அழைக்காதே.

ஒரு நூதனமான வழக்கம் உருவாகி வருவதைக் காண்கிறேன். முன் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் திடீரென்று மெசஞ்சரில் வருகிறார். ‘என் சிறுகதைத் தொகுப்பு / கவிதைத் தொகுப்பு / நாவல் வெளியாகியிருக்கிறது. உங்கள் முகவரி தந்தால் கொரியரில் அனுப்பி வைக்கிறேன்’ என்று ஒரு வரி மெசேஜ் அனுப்புகிறார். நான் பதிலளிக்காவிட்டால் மீண்டும் அதே மெசேஜ் மறுநாள் வரும். அப்போதும் பதில் சொல்லாவிட்டால், ‘ஒரு எழுத்தாளருக்கு இவ்வளவு ஆணவம் கூடாது’ என்று தீர்ப்பு எழுதிவிட்டு பேனா நிப்பை உடைத்துவிடுகிறார்கள்.

சில சமயம் இப்படிப்பட்ட மெசேஜ் வரும்போது, நான் படிக்க விரும்பும் புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ளும் வழக்கம் உள்ளவன்; உங்கள் அன்புக்கு நன்றி என்று வேலை மெனக்கெட்டு பதில் சொல்வேன். கூசாமல் உடனே ஜி பே அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து, அதிர்ச்சியடையச் செய்துவிடுகிறார்கள்.

இதில் மூன்றாவது ரகத்தினரும் உள்ளனர். எங்கிருந்தாவது நமது முகவரியைத் தெரிந்துகொண்டு கேட்காமலேயே புத்தகத்தை அனுப்பிவிடுவார்கள். பிறகு, ‘கிடைத்ததா? படித்தீர்களா?’ என்று இரண்டு நாளுக்கொரு முறை கேட்பார்கள். நான் என்ன பதில் சொல்ல?

எப்படி எனக்கு அடுத்தவர்களைப் புண்படுத்தும் / துன்புறுத்தும் விருப்பம் இல்லையோ, அதே போலத்தான் சுய துன்புறுத்தல்களிலும் விருப்பமில்லை. படித்தே தீரவேண்டும் என்று நான் காசு கொடுத்து வாங்கி வைத்திருப்பதையெல்லாம் முடிக்கவே இந்தப் பிறவி போதாது என்று அச்சமாக இருக்கிறது. ஒரு நாளில் ஏழெட்டு முறை பத்து பத்து நிமிடங்களாகப் பிய்த்தெடுத்துப் படித்துக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய ஜென்மத்தை இவர்கள் பெருங்கொடுமைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை எப்படிப் புரிய வைப்பேன்? சொன்னால் வெட்கக் கேடு. ஆனாலும் சொல்லி விடுகிறேன். திரைப்படங்களையே இருபது நாள்களாக, ஒரு மாதமாக தினமும் இரண்டு மூன்று நிமிடங்கள் பார்த்துத் தீர்க்கிறேன். இந்தக் கொடுமையெல்லாம் என் எதிரிக்கும் நேரக்கூடாது.

சந்தடி சாக்கில் இதே ரகத்தைச் சேர்ந்த வேறொரு பிரச்னையைக் குறித்தும் சொல்லிவிடுகிறேன். என்னை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும், என்னிடம் தொலைபேசிக் கருவி இருப்பதே ஒரு தண்டத்துக்குத்தான் என்பது. எழுதிக்கொண்டிருந்தால் எடுக்க மாட்டேன். வாயில் மாவா இருந்தால் எடுக்க மாட்டேன். தூங்கும் மதியங்களில் எடுக்க மாட்டேன். படிக்கும்போது எடுக்க மாட்டேன். யோசிக்கும்போது எடுக்க மாட்டேன். வண்டி ஓட்டினால் எடுக்க மாட்டேன். மீட்டிங் எதிலாவது இருந்தால் எடுக்க மாட்டேன். இவை இல்லாத பொழுது என்ற ஒன்று அநேகமாக இருக்காது என்பதால் எப்போதும் எடுக்க மாட்டேன்.

தப்பித்தவறி எடுத்துப் பேசத் தொடங்கி, நடுவே யாராவது படியளப்போர் அழைத்துவிட்டால் அப்படியே கட் செய்துவிட்டுப் போய்விடுவேன். திரும்பக் கூப்பிடுவேனா என்பது நிச்சயமில்லை. அது ஒரு பெரிய ஒழுங்கீனம் என்று மனச்சாட்சி மிகவும் உறுத்தும். என்ன செய்ய? உறுத்துவது அதன் இயல்பு. உறுத்தலையும் சேர்த்து மறப்பது என் இயல்பு.

என்னுடைய இந்தப் பண்பு நிறைய உறவுகளை முறித்திருக்கிறது. சமீபத்தில்கூட ஒருநாள் சாரு எதோ முக்கியமாகப் பேச அழைத்திருந்தார். அவர் அழைத்தபோது நான் எடுக்கவில்லை. அவரது அழைப்பைப் பார்க்கவும் இல்லை. மறுநாள் மாலை வரை பொறுத்திருந்துவிட்டுக் காட்டமாக ஒரு மெசேஜ் போட்டார். பதறியடித்து போன் செய்து மன்னிப்புக் கேட்டேன். இருபத்தைந்து வருடங்களாக அவருக்கு என்னைத் தெரியும். அதனால் பொறுப்பார். மற்றவர்களால் இது முடியுமா?

என் தொலைபேசி ஒழுங்கீனங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல், அதற்காக இன்றுவரை கோபித்துக்கொள்ளாதிருக்கும் ஒரே நபர் மாமல்லன். எத்தனையோ முறை அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவசர வேலை வந்து பாதியில் நிறுத்தியிருக்கிறேன். பிறகு அழைக்க மறந்துவிடுவேன். ஒருபோதும் அவர் அதைப் பொருட்படுத்தியதில்லை. திரும்ப அவரே கூப்பிடுவார். என் ஒழுங்கீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டாமல், விட்ட இடத்தில் இருந்து நேரடியாக உரையாடலைத் தொடங்குவார். அதெல்லாம் கடவுள்களாலும் குழந்தைகளாலும் மட்டுமே முடியும்.

நிற்க. இதனை இவ்வளவு விரிவாகச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. ‘சார் உங்களுடைய …. புத்தகம் படித்தேன். உங்களுடன் பேசியே தீர வேண்டும். இது …. என்னுடைய எண். உங்கள் எண்ணைத் தர முடியுமா?’ என்று கேட்பார்கள். ஒருவர் இருவரல்ல. அநேகமாக தினமொரு மின்னஞ்சல் அல்லது மெசஞ்சர் செய்தி வரும். ஒவ்வொரு வாசகரும் எனக்குக் குல தெய்வம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் தெய்வங்களுடன் பேசிக்கொண்டிருந்தால் சோலி கெட்டுவிடும். கொடுத்த சோலியைக் கெடுத்தவனானால் பிறகு எந்த தெய்வமும் ஏறெடுத்தும் பாராது.

ஆனால் ஒரு ஒழுக்கம் வைத்திருக்கிறேன். எல்லா மெசேஜுக்கும் பதிலளிப்பது. உடனுக்குடன் முடியாவிட்டாலும் என்றாவது பதிலளித்துவிடுகிறேன். நமக்குப் பேசுவதுதான் பிரச்னை. எழுதுவதில் அல்ல. எனவே, என் வைடூரியச் செல்வங்களே, எதுவானாலும் எனக்கு எழுதுங்கள். மின்னஞ்சலிலோ, மெசஞ்சரிலோ கேளுங்கள். நிச்சயமாக பதில் வரும். ஆனால் பேசக் கூப்பிடாதீர்கள். குறிப்பாகப் புத்தகம் அனுப்புவது / அனுப்பியது குறித்து.

Share

2 comments

  • சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து போய் கொண்டு இருக்கிறீர்கள். எங்களுக்கெல்லாம் நிறைய நேரம் போனில் தான் வீணாகிறது

  • நான் கொஞ்சம் இப்படித்தான் என்று தெளிவாக ஸ்லேட்டில் பலமுறை கூறிவிட்டீர்கள். எல்லாவற்றையும் தாண்டிய நட்புக்கு புரியும்.புரிந்தோர் உடனிருப்பர்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter