நீலநகரத்து சூனியன் இப்போது நீலவனத்துக்கு வந்திருக்கிறான். அவன் அந்த நீலவனத்தைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் சொல்கிறான். அந்த வனத்தின் சிறப்புகளில் ஒன்றாக அங்கே இருக்கும் நூலகத்தை குறிப்பிடுகிறான். அந்த நூலகத்தில் இருக்கும் நூலகர் அவனிடம் பிடிஎஃப் கேட்டது பாராவின் டச்.
சைவ உணவு உண்ணும் பழங்காலத்து யாளிகளை அவன் அங்கே காண்பது சிறப்பிலும் சிறப்பு. அது மட்டுமில்லாமல் அங்கே இருக்கும் வெவ்வேறு இனக்குழுக்கள் மாற்று குழுக்களை ஒரு குகைக்குள் சென்று கண்டபடி வசை பாடுவதும், அதே மாற்றுக் குழுவினர் வெண்பலகை வரும் போது அன்பின் சகோ என்று அழைப்பதும் அந்த வனத்தின் எதார்த்தமாக சொல்லப்படுகிறது.
அந்த வனத்திற்கு வருபவர்களை பூச்செண்டு கொடுத்து வரவேற்பது போல, அங்கே ஒரு கவிதை சொல்லி வரவேற்பது ஒரு பழக்கமாகவே இருக்கிறது. அப்படி சூனியனுக்குச் சொல்லப்பட்ட அந்த கவிதையைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது மனுஷ்யபுத்திரனின் கவிதை அல்லவா? அப்படி என்றால் அந்த மனிதரும் இந்த கதைக்குள் நுழைந்து விட்டாரா என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன். ஆனால் இந்த அத்தியாயம் முடியும்வரை அதைப்பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
சூனியன் தான் படைத்த அனைவரையும் அந்த வனத்திற்கு வரவழைக்கிறான். அங்கே வைத்துத்தான் அவன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வதாக திட்டம் என அறிகிறோம். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.