உலக நாடுகள் விரும்பினால் கோ-வின் தளத்தின் தொழில்நுட்பத்தை அளிக்கத் தயாராக இருப்பதாக நமது பிரதமர் அறிவித்திருக்கிறார். நவீன காலத்தில் தானத்தில் சிறந்தது தொழில்நுட்ப தானம்தான். சந்தேகமேயில்லை. என் கவலையெல்லாம் கடந்த இரு வாரங்களாக அந்தத் தளத்துடன் துவந்த யுத்தம் புரியும்போது நான் அளித்த சாபங்களை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அளித்தால் பாரதப் புண்ணிய பூமி தாங்காதே என்பதுதான்.
நான் முதல் முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சென்றபோது (மார்ச் 11, 2021) இந்தத் தளம் உருவாகியிருக்கவில்லை. அல்லது பிரபலமாகவில்லை. இன்னும் அல்லது கட்டாயமாக்கப்படவில்லை. என் பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குத் திட்டமிடாமல் கிளம்பிச் சென்றேன். ஆதார் அட்டையைக் காட்டி தடுப்பூசி செலுத்திக்கொண்டு திரும்பிவிட்டேன். மொத்தமே அரை மணி நேர வேலைதான். எல்லாம் சுலபம். எல்லாம் சுபம்.
ஆனால் இரண்டாவது தவணைக்கான கெடு நாள் வந்தபோது (ஆ, அந்த கெடு நாள் முதலில் முப்பது தினங்களாகவும் அடுத்து ஒரு மண்டல காலமாகவும் பின்னும் மூன்று மாதங்களாகவும் கிருமியைப் போலவே பல்கிப் பெருகிய வரலாறு தனி.) எனக்குத் தொற்று ஏற்பட்டது. சரியாக ஒரு மாத காலம் அதனோடு துவந்த யுத்தம் புரிந்து ஒருவாறு எழுந்து நடமாடத் தொடங்கியபோது தொற்றிலிருந்து மூன்று மாதம் கழித்துத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்று சொன்னார்கள்.
யார் சொல்வது சரி அல்லது எது சரி என்ற முடிவுக்குத் தப்பித் தவறிக்கூட யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் யாரோ மிகவும் கவனமாக இருப்பது போலத் தோன்றியது. ஆளுக்கொரு ஆலோசனை, நாளுக்கொரு வழி காட்டல். நல்லது. கஷ்ட நேரத்தில் பதற்றம் எல்லோருக்கும்தான் இருக்கும். நமக்குத் தோன்றியதைச் செய்வோம் என்று நூறு நாள் என்று எனக்கு நானே ஒரு கெடு விதித்துக்கொண்டேன்.
சரியாக நூறு நாள் ஆனதும் கோ-வின் தளத்தில் பதிவு செய்ய முயற்சி செய்யத் தொடங்கினேன். தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஓடிபி வாங்குகிற வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் ஊரைச் சொல்லி நேரம் கேட்டால் உடனே துரத்திவிடும். திரும்பத் திரும்ப இது நடந்து நாம் கடுப்பாகும் நேரத்தில், அதெல்லாம் இல்லை; நான் நல்லவன்தானப்பா என்று அதுவே அரவணைத்து வழி நடத்திப் போகும். ஆனால் கிட்டே போய்ப் பார்த்தால், கோவி ஷீல்ட் இல்லை; கோ வேக்சின் மட்டும்தான் என்று சொல்லிவிடும். கோவி ஷீல்ட் இருக்கும் தினங்களில் உனக்கு ஸ்லாட் இல்லை என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிடும்.
ஒரு நாள் இரண்டு நாள் என்றால் சரி. தலைவன் ஒரு வாரத்துக்கும் மேலாக இப்படியே எனக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் சிறப்பு முகாம் நடக்கிறது; அங்கே போனால் நேராகப் போட்டுக்கொண்டு வந்துவிடலாம் என்று யாரோ சொல்லி என் மனைவி வீரத் திலகம் இட்டு வழியனுப்பி வைத்தார்.
எட்டு மணிக்குப் பள்ளி வளாகத்தில் இருக்க வேண்டும் என்று முதல் நாளே அறிவுறுத்தியிருந்ததால் ஏழே முக்காலுக்கே அங்கு சென்றுவிட்டேன். பார்த்தால் அதிகாலை ஆறு மணியில் இருந்து அங்கே ஒரு வீரர் கூட்டம் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்தது. (இந்த வீரர்கள் அனைவரும் தடுப்பூசியெல்லாம் மாயை. நான் அதெல்லாம் போட்டுக்கொள்ளவே மாட்டேன் என்று தொடக்க காலத்தில் வீர வசனம் பேசியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
வரிசையில் நின்றாலும் ஐம்பது பேருக்குத்தான் டோக்கன் என்று சொன்னார்கள். நான் நிச்சயம் ஐம்பதில் ஒருவனல்ல என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும் நப்பாசைப்பட்டுக் காத்திருந்தேன். இறுதியில் ஒன்பது மணிக்கு ஒரு செவிலியர் தெய்வம் அங்கு வந்து சேர்ந்தது. ‘கோ வாக்சின் மட்டும்தான். மற்றவர்கள் போய்விடலாம் என்று சொன்னது.
‘அம்மா, கோவி ஷீல்ட் என்று சொன்னார்களே?’
‘நாங்கதான் சார் சொன்னோம். ஆனா பாக்ஸ தொறந்தா கோ வேக்சின் தான் இருக்கு. என்ன செய்ய?’
‘ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி, கோவி ஷீல்ட் எப்போது வரும்?’
‘நாளைக்கு வாங்க.’
‘மர்மப் பெட்டியில் நாளை நிச்சயமாக கோவி ஷீல்டாகத்தான் இருக்குமா?’
‘தெர்ல சார். அப்டித்தான் நினைக்கறோம். ஏன்னா நேத்து கோவி ஷீல்ட் வந்தது. இன்னிக்கு கோ வேக்சின். அப்படின்னா நாளைக்கு திரும்ப ஷீல்டுதானே?’
தனியார் மருத்துவமனைகளில் ரூ. 780 செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள். பணமல்ல பிரச்னை. வருடம் தவறாமல் ஒழுங்காக வரி கட்டுகிற குடிமகனாக ஒரு குருட்டு அல்லது முரட்டுப் பிடிவாதம் இருந்தது. அரசாங்கம் இலவசமாகத் தடுப்பூசி தரும்போது எதற்குத் தனியாரிடம் போகவேண்டும் என்கிற தரமே இல்லாத அற வினா. ஆனால் அறம் பழுத்து மடியில் விழுவதற்குள் அடுத்த அலை வந்துவிடும் போலிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது.
எனவே பேட்டையிலேயே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொண்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.
‘அது ஒண்ணும் பிரச்னை இல்லிங்க சார். நீங்க கோ-வின்ல பதிவு மட்டும் பண்ணிடுங்க. நம்ம ஹாஸ்பிடல்லயே போட்றலாம்’ என்று நண்பர் ஐயனார் சொன்னார்.
சோலி முடிந்தது. தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தித் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கோவின் அவசியம்.
வேறு வழியின்றி மீண்டும் என் முயற்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் இன்று போய் நாளை வா. சில நாள் தொலைபேசி எண்ணையே டைப் செய்ய முடியாமல் போய்விடும். நான ஒரு எண்ணை அழுத்தினால் அது வேறொரு எண்ணாக உரு மாற்றம் கொள்ளும் அற்புதத்தை எல்லாம் பார்த்தேன். ஒரு நாள் ஓடிபி வர அரை மணி நேரம் எடுத்தது. வந்த ஓடிபியை உள்ளே போட்டால், போடா வெளியே; திரும்ப முதலில் இருந்து பரோட்டா சாப்பிட ஆரம்பி என்று சொல்லிவிட்டது.
எப்படியோ முட்டி மோதி நேற்று மாலை வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்தேன். இன்று தடுப்பூசியும் போட்டாகிவிட்டது.
இப்போது என்ன சிக்கல் என்றால் இரண்டாம் தவணைச் சான்றிதழை டவுன்லோட் செய்ய முடியவில்லை. திரும்பவும் தொலைபேசி எண். திரும்பவும் ஓடிபி. சற்று முன் (இக்கட்டுரையை எழுதத் தொடங்கும் முன்) கோ-வின் தளத்தில் என் தொலைபேசி எண்ணை டைப் செய்தேன். அப்போது நிகழ்ந்ததை சொற்களில் வர்ணிக்கவே முடியாது. பத்து இலக்கத் தொலைபேசி எண், என் கண்ணெதிரே பதினேழு இலக்கமாக உருமாறி நின்றது! முதல் ஏழு எண்களும் தலா இருமுறை பிரசுரமாகியிருந்தன. அதைக் கவனிக்காமல் நான் பொத்தானை அழுத்தி ஓடிபி அனுப்பச் சொல்லிக் கேட்டால், ‘கூமுட்டை! பத்து இலக்கங்களை மட்டும் டைப் செய்’ என்று சொன்னது. திரும்பவும் அழித்துவிட்டு அடித்தால், திரும்பவும் பதினேழு இலக்கம்.
780 ரூபாய் வாங்கிக்கொண்டு ஊசி போட்ட தனியார், அந்த மரியாதைக்கு ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்துத்தான் அனுப்பி வைத்தார்கள் என்பதால் இறுதிவரை எனக்கு இது டவுன்லோட் ஆகாவிட்டாலும் பிரச்னை இல்லை. இதையே அரசு மருத்துவமனைகளிலோ, முகாம்களிலோ ஊசி போட்டுக்கொள்பவர்கள் சந்திக்க நேர்ந்தால் என்னாவது? என்ன பெரிய டிகிரி சர்ட்டிபிகேட் பாழாய்ப் போகிறது என்றெல்லாம் அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள். இரண்டு தவணைகளுக்கும் சர்ட்டிபிகேட் வைத்திருப்போருக்கு மட்டும்தான் இ பாஸ் என்று அடுத்த அலையின்போது அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.