சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2

ம்ஹும். மக்களுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லை போலிருக்கிறது. இரண்டாம் நாளுக்குரிய வழக்கமான கூட்டத்தில் பேர்பாதிக்கும் குறைவு. நேற்றைய பதிவில் நான் குறையாகச் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. டாய்லெட்டில் நாற்றமில்லை, கண்காட்சி அரங்க வளாகத்தின் நுழைவாயில் அருகே ஒரு குடிதண்ணீர் கேன். நிச்சயமாக பபாசி அமைப்பாளர்கள் வலைப்பதிவு வாசித்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமேபோல் சமூகப்பிரக்ஞை அவர்களுக்கும் இருக்கிறது. வாழ்க.

வலப்புறமிருந்து ஆறு வரிசைகளை இன்றைக்கு ஒரு கடை விடாமல் சுற்றிப்பார்த்தேன். பளிச்சென்று முதலில் கவனத்தில் பட்ட விஷயம், கருத்தைக் கவரும் விதத்தில் இந்த வருடம் பெரிய அளவில் புதுப் புத்தகங்கள் ஏதும் வரவில்லை என்பது. எப்போதும் ஏதாவது ஒரு குண்டு வெளியீட்டின் மூலம் சுண்டி இழுக்கும் விடியலின் இந்த வருட வெளியீடு ‘1989 – சமூக அரசியல் நிகழ்வுகள்’ என்னும் நூல். இட ஒதுக்கீடு, ஜெயலலிதா, கருணாநிதி என்று நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விமரிசனங்கள். சற்றே புதுமையான முயற்சியாகத் தோன்றிய இந்த நூலை வாசிப்பது கொஞ்சம் கஷ்டமென்று தோன்றியது. நின்ற வாக்கில் பத்துப் பக்கம் படித்தேன். பிறகு ஆர். முத்துக்குமார் ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றான்.

நேற்று மேலோட்டமாகப் பார்த்த உயிர்மை அரங்கத்தை இன்றைக்கு நிறுத்தி நிதானமாக கவனித்தேன். முதலில் மனுஷ்யபுத்திரனைப் பாராட்டிவிட வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் தயாரிப்பிலும் ஒரு கவிஞனின் மனத்தைக் காணமுடிகிறது. இம்மாதிரி அணு அணுவாக ரசித்து ரசித்துப் புத்தகத்தை உருவாக்குபவர்கள் வெகு சொற்பம். க்ரியா செய்யும். ஆனால் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படி ஆகாது. நவீன இலக்கிய நூல்களுக்கு இது ஒரு பொற்காலம். உயிர்மை அரங்கில் உறுத்திய ஒரே விஷயம், இரண்டு மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே தொண்ணூறு சதவீத அடுக்குகளை அடைத்துக்கொண்டிருப்பது. [2004ல் கிழக்கு அரங்குக்கு வந்து போனவர்கள் இப்படித்தான் நினைத்திருப்பார்கள்.] அதிலும் பாதி உயிர்மையிலேயே மாதாமாதம் வெளியானவை. நான் இரண்டு புத்தகங்கள் வாங்கவேண்டுமென்றிருந்தேன். அங்கே ஒன்று கிடைத்தது. இன்னொன்று அச்சில் இல்லை போலிருக்கிறது.

போனவாரம் தினமலரில் ஒரு புத்தக மதிப்புரை வாசித்தேன். சரி, வாங்கலாம் என்று நினைத்து கண்ணதாசன் பதிப்பகத்துக்குச் சென்றபோது நூலின் பெயர் மறந்துவிட்டது. ஆனால் நூலாசிரியர் வீர் சங்வி. அது நினைவிருந்தது. வெளியிட்டது கண்ணதாசன் தான். அதிலும் சந்தேகமில்லை. அவர் பெயரைச் சொல்லி, அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்டேன். தெரியல சார், தேடிப்பாருங்க என்றார்கள். இருபது நிமிடங்களுக்கு மேல் தேடியும் அகப்படாமல், திரும்பவும் அங்கிருந்தவரிடம் வீர் சங்வியைப் பற்றி விசாரித்தபோது, அப்படியொரு பெயரையே கேள்விப்பட்டதில்லை என்றார். ஒரு கேட்லாக்கைக் கொடுத்து, இதுல இருக்கா பாருங்க என்றார். ம்ஹும். இல்லை. நிறைய அகதா கிறிஸ்டி ரக மொழிபெயர்ப்புகள் பளபளப்பாக மலைபோல் அடுக்கப்பட்டிருந்தன. அகதா கிறிஸ்டிக்குப் போட்டி ஆச்சார்ய ரஜனீஷ். இலக்கியம் நீங்கலாகப் பிற துறைகளில் மொழிபெயர்ப்புகள் சக்கைபோடு போடுகின்றன.

இந்த வருடம் கவனம் கவர்ந்தவை வரிசையில் கையடக நூல்கள் முதலாவது. எது எடுத்தாலும் பத்து ரூபா என்று ஒரு வண்டி இறக்கியிருக்கிறார்கள். வினவு தளத்தில் வெளியான பல கட்டுரைகளைத் துறை வாரியாகப் பிரித்து சிறு சிறு பிரசுரங்களாகக் கீழைக்காற்றில் வைத்திருக்கிறார்கள். இலக்கிய மொக்கைகள் நன்றாக விற்கிறது. எடுத்துப் புரட்டினால் சுண்டி இழுக்கிறது, அவர்கள் கையாளும் மொழி. இருபத்தியோராம் நூற்றாண்டில் வளமான தமிழ் என்றால் அது புரட்சிகர கம்யூனிஸ்டுகளிடம்தான். குறிப்பாக அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளைத் திட்டும்போது எங்கிருந்துதான் அத்தனைப் பேரெழில் ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதோ தெரியவில்லை. வெகுஜன சுவாரசியத்துக்கு பங்கமில்லாமல், அதே சமயம் தீவிரம் குறையாமல் நல்ல தமிழ் எழுத விரும்புகிறவர்களுக்குத் தயங்காமல் இந்தப் புத்தகங்களை சிபாரிசு செய்வேன்.

காகிதப்பூ பதிப்பகம் என்கிற பெயரில் மல்லிகை மகள் பத்திரிகைக்காரர்கள் ஒரு ஸ்டால் போட்டிருக்கிறார்கள். அங்கே என் சொக்கனுக்குத் தனியே ஒரு போஸ்டர் – போட்டோ போட்டு வெளியிட்டிருக்கிறார்கள். பயல் ஒரு நல்ல வைரஸாக எல்லா இடத்திலும் சத்தமில்லாமல் பரவியிருக்கிறான். பார்க்க சந்தோஷமாக இருந்தது. என்ன இருந்தாலும் என் முதல் மாணவன்!

மாலை நேர மனமகிழ் விழாவில் இன்றைக்குப் பட்டிமன்றப் பேச்சாளர் கு. ஞானசம்பந்தன். வழக்கம்போல் மூன்று வரிக்கொரு ஜோக், இடையிடையே குற்றாலக் குறவஞ்சி, பெரும்பாணாற்றுப்படை, குடும்பக் கதைகள், குட்டி கிச்சுகிச்சுக்கள். ஒரு சாம்பிள்: அந்தக் கடை காப்பி ஏன் இத்தனை கறுப்பாக இருக்கிறது? அதுதான் பாலக் காட்டார் கடையாச்சே?

ம.தி.மு.க. ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் முருகேஷ், வெண்ணிலா, ந.வே. அருள், பழைய குமுதம் நண்பர்கள் சிலர் [அவர்களது ஸ்டாலில் ஞாநியின் புத்தகத்தை வெளியிட்டார்கள்], இயக்குநர் முருகதாஸ், இயக்குநர் சி.வி. ராஜேந்திரன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் – இன்றைய தரிசனம்.

வலையுலகம் அறிந்த நண்பர் அருண் வைத்தியநாதனை இன்று சந்தித்தேன். சிநேகா, பிரசன்னாவை வைத்து அச்சமுண்டு அச்சமுண்டு படம் எடுத்துக்கொண்டிருப்பவர். உட்கார இடமில்லாமல் ஒரு மரத்தடியில் நானும் பத்ரியும் அவருடன் நின்றபடி ஒரு மணிநேரத்துக்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் முகங்கள் + ஹாலிவுட் டெக்னீஷியன்கள் என்னும் புதிய கலவையில் உருவாகும் அவரது திரைப்படம் பற்றி நிறைய பேசினார். [இசை கார்த்திக் ராஜா] படமெடுப்பதில் ஹாலிவுட்காரர்கள் காட்டும் ப்ரொஃபஷனலிசம் பற்றி அவர் சொன்னதையெல்லாம் நமது மதிப்புக்குரிய இயக்குநர்கள் கேட்டிருக்கவேண்டும். என்னத்தைச் சொல்ல? கொஞ்சம் சினிமா உலகோடு தொடர்பு உள்ளவன் என்கிற வகையில் அருண் விவரித்த பல விஷயங்கள் எனக்கு மேஜிக்கல் ரியலிசமாகவே பட்டன.

அருண் மிக உற்சாகமாக இருக்கிறார். படமெடுப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலையை விட்டபோது சுற்றமும் நட்பும் எப்படியெல்லாம் அச்சமூட்டினார்கள் என்பதை நகைச்சுவையுடன் விவரித்தார். ‘ஆனால் அச்சமுண்டு அச்சமுண்டு நான் நினைத்தபடி வந்துவிட்டது.’ அவர் விவரித்த, இந்தப் படமெடுத்த கதையே இன்னொரு திரைப்படம் மாதிரி இருந்தது. முடிந்தால் பிறகு தனியே எழுதுகிறேன். அல்லது அருணை Making of this Movie எழுதவைக்கிறேன்.

ஒரு விஷயம். அருண் மாதிரி நல்ல கனவுகளுடன் சினிமாவுக்கு வருபவர்கள் குறைவு. இவர்கள் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றுகிறார்களோ இல்லையோ, அது இவர்களை மாற்றிவிடாமல் இருந்தால் சரி.

[பி.கு: இந்தப் பதிவு ஏன் நேற்றே எழுதப்படவில்லை, இன்று முதல் என்னுடைய புத்தகக் கண்காட்சிப் பதிவுகள் வருவதில் என்ன/ஏன் சிக்கல் என்பது போன்ற சில விவரங்களை அடுத்த பதிவில் வாசிக்கவும்.]
Share

1 comment

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!