கி.ரா.

சரியாக எட்டு வருடங்கள் ஆகின்றன, நான் அவரைச் சந்தித்து. நேற்று நேர்ந்தது. அதே புன்னகை. அதே அன்பான தோள் தட்டல். அதே நலன் விசாரிப்புப் பாணி. அதே ‘அழகிய’ சென்னைத் தமிழ்.

நல் ஊழ் மட்டுமே நல்ல ஆசிரியர்களை நமக்குக் கொண்டுவந்தளிக்கும். கி.ரா. என்கிற கி. ராஜேந்திரன் எனக்கு அம்மாதிரி.

கார்ட்டூனிஸ்ட் மதியின் ‘அடடே’ புத்தக வெளியீட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். தம் மகளும் தற்போதைய கல்கி ஆசிரியருமான சீதா ரவியுடன் வந்திருந்தார். முதல் பார்வையில் என்னென்ன மாற்றங்கள் தென்படும் என்று எண்ணிக்கொண்டுதான் காத்திருந்தேன். ஒன்றுமில்லை. நரை சற்றுக் கூடியிருந்ததோ என்னவோ. அதனினும் வெண்மையான அவருடைய புன்னகையில் அதுகூடச் சரியாகத் தென்படவில்லை.

உள்ளே நுழைந்ததும், வெளியாகவிருந்த ஆறு தொகுப்புகளுக்குமான சரியான தொகையை ஒரு கவரில் போட்டுக் கையில் திணித்து, ‘அப்பறம் மறந்துடுவேன். மொத காப்பி வாங்கினது நானா இருக்கோணும்’ என்கிற அவரது ஸ்டைல்கூட அப்படியே.

அவர் அருமையாகப் பேசுவார். எந்தக் கூட்டத்துக்கு அழைத்தாலும் எழுதித் தயாரித்து வந்து, கவனமாக – அதே சமயம் சுவாரசியம் குறையாமல் உரையாற்றுவார். நேற்றைய விழாவில் கலாம் தவிர வேறு யாருக்கும் பேசும் வாய்ப்பு இல்லை. எனவே கி.ராவுக்கும். சரியாக ஐந்து நிமிடம் முன்னால் வருவது, நிகழ்ச்சி முடிந்ததும் ஐந்து நிமிடங்கள் காத்திருந்து அனைவரிடமும் விடைபெற்றுச் செல்வது என்கிற அனைத்து வழக்கங்களும் அப்படி அப்படியே.

கி.ரா. ஒரு பர்ஃபெக்‌ஷனிஸ்ட்.

*

1992ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி கி.ராவை நான் முதல் முதலில் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில் சந்தித்தேன். வரச்சொல்லியிருந்தார்.

‘நல்லா எழுதறிங்களே. கல்கிக்கு வந்துரலாமா?’ என்று கேட்டார்.

மிஞ்சிப்போனால் பத்து நிமிடங்கள் நீண்டிருக்கும் அச்சந்திப்பு. மூன்று விஷயங்களை அன்று அவர் எனக்குச் சொன்னார். பார்த்துக்கொண்டிருக்கும் பணியை அந்தரத்தில் விட்டுவிடவேண்டாம். பொறுப்பாக முடித்துக்கொடுத்துவிட்டு வாருங்கள், தாமதமானால் பரவாயில்லை என்பது முதலாவது. வாரப்பத்திரிகையின் பணிச்சுமை அதிகமாக இருக்கும், தயாராக வாருங்கள் என்பது இரண்டாவது. நன்றாக எழுதுகிறீர்கள் என்பதனால்தான் அழைக்கிறேன்; ஆனால் பத்திரிகைக்கு உள்ளே வந்துவிட்டால் எழுதுவது குறைய நேரிடும், பரவாயில்லையா? என்பது மூன்றாவது.

என் விஷயத்தில் அந்த மூன்றாவது கவலை அவருக்கு இருந்திருக்கவேண்டாம் என்பதை அவரே பின்னால் புரிந்துகொண்டிருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலான நல்ல எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு உள்ளே சென்றதும் முன்னாள் எழுத்தாளர்கள் ஆகிவிட நேர்வது இன்றளவும் தவிர்க்கமுடியாமல்தான் உள்ளது.

கல்கியில் சேர்ந்த புதிதில் அவரிடம் நான் வியந்த விஷயம், ஒழுங்கு. மிகக் கறாரான ஒழுங்காளி அவர். ஒரு வரி – ஒரு வார்த்தை பேசினாலும் உடனே ஒரு குட்டித்தாளில் எழுதி வைப்பார். எழுதியதைத் தன் சூட்கேஸில் பத்திரமாக வைத்து மூடியபிறகுதான் அடுத்தவரி பேசுவார். நினைவில் வைத்து, முடித்தாகவேண்டிய காரியம் என்றால், அடுத்த சந்திப்பில் குட்டித்தாளைத் தேதி பார்த்துத் தேடியெடுத்து நினைவு படுத்துவார். கி.ராவின் சூட்கேசில் எப்போதும் இம்மாதிரியான நூற்றுக்கணக்கான குட்டித்தாள்கள் இருக்கும்.

எனக்குத் தெரிந்து தலையங்கங்களுக்காகவே அதிகம் வாசிக்கப்பட்ட பத்திரிகை, கல்கி. கி.ராவின் தலையங்கங்களில் அங்கதம் மிக முக்கியமானதொரு அம்சம். அவரளவு நேர்த்தியாக அரசை விமரிசிப்போர் தமிழ்ப் பத்திரிகை உலகில் யாருமில்லை என்பது என் கருத்து. அவருக்கு விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை. எதற்குமே உணர்ச்சிவசப்படமாட்டார்.
‘அது என்னாங்க அவுரு இப்பிடி சொல்லிப்புட்டாரு.. நாம என்னான்னு நெனைக்குறது? சொன்னது தப்புங்கன்னு எட்த்து சொல்லத்தாவலியா? அதான் அப்பிடி எழுதினேன். சரியா வந்திருக்குதுங்களா?’

அடிக்கடி கேட்டிருக்கிறார். இருபது வயதுப் பையன் தானே, இவனுக்கு என்ன தெரியும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவரது பிரத்தியேகமான துண்டுத்தாளில் கடுகு அடுக்கி வைத்தமாதிரி சரியாக ஐந்தே முக்கால் பக்கம் எழுதி, பின் அடித்து தலையங்கம் அனுப்பிவைப்பார். நாலு வரி அதிகமாகியிருக்கும் என்று தோன்றினால், அனுப்பிய கையோடு போன் செய்வார். ‘கொஞ்சம் பெரிசாயிருச்சின்னு நெனைக்கறேன். வேணா வெட்டிக்குங்க’ என்பார்.

அனுபவமற்ற அந்த வயதுகளில் இது எனக்களிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக உணர்ந்திருக்கிறேன். கம்ப்யூட்டர், வேர்ட் கவுண்ட் எல்லாம் கல்கிப் பக்கம் எட்டிப்பார்த்திராத காலத்தில் எழுதுபவரின் கையெழுத்து, தாளின் அளவைக் கொண்டே எத்தனை இஞ்ச்சுக்கு மேட்டர் வரும் என்று துல்லியமாகச் சொல்லுவார். அவரது கணிப்பு செண்டிமீட்டர் அளவுக்குக் கூட மாறாது.

தமிழக அரசியல், இந்திய அரசியல், சரித்திரம், மருந்து மாத்திரைகள் பற்றியெல்லாம் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். கி.ரா. படித்தது பி.ஃபார்ம். மருந்துக்கடைப் படிப்பு. ஆரோக்கியத்தில் எப்போதும் அவருக்குக் கவனம் உண்டு. தினசரி யோகாசனம் செய்வார். பிராணாயாமம் செய், உன் தும்மல் நின்றுவிடும் என்று எப்போதும் சொல்வார். மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமியின் இசை தெரபியிலிருந்து குரோம்பேட்டை டாக்டர் மாத்யூவின் அலர்ஜிக்கான அலோபதி சிகிச்சைகள் வரை அனைத்தையும் முயற்சி செய்து தோல்வியுற்றிருந்தேன்.

கி.ராவின் பிராணாயாம வைத்தியம்தான் இறுதியில் என் ஓயாத தும்மலை நிறுத்தியது.

எனக்குத் திருமணமான புதிதில் ஒருநாள் அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

கி.ராவும் அவரது மனைவியும் மட்டுமே அங்கு இருந்தார்கள். வீட்டிலும் அவரது பிரத்தியேக ஒழுங்கு நடவடிக்கைகள் ஒவ்வொரு அங்குலத்திலும் தென்பட்டது. ஒரு ஓரமாக மேசை போட்டு அதில் உணவுப் பாத்திரங்களை மூடி வைத்திருந்தார்கள்.

‘பேண்டு போட்டுக்கினு வந்திருக்கிங்க. உக்காந்து சாப்ட்டா சரியா சாப்டமாட்டிங்க. அதான் பஃபே ஸ்டைல்ல செஞ்சிர சொல்லிட்டேன். அப்பிடியே எட்த்துப் போட்டுக்கினு சாப்டலாம்ல?’

என் வாழ்வில் சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, தயிர், பச்சடி, பாயசம், வடையுடன் கூடிய ஓர் உணவை நின்று உண்டது அன்று மட்டுமே. கிளம்பும்போது என் மனைவியிடம் ‘பத்திரிகைக்காரன கல்யாணம் கட்டிக்கிட்டமேன்னு அப்பால வருத்தமெல்லாம் படாதம்மா. எல்லா பத்திரிகைக்காரங்களுக்கும் தாலி கட்ன பொண்டாட்டி ரெண்டாந்தாரம்தான். பத்திரிகைதான் மொத சம்சாரம். வேணா என் ஒய்ஃபாண்ட கேட்டுக்க’ என்று சொன்னார்.

இன்றுவரை என் வீட்டில் புரட்சி வெடிக்காமல் காப்பாற்றும் வைரசூத்திரமாக அதுவே இருக்கிறது.

தனது தந்தை அமரர் கல்கியின்மீது அபரிமிதமான பாசம் கொண்டவர் கி.ரா. ஒரு பேரா அளவுக்குப் பேசினாரென்றால் அதில் அவசியம் ஒருவரியாவது ‘கல்கி சார் இருந்தப்ப…’ என்கிற பிரயோகம் வராமலிராது. எனக்கு முன்னால் கல்கியில் உதவி ஆசிரியர்களாகவும் துணை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய அத்தனை பேரைப்பற்றியும், அவரவர் வேலைப் பாணி பற்றியும் மிக நுணுக்கமாக எனக்கு அவர் விவரித்திருக்கிறார். நா. பார்த்தசாரதி பற்றியும் ரா. கணபதி பற்றியும் வீழிநாதன் பற்றியும் விந்தன் பற்றியும் மீ.ப. சோமு பற்றியும் மற்ற யாருக்கும் தெரிந்ததைவிட எனக்குச் சற்று அதிகமாகவே தெரியும். பழைய காலப் பத்திரிகையாளர்களின் பணிகள் குறித்துக் கதையாகச் சொல்லிச் சொல்லி எனக்கு அவர் மறைமுகமாகப் பாடம் எடுத்திருக்கிறார் என்கிற உண்மை மிகத் தாமதமாகவே எனக்குப் புரிந்தது.

சமகாலத்தில் எழுதியவர்களில் அவருக்கு சுஜாதாவை மிகவும் பிடிக்கும். சுஜாதாவுக்குப் பிறகு வாரப்பத்திரிகைக்கு எழுத வந்தவர்கள் யார்மீதும் அவருக்கு அத்தனை பெரிய நம்பிக்கை இருந்ததாக நான் கருதவில்லை. ஆனால் எல்லா எழுத்தாளர்களையும் சமமாக மதிப்பார், நடத்துவார். அதிர்ந்து ஒரு சொல் பேசிவிட முடியாது அவரால்.

ஒரு பிரபல எழுத்தாளர் அனுப்பியிருந்த கதையொன்று நன்றாக இல்லை என்று அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். வேகமாக ஒருமுறை படித்தார். பிறகு சொன்னார்: ‘கரெக்டு. நல்லாத்தான் இல்லை. நீங்க திருப்பி அனுப்பிடுங்க. நான் போன்ல பக்குவமா சொல்லிடுறேன்’

இன்னொரு சமயம் வேறொரு மிகப்பிரபல எழுத்தாளருக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்னையாகிப் போனது. என் வயதைக் காரணம் காட்டி, என் கருத்துகள் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. அந்த எழுத்தாளருக்கு ஆத்திரம் மிகுந்து, கி.ராவுக்கு என்னைப் பற்றி ஒரு கடிதம் எழுதிவிட்டார். ‘இப்படிப்பட்ட அரைவேக்காடுகளை வேலையில் வைத்துக்கொண்டிருப்பது பாரம்பரியம் மிக்க கல்கிக்குப் பெருத்த அவமானம் சேர்க்கும்’ என்று அவர் எழுதியிருந்தார்.

கி.ரா. கடிதத்தைப் படித்துவிட்டு என்னை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டார்.

குறிப்பிட்ட எழுத்தாளரை எழுத்துக்கு அப்பாற்பட்ட வேறொரு விஷயம் தொடர்பாக பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன் அப்போது. பேட்டியின் இறுதியில், நீங்கள் என் கதை எதையும் படித்ததேயில்லையா? அது பற்றி ஒன்றுமே கேட்கவில்லையே என்று வருத்தப்பட்டார்.

நியாயம்தான். நான் அவருடைய அனைத்துப் படைப்புகளையும் படித்தவனே. ஓரிரு வார்த்தைகள் நல்லவிதமாகப் பேசியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. ஆயினும் வயதுவேகம் என்று ஒன்று உண்டல்லவா?

‘இந்த பேட்டி உங்கள் எழுத்து தொடர்பானது இல்லை சார்’ என்று சொன்னேன்.

முகம் சுளித்தார். ‘படிச்சதில்ல. அதச் சொல்லுங்க’ என்றார்.

எனக்குச் சுரீரென்று கோபம் வந்துவிட்டது. அன்று காலை வெளியான இந்தியா டுடே இதழில் பிரசுரமாகியிருந்த அவரது சிறுகதையையும் அதன் மூலமான ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத்தின் கதையொன்றையும் எடுத்துச் சொல்லி, வணக்கம் கூறி விடைபெற்றேன்.

நடந்தது இதுதான். எழுத்தாளர் கோபம் கொண்டது நியாயமே அல்லவா?

கி.ரா. சிரித்தார். ‘மறந்துருங்க. நாம இதெல்லாம் ஞாபகம் வெச்சிக்கிட்டிருக்கக்கூடாது’ என்று சொன்னார்.

‘ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத் கதையையா சார்?’

‘இல்லிங்க. இவரு எழுதின லெட்டர.’

கிழித்துப் போடவில்லை. தேதி மார்க் செய்து, அழகாக மடித்துத் தன் சூட்கேஸில்தான் வைத்துக்கொண்டார்.

அன்றைக்கு அவர் அந்தப் பிரபல எழுத்தாளர் முக்கியம் என்று நினைத்திருந்தால் இன்றைக்கு நானில்லை. நியாயங்களுக்கு அவரளித்த மதிப்பு அப்படிப்பட்டது.

கி.ராவைப் பற்றி இன்னும் எழுதலாம். ‘ஐய இன்னாத்துக்குங்க இதெல்லாம்? ஃபாரம் வேல எதனா இருந்தா பாருங்க. இல்லனா வெளிய எங்கனா போயி சுத்துங்க. ஆப்பீஸ்ல சொம்மா உக்காந்துக்கினு இருக்காதிங்க’ என்று காதுகளில் அவர் குரல் கேட்கிறபடியால் நிறுத்திக்கொள்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி