம்பர் 30.

ஓயாத வேலைகளால் கடந்த சில மாதங்களால் இந்தப் பக்கங்களில் எதுவும் எழுதுவதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு வேலை என்று கொள்ள அவ்வப்போது விரும்புவதுண்டு. இதுவரை முடிந்ததில்லை. பார்க்கலாம், புத்தாண்டு முதலாவது.

இந்த வருடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக புத்தகங்கள், புதிய உத்வேகத்துடன் கண்காட்சிக்கு வருகின்றன என்று தெரிகிறது. வெளியீட்டு விழாக்களில் தலைநகரம் கண்காட்சியை வரவேற்கத் தயாராகத் தொடங்கிவிட்டது. சாரு புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு அரங்கில் உட்கார இடமின்றி பலபேர் நின்றவண்ணம் முழு நிகழ்ச்சியையும் ரசித்ததாகக் கேள்விப்பட்டேன். ஆரோக்கியமான மாற்றம் இது. தொடரவேண்டும்.

*

நண்பர் கிரேசி மோகனின் ‘கண்ணன் அனுபூதி’ வெண்பா நூல் வெளியீடு சமீபத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாசலில் நடைபெற்றது. கிரேசி, நகைச்சுவை எழுதுவார், நடிப்பார், படம் வரைவார், வெண்பா எழுதுவார், இன்னும் என்னென்ன செய்வார் என்று எனக்கு முழுதாகத் தெரியாது. ஆனால் எதைச் செய்தாலும் ஆத்மார்த்தமாகச் செய்வது அவர் வழக்கம். பலநாள் நட்ட நடு நிசியில் கூகுள் டாக்கில் இடைவிடாது வெண்பாவில் இருவரும் பேசிக்கொள்வோம்.

வெண்பா ஒரு மனப்பழக்கம். கஷ்டம் மாதிரி தோன்றினாலும் கஷ்டமில்லாத வடிவம்தான். முதலில் இலக்கணம் பார்க்காமல் மீட்டருக்குள் கருத்தைப் பொருத்தப் பழகிவிட்டால், பின்னர் நேரம் கிடைத்தால் இலக்கணத்தைச் சரி செய்துகொண்டுவிடலாம்.

ட்விட்டரில் ஒரு பெரிய கோஷ்டியே வெண்பா எழுதிக்கொண்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை.

கிரேசி நிறைய பக்தி வெண்பாக்கள் எழுதுவார். பக்தியல்லாத பாக்களை மெசஞ்சரில் மட்டும் எழுதுவார். அதிலும் அடுத்தவர் எட்டிப்பார்த்துவிடக் கூடாதவற்றை நள்ளிரவுக்குப் பிறகு மட்டும். ஆனால்,

பாரப்பா என்னுள்ளே பாரதப் போரப்பா
கூறப்பா நேரிடையாய் கீதையை – பாரப்பால்
பாதாள விண்ணுக்குப் பாய்ந்தகிரி விக்கிரமா
வேதாள வஞ்சநெஞ்சை வீழ்த்து – போன்ற எளிய, சுலபமான பாக்களை உருவாக்குவதில் உள்ள சவால் அபாரமானது.

உலகில் ஆகப்பெரிய சிரமம், எளிமை கூடுவதே. கிரேசிக்கு என் வாழ்த்துகள்.

*

கடந்த இரு மாதங்களாக அடுத்தடுத்த கடினமான வேலைகளால் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். கணப்பொழுது இளைப்பாறலாக எப்போதும் உபயோகிக்கும் ட்விட்டர் பக்கம்கூட அதிகம் ஒதுங்க முடியாத சூழ்நிலை. ஒருவாறாக இன்றைக்கு மதியம் கொஞ்சம் வேலைகள் ஓய்ந்து ஆசுவாசமாக உணர உட்கார்ந்த சமயம் நண்பர் குரு சுப்பிரமணியன் [lazygeek என்றால் இணையத்தில் எல்லோருக்கும் புரியும். சுப்புடு என்றாலும்.] வீட்டுக்கு வந்தார்.

எப்போதாவது இணையத்தில் எழுதக்கூடிய குருவின் தமிழ் எனக்குப் பிடிக்கும். ரசிப்பேன். புத்தகம், எழுத்து, எழுத்தாளர்கள், சினிமா, தொழில்நுட்பம், விழாக்கள் என்று இலக்கில்லாமல் சில மணிநேரங்கள் இம்மாதிரி பேசி எத்தனை நாளாயிற்று!

குரு, புத்தகக் கண்காட்சி வரை சென்னையில் இருக்கப்போவதாகச் சொன்னார். போண்டா மீட்டிங்களுக்குப் போய்விடாதீர்கள் என்று சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

இன்றைய எங்கள் உரையாடலில் முக்கிய விஷயமாக நான் கருதியது, ஒரே விஷயத்தைப் பல்வேறு மொழிநடையில் எழுதுவது பற்றி நாங்கள் விரிவாகப் பேசியது. நல்ல சொல்வளமும் வாக்கியங்களைக் கட்டமைத்துப் பிரித்து, திரும்பக் கட்டி, திரும்பப் பிரித்துப் பார்ப்பதில் அடங்காத ஆர்வமும் இருந்தால் இது எளிமையானதே. கிழக்கு எடிட்டோரியலில் உள்ளவர்களுடன் இது பற்றிப் பேசவேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருந்துவிட்டது. அடுத்த வருடம் செய்யவேண்டும்.

*

இந்த வருடம் எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்போகிற புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களை எப்படியும் பிரசன்னா எழுதுவார் என்று நினைக்கிறேன். என்னளவில் முக்கியமான புத்தகங்களாக நான் கருதும் சிலவற்றைப் பற்றி இப்பக்கங்களில் இனி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். விரிவான கட்டுரைகளுக்கு முன்னால் ஒரு குட்டிப் பட்டியல்:

1. முகல் – முகில் எழுதியுள்ள முகலாயர்களின் வரலாறு. விரிவானது. boரோ, புருடாவோ இல்லாத ஒழுங்கான, விறுவிறுப்பான சரித்திரப் புஸ்தகம்.

2. மண்டேலா – மருதன் எழுதியது. நெல்சன் மண்டேலாவின் வாழ்வினூடாக தென்னாப்பிரிக்க விடுதலைப் போரை முழுமையாக விளக்கும் புத்தகம்.

3. ராஜிவ் கொலை வழக்கு – பத்ரி முதல் இட்லிவடை வரை பலர் எழுதிவிட்டார்கள். உருப்படியான, நேரடியான புலனாய்வு ரிப்போர்ட். ரகோத்தமன், பிறந்து வளர்ந்து பணியாற்றி ஓய்வுபெற்றது எல்லாமே சி.பி.ஐ.யில்தான். பொருளாதாரக் குற்றப்புலனாய்வு எக்ஸ்பர்ட் அவர். ராஜிவ் கொலை வழக்கு, அவர் தலைமையேற்றுப் புலன் விசாரித்த இரண்டாவது கிரிமினல் கேஸ். ஒளிவு மறைவில்லாமல் இந்நூலில் இந்திய அதிகார மையங்கள் பலவற்றின்மீது அவர் முன்வைக்கும் விமரிசனங்கள் முக்கியமானவை.

4. வால்மார்ட் – எஸ்.எல்.வி.  மூர்த்தி எழுதியிருக்கும் வால்மார்ட்டின் இந்த வெற்றிக்கதை, கிட்டத்தட்ட நான்காண்டுகளாகப் பலர் முயற்சி செய்து தோற்ற புத்தகம். ஆரம்ப ஜோரோடு நிறுத்தியவர்கள், ஒன்றிரண்டு அத்தியாயங்களோடு நிறுத்தியவர்கள், அரைக்கிணறு தாண்டி சோர்ந்து போனவர்கள், ஆறு மாத அவகாசம் கேட்டு அப்ஸ்காண்ட் ஆனவர்கள் என்று ஏனோ இந்தப் புத்தகம் பல எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து தண்ணி காட்டிக்கொண்டே இருந்தது. (இரண்டாவது பேராவில் சொன்ன என் நண்பர் குருகூட வேலை செய்ய ஆரம்பித்து, கவனமாக மறந்து போனவர்தான்!) வால்மார்ட்டின் வெற்றிக்கதை என்பது ஒற்றைப்புள்ளியில் ஆரம்பித்து நகர்த்திச் செல்லக்கூடிய கதையல்ல. விரிவானது. பல வேறுவேறு தளங்களில் தொடங்கி ஒரு மையப்புள்ளியை நோக்கி வந்து குவியக்கூடியது. சிடுக்குகளும் சூட்சுமங்களும் கொண்டது. மூர்த்தி ஒரு நிர்வாகவியல் நிபுணர். நிதானமாக அந்நிறுவனத்தின் தோற்றம் முதல் ஒவ்வோர் ஆண்டு வளர்ச்சியையும் அதன் பின்னணியையும் ஆராய்ந்து சுவாரசியமாக எழுதியிருக்கிறார். இந்த வருடம் நான் வாசித்த பிசினஸ் நூல்களிலேயே ஆகச்சிறந்தது இதுதான்.

5. அகம் புறம் அந்தப்புரம் – மீண்டும் முகில். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்த இந்திய சமஸ்தானச் சிற்றரசர்களின் வரலாறு. வாழ்க்கையை இந்த மன்னர்கள் எப்படியெல்லாம் ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று வாசிக்கும்போது ஓர் ஏக்கம் எழாது போகாது. கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய இந்தப் புத்தகம் ஓரிடத்தில்கூட அலுப்புத் தட்டுவதில்லை என்பது மிக முக்கியமான அம்சம்.

6. அம்பேத்கர் – ஆர். முத்துக்குமார் எழுதியது. 7. அப்துல் கலாம் – ச.ந. கண்ணன் எழுதியது. இரண்டுமே துதி விலக்கிய, நேர்மையான வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

இவை தவிரச் சில முக்கியமான மொழிபெயர்ப்புகளும் ஒரு சில நேரடி நூல்களும் என் விருப்பப்பட்டியலில் உள்ளன. அவை கண்காட்சிக்குக் கட்டாயம் வந்துவிடுமா என்று தெரிந்தபிறகு எழுதுகிறேன்.

*

கண்காட்சியில் நான் மிகவும் எதிர்பார்க்கும் பிற பதிப்பு நிறுவனங்களின் புத்தகங்களின் பட்டியலொன்று இருக்கிறது. அதுவும் பின்னால்.

Share

6 comments

    • ராஜ் சந்திரா, பிரகாஷ்! என் புத்தகம் ஏதேனும் ஒன்று வரலாம். இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் கிழக்கிலிருந்து வருகிற இருநூறு புத்தகங்களிலும் நான் இருக்கிறேன் என்பதால் ‘என்னுடையது’ என்று தனித்து ஒன்று வருவதிலோ வராதிருப்பதிலோ எனக்குப் பெரிய சந்தோஷமோ துக்கமோ கிடையாது. காஷ்மீர் இன்னும் எழுதி முடித்தபாடில்லை. முடிக்காத புத்தகங்கள் நான்கைந்து, வருடக்கணக்கில் காத்திருக்கின்றன. முடியும்போது முடித்துவிடுவேன்!

  • நீங்க எழுதினது வருகிறதா?

    இப்போதைக்கு ரகோத்தமன் புத்தகம் பட்டியலில் சேர்த்தாகி விட்டது.

    >>கண்காட்சியில் நான் மிகவும் எதிர்பார்க்கும் பிற பதிப்பு நிறுவனங்களின் புத்தகங்களின் பட்டியலொன்று இருக்கிறது.
    – சீக்கிரம் சொல்லுங்க.,கிறிஸ்துமஸ் mood-ல் நிதி மந்திரி இருக்கும்போது சந்தடி சாக்கிலே பட்ஜெட் ஒப்புதல் வாங்கணும் 🙂

  • எங்களைப் போல் வெளியூரில் இருப்பவர்களுக்கு தங்களின் புத்தகப் பட்டியல் ஓரு வரப்பிரசாதமாகும். இப்ப்த்தகங்களை இனையத்தில் வாங்குவதற்கான சுட்டியையும் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.

    • மாதவன், நான் குறிப்பிட்டுள்ள அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களே. இவற்றை நீங்கள் http://www.nhm.in இணையத்தளத்தில் வாங்கலாம். ஏதாவது புத்தகம் அப்டேட் ஆகாதிருக்குமானால் இன்னும் தயாரிப்பில் இருப்பதாகப் பொருள்.

  • புத்தக கண்காட்சி துவக்கத்தையே புத்தாண்டாகக் கொள்ளும் உங்கள் கடமையுணர்வுக்கு பாராட்டுக்கள்.

    //வாழ்க்கையை இந்த மன்னர்கள் எப்படியெல்லாம் ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று வாசிக்கும்போது ஓர் ஏக்கம் எழாது போகாது. // இதை சுத்தமா ஒத்துக்க முடியலை – எப்படியெல்லாம் காசையும், நேரத்தையும் வீணடிச்சிருக்காங்கன்னுதான் அந்த புத்தகம் பேசுது. காம வினோத கேளிக்கைகளுக்கு மக்களை சுரண்டின காசை வாரி வீசின டம்ப கதையை படிக்கையில் எனக்கு ஏக்கம் வரலை – எரிச்சலும், கோபமும்தான் வருது.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!