பிறந்த ஊர்

சோமங்கலம் செல்லும் சாலை

 

சோமங்கலம் என்கிற ஊரைப் பற்றி சிறு வயதிலிருந்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை, பார்த்ததில்லை, அதற்கான சந்தர்ப்பங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. அந்த ஊரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பிறந்தேன் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார்.

சென்னை தாம்பரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிற கிராமம் போன்ற ஊர்.

பிறந்த ஊர் என்று பெருமிதம் கொள்ள என்னிடம் நினைவுகள் ஏதுமில்லை. ஒன்று அல்லது இரண்டு வயதுக் குழந்தையாக நான் இருந்தபோதே என் தந்தைக்கு மாற்றலாகிவிட்டிருக்கிறது. ஆனால் நினைவு தெரிந்த நாளாக சோமங்கலம் வீடு குறித்தும் அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் அவர் வேலை பார்த்தது பற்றியும் அங்கே அவர் சைக்கிள் விடப் பழகியது பற்றியும், சுந்தர ராகவாச்சாரியார் என்கிற ஊர்ப் பெரியவர் ஒருவர், ஒருநாள் மாலை எங்கள் வீட்டுக்கு வந்து என்னை எடுத்துக் கொஞ்சி வைத்துவிட்டு நேரே சென்று கிணற்றில் விழுந்து உயிர் விட்டது பற்றியும் அவ்வப்போது கதைகள் சொல்லியிருக்கிறார்.

தற்செயலாக இன்றைக்கு நான் சோமங்கலம் வரை போகவேண்டி வந்ததில் இயல்பானதொரு சுவாரசியம் வந்துவிட்டது. நான் முன்பின் அறிந்திராத நான் பிறந்த ஊர். என்னை அங்கே யாருக்கும் தெரியாது. ஆனால் என் அப்பாவின் பெயரைச் சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அவர் எனக்குச் சொல்லியிராத வேறு சில கதைகள் அகப்படக்கூடும்.

நான் பிறந்த வீடு


ஆனால், ஊரை அடைவது அத்தனை சுலபமாக இல்லை. நான்கு திசைகளிலிருந்தும் அந்த ஊருக்குச் சாலைகள் கிடையாது. தாம்பரத்திலிருந்து கிஷ்கிந்தாவரை போவதற்கு முன்பெல்லாம் நல்லதொரு சாலை இருந்தது. பேருந்துகள் சென்று வந்தன. இப்போது நடந்து போவதுகூடச் சிரமம். மேடுகளும் பள்ளங்களும் சரளைக் கற்களும் முட்புதர்களுமாகக் கிடந்தன. இந்தக் கோடையில் கிஷ்கிந்தாவுக்கான வருமானம் நிச்சயம் அடிபடும் என்று நினைத்துக்கொண்டேன்.

சாலை போடுவதற்கான ஆரம்ப ஆயத்தங்களை இரு மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முன்னேற்றம் தென்படவில்லை.

பதினைந்து கிலோ மீட்டர் தொலைவை பைக்கில் சென்றடைய ஒன்றரை மணிநேரம் ஆனது. சென்னை பின்கோடில் வருகிற ஊர்தான் என்றபோதும் ஏராளமான விவசாய நிலங்களைக் காணமுடிந்தது. ஆனால் விவசாயம் இறந்திருந்தது. நிலமெல்லாம் வேலிகாத்தான் முட்புதர்கள். அல்லது கோரைப் புற்கள். ஒரு பக்கம் முந்திரிக் காடு. இடையிடையே அங்கும் முட்புதர்கள். அபூர்வமாகச் சில கீரைத் தோட்டங்கள். பனைமரங்கள், நீர் மங்கிய பம்ப் செட் கிணறுகள்.

கிராமம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் பழைய காலத்து வழக்கப்படி அக்ரஹாரம், வேளாளர் வீதி, வைணிகர் வீதி, காலனி என்று தனித்தனியே பிரித்துத்தான் வைத்திருக்கிறார்கள். நாகரிகம், ஸ்பீக்கர் செட் வடிவில் ஒவ்வொரு முச்சந்திக்கும் நடுவில் மந்திரப் புன்னகை, மின்னிடும் தாரகை என்று அலறிக்கொண்டிருக்கிறது. [ஒவ்வொரு மட்டன் கடையிலும் ஆளுயர ஒலிபெருக்கி வைத்துப் பாடல் போடும் வழக்கத்தை இங்குதான் முதலில் காண்கிறேன்.]

முன்போல் விவசாயம் இல்லை என்று சொன்னார்கள். மக்களில் பெரும்பாலானோர் தாம்பரத்துக்கு இடம் பெயர்ந்துவிட்டார்களாம். ஆனால் ஊருக்குள் எல்லோருக்கும் வீடு இன்னும் இருக்கிறது. கிராமப் பஞ்சாயத்து, அரசமர மேடை, சுற்றிலும் மக்கள் உட்கார இடம் என்று சின்ன கவுண்டர் லொக்கேஷன் மாதிரி இருக்கிறது.

veedu-irukkum-veedhi.jpg


நான் நுழைந்துபார்த்த பல வீடுகளில் தவறாமல் இந்திராகாந்தி போட்டோ இருக்கிறது. பக்தர்களாக இருக்கிறார்கள். [ஸ்ரீபெரும்புதூர் தொகுதி.] இந்திரா காந்தி வந்ததனால்தான் ஊருக்கு ஒரு வங்கி வந்தது, உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி ஆனது, சாலை போட்டார்கள், ஒரு குடிநீர்க் குழாய் போட்டார்கள் என்று ஆளுக்கொன்று சொன்னார்கள். இந்திரா காந்தி இறந்தபிறகு கல் குவாரி லாரிகள் சாலைகளைச் சாப்பிட்டுவிட்டன. பிறகு யாரும் சோமங்கலத்தைக் கண்டுகொள்ளவில்லை.

‘உங்கப்பா இல்லேன்னா இந்த ஊர்ல ஒருத்தனுக்கும் படிப்பு இல்லிங்க’ என்று எதிர்ப்பட்ட நபர் ஒருவர் சொன்னார். மீண்டும் சின்ன கவுண்டர்.

என் அப்பா சோமங்கலத்தில் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டபோது தலைமை ஆசிரியராகப் போய்ச் சேர்ந்திருக்கிறார். அந்தக் காலத்தில் பள்ளியாசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை அளித்திருக்கிறது சமூகம்.

‘வாத்தியார் இங்கதாங்க சைக்கிள்விடக் கத்துக்கிட்டார். சுமாரா ஓட்டுவாரு. ஆனா ஏறத் தெரியாது, இறங்கத் தெரியாது’ என்றார் ஒருவர்.

என் தந்தை சைக்கிளில் ஏறுவதற்காக யாராவது ஒருவர் ஒரு கல்லை எடுத்து வந்து ரெடியாக வைத்துக்கொண்டிருப்பாராம். அதில் காலை ஊன்றி, நிற்பவர் தோளில் கைவைத்து சைக்கிளில் ஏறி உட்கார்ந்துவிடுவார். அதன்பின் தடையேதுமில்லை.

முந்திரிக் காடு

‘எலேய், வாத்தியாரு பொறப்பட்டுட்டாரு. இஸ்கூலாண்ட போயி ரெடியா நில்லு’ என்று எங்கிருந்தோ குரல் பறக்கும். இன்னொரு சைக்கிள் பள்ளிக்கு முன்னதாக விரையும்.

மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் கிராமத்துச் சாலையை டயரால் அளந்து ஒருவழியாகப் பள்ளியை வந்தடையும்போது முன்னால் சென்ற சைக்கிள்காரன் இறங்கித் தயாராக நின்றிருப்பான். அங்கே இன்னொரு கல். அவன் தோளைப் பிடித்துக்கொண்டு தலைமையாசிரியர் கீழே இறங்கிவிட்டால் கல்விச் சேவை தடையின்றித் தொடரும்.

‘வழில மாட்டுவண்டிக்காரன் எவனாச்சும் வெக்கப்புல்லு லோடு எடுத்துக்கிட்டு வந்துட்டா தீந்துதுங்க. உங்கப்பா ஹேண்டில்பார ஆட்டுற ஆட்டுல அது தனியா கழண்டு வந்துரும்’

சிரித்தேன். இன்றுவரை என் அப்பாவுக்கு சைக்கிளில் ஏறி, இறங்கத் தெரியாது. ஆனால் ஓட்டுவார். அவர் அங்கு வசித்த – நான் பிறந்த வீட்டைக் காட்டினார்கள். ‘நீங்க இருந்தப்ப வீடு இப்பிடி இல்லிங்க. ஓட்டு வீடுதான். அப்பால ஒருத்தர் அத வாங்கி இடிச்சி இப்பிடிக் கட்டிட்டாரு’ என்றார்கள்.

ஒரு சிவன் கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் இருக்கின்றன. பெருமாள் கோயிலைவிட சிவன் கோயில் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாகச் சொன்னார்கள்.

எத்தனை தேர்தல்கள் வந்து போனாலும், யார் ஆட்சி புரிந்தாலும் பெரும்பாலான கிராமங்கள் வளர்ச்சி என்பதைப் பாராமல்தான் இன்னும் இருக்கின்றன. எப்போதாவது எட்டிப்பார்க்கும் வளர்ச்சித் திட்டங்களும் அரைகுறையாக நின்றுவிடுவதில், பாதி மேக்கப்பில் வெளியே எட்டிப்பார்க்கும் சினிமா நடிகைபோல் ஒரு ரெண்டுங்கெட்டான் தோற்றம் அவற்றுக்கு வந்துவிடுகிறது.

சோமங்கலத்துக்கு உடனடித் தேவை சாலை.

[பி.கு. என்னைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, போய்வருகிறேன் என்று விடைபெற்றுச் சென்று நேரே கிணற்றில் விழுந்து உயிர் விட்ட பெரியவரின் வீட்டுக்கும் சென்றேன். புகைப்படத்தில் அவரைப் பார்த்தேன். அசப்பில் முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சார் மாதிரி இருக்கிறார். பெரிய பண்ணையார் போலிருக்கிறது. ஊரில் ஒரு வீதியே அவருக்குச் சொந்தம். இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அவர்களது வாரிசுகள்தான் இன்னும் அந்த வீதியில் வசிக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அணுகி, ‘தாத்தா ஏன் தற்கொலை செய்துகொண்டார் தெரியுமா?’ என்று கேட்டேன். மிகவும் யோசித்துவிட்டு, ‘சரியா தெரியல. வாழ்ந்தது போதும்னு தோணியிருக்கும்!’ என்று சொன்னார்.]
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!