மீட்டர் போட்ட ஆட்டோ

26042008330.jpg

 

விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம்.

ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன்.

‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது.

ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப் பயன்படுத்துவதில்லை. முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, நூறு, நூற்றைம்பது என்று வாயில் வரும் எண்ணைத்தான் தொகையாகக் குறிப்பிடுவார்கள். இஷ்டமிருந்தால் ஏறலாம். திறமை இருந்தால் பேரம் பேசலாம். அதிர்ஷ்டம் இருந்தால் பேரம் படியும்.

இன்று நேற்றல்ல. வெகுகாலமாக இப்படித்தான். யாரையும் குறை சொல்வதற்கில்லை. அவரவர் சிரமங்கள் அவரவருக்கு. தவிரவும் பழகிவிட்ட விஷயத்தை யாரும் ஆய்வு செய்துகொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் பகுதி வாழ் காவலர்களுக்கு மாதம் தவறாமல் ரூ. 1500 கொடையளிக்கிற வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருவது.

எனவே மீட்டர்கள் போடப்படா. எந்தக் கேள்வி கேட்கப்படா.

ஆனால் மேற்படி கேகே நகர் டிரைவர் [அவர் பெயர் ஜெயராஜ்.] எவ்வித சலனமும் இல்லாமல் மீட்டரை ஆன் செய்துவிட்டு, ஏறுங்கள் என்றபோது முதலில் எனக்கு அச்சமாகத்தான் இருந்தது. ஒருவேளை இந்த மீட்டர் 200, 300 என்று காட்டிவிடுமோ? மீட்டர்கள் எப்படி ஓடும் என்பதே மறந்துவிட்டதனால் இந்த அச்சம்.

ஜெயராஜ் சொன்னார்: ‘இங்கேருந்து ஆழ்வார்பேட்டை எட்டு கிலோமீட்டர் வரும் சார். அம்பத்திரெண்டு ரூபா காட்டும்னு நினைக்கறேன்.’

சுவாரசியமாகி ஏறி அமர்ந்தேன். பேச்சுக்கொடுத்தபோது கேகே நகர் டிரைவர்கள் மத்தியில் ஜெயராஜுக்கு ‘லூசு’ என்றொரு பெயர் உண்டு என்கிற விஷயம் வெளிப்பட்டது.

‘நான் எத்தன சொன்னாலும் யாருக்கும் புரியல சார். மீட்டர் போட்டு வண்டி ஓட்டினா அமௌண்ட்டு கம்மியாத்தான் வரும். ஆனா ஒரு நாளைக்கு மத்தவங்களுக்குக் கிடைக்கற சவாரியவிட நமக்கு அதிகம் கிடைக்கும். கம்மியாவுற அமௌண்ட்டவிட அதுல அதிகம் புடிச்சிடலாம் சார்.’ என்று சொன்னார்.

நல்ல லாஜிக். சரியானதும்கூட. ஆனால் ஜெயராஜ் இதற்காக மட்டும் விதிமுறையைப் பின்பற்றுபவராக இல்லை.

‘என்னமாதிரிதான சார் எல்லாரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறாங்க. ஒரு அவசரம்னுதானே ஆட்டோ கூப்புடறாங்க? இதான் சாக்குன்னு ஒட்டக் கறந்தா தப்பு சார். நாளைக்கி நேநோ கார் வந்திடிச்சின்னா ஆட்டோக்காரன் ஜாதியே இல்லாம போயிட்டுதுன்னா என்ன பண்ணுவானுங்க? யோசிக்கறதே இல்ல சார் எங்காளுங்க.இப்பவே ஆட்டோல போறவங்கள்ள பாதிப்பேர் கால் டாக்சிக்கு மாறிட்டாங்க.’

நேநோ கார் அத்தனை பெரிய பாதிப்பை உண்டாக்குமா என்பது வேறு விஷயம். ஜெயராஜ் தொடர்ந்து தனது தொழில் பற்றியும் சக டிரைவர்கள் குறித்தும் வாழ்க்கை முறை மாறுதல்கள் குறித்தும் சிந்தித்துவருகிறார் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது.

அதைவிட முக்கியம், அவர் சொன்ன ஒரு தகவல். சென்னை நகரில் நீங்கள் ஏறக்கூடிய எந்த ஆட்டோவின் டிரைவரும் மீட்டர் போடக் கடமைப்பட்டவர். போட மறுத்தால், ஒன்று செய்யலாம். அவர் கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டு பேசாமல் ஏறி அமர்ந்துவிடுங்கள். அமைதியாக மொபைலை எடுத்து 98418 08123 என்கிற எண்ணுக்கு அந்த ஆட்டோவின் எண்ணை எஸ்.எம்.எஸ். செய்து, எந்த இடத்துக்குச் செல்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு அனுப்பிவிடவும்.

நீங்கள் இறங்கும் இடத்தில் போலீஸ் காத்திருக்கும். அவர்கள் முன்னிலையில் நீங்கள் மீட்டர் போட்டிருந்தால் ஆகியிருக்கக்கூடிய தொகையை மட்டும் செலுத்திவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம். டிரைவரை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை கமிஷனர் கொண்டுவந்திருக்கும் திட்டம் இது. முயற்சி செய்து பாருங்கள் என்று ஜெயராஜ் சொன்னார்.

டிரைவர்களின் மாதாந்திர 1500 ரூபா திட்டத்தின் வட்டத்துக்குள் போக்குவரத்துக் காவலர்கள் வருவதில்லை என்பதனால் இது நிச்சயம் பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பி.கு. நான் அலுவலக வாசலில் இறங்கியபோது மீட்டர் காட்டிய தொகை ரூ. 51.50. [அடிப்படைத் தொகை 14 ரூபாய். மேற்கொண்டு ஆகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 6 ரூபாய் என்பது கணக்கு.]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி