என் அன்பே, இலவசமே.

பொதுவாக எனக்கு இலவசங்கள் பிடிக்காது. ஒவ்வோர் இலவசத்தின் பின்னாலும் ஒரு சூது உள்ளதாகத் தோன்றும். நான் இலவசமாக எதையும் பெறுவதில்லை. தருவதும் இல்லை.

ஆனால் கிண்டில் இங்கே அறிமுகமான புதிதில் வாசகர்களை அந்தப் பக்கம் ஈர்ப்பதற்கு இலவசம் கணிசமாக உதவியதை மறுக்க முடியாது. அது ஒரு சந்தைப்படுத்தும் தந்திரம். எனக்குப் பிடிக்காத காரியம் என்ற போதிலும் முழு மனத்துடன் அதனைச் செய்தேன்.

ஏனெனில், எழுத்தாளனுக்கு இங்கே விளம்பரம் செய்யவோ, மார்க்கெடிங் செய்யவோ யாரும் கிடையாது. தமிழில் எழுதுகிற ஒருவன் அவனே இதெல்லாம் செய்துகொண்டால்தான் உண்டு. வேறு யாராவது செய்ய வேண்டுமென்றால் கட்சிக்காரனாக இருக்க வேண்டும். அல்லது ஏதாவது கலை இலக்கிய அமைப்புகள் சார்ந்து இயங்க வேண்டும். குறைந்தபட்சம் சொந்தமாக ஒரு அமைப்பு அல்லது வாசகர் குழுமம் வைத்திருக்க வேண்டும்.

எனக்குப் பிரபலமே வேண்டாம், வாசகரே வேண்டாம், என்றாவது எவனாவது தேடி வந்து படித்தால் போதும்; படிக்காவிட்டாலும் பிரச்னை இல்லை என்று இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை.

என் பிரச்னை, நான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதுதான். எனக்கு வாழ்வும் தொழிலும் இதுவே. அதனால்தான் கிண்டிலின் இலவச டவுன்லோட் வசதியை முதல் இரண்டு வருடங்களுக்குக் கணிசமாகப் பயன்படுத்தினேன். இதன் மூலம் கிண்டில் என்ற ஒரு புதிய வாசிப்பு ஊடகத்தையும், அதில் கிடைக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களையும் பலருக்குத் தெரியப்படுத்த முடிந்தது. என்னுடைய அனைத்து நூல்களையும் அங்கே வரிசைப்படுத்தி, அவ்வப்போது இலவசமாகவும் வழங்கியதன் மூலம், பழைய வாசகர்களுடன் புதிதாகப் பலரையும் சேர்த்துப் பெற முடிந்தது.

ஆயினும் முதலிரண்டு வருடங்களைப் போல அல்லாமல், மூன்றாம் வருடம் படிப்படியாக இலவசங்களைக் குறைத்து, பிறகு அடியோடு நிறுத்தினேன். அன் லிமிடெட் திட்டத்தில் கொடுத்திருந்த புத்தகங்களிலும் எழுபது சதவீதம் திருப்பி வாங்கிவிட்டேன். மிச்சமுள்ளவையும் அவற்றின் என்ரோல்மெண்ட் காலம் தீரும் வரைதான் அன் லிமிடெடில் இருக்கும். பிறகு முழுப் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இப்போது எல்லோருக்கும் கிண்டில் தெரியும். எல்லோருடைய மொபைலிலும் கிண்டில் ஆப் இருக்கிறது. எல்லோரும் படிக்கிறார்கள். எனவே பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதுதான் சரி. இன்னும் – இதற்கு மேலும் இலவசம் கேட்பது நியாயமல்ல என்பது என் கருத்து. இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. அனைத்து எழுத்தாளர்களுக்கும், அத்தனை வாசகர்களுக்கும் சேர்த்துத்தான் இதனைச் சொல்கிறேன்.

படிப்பதை அறிவுச் செயல்பாடாகவோ, பொழுது போக்காகவோ, ஃபேஷனாகவோ எண்ணிக்கொள்வது அவரவர் சௌகரியம். எனக்கு அதில் விமரிசனமே கிடையாது. ஆனால் எதுவானாலும் ஒரு விலை இருக்கிறது. வாசகருக்கு ஓர் எழுத்தாளர் எழுதுவது பிடிக்கிறது என்பதால்தான் தொடர்ந்து படிக்கிறார். பிடித்த ஒன்றுக்கு ஒரு விலை தர முடியாதா? கவனியுங்கள். கிண்டில் நூல்களின் விலை என்பது, அச்சு நூல்களின் விலையில் அநேகமாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

அதெல்லாம் எப்படியோ போகட்டும்; நான் இலவசமாகத் தந்தால்தான் படிப்பேன் என்பவர்களுக்கு என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளன.

1. இனி நீங்கள் படிக்க வேண்டாம்.
2. நீங்கள் டவுன்லோட்தான் செய்கிறீர்கள். படிப்பதில்லை.

இந்த இரண்டாவது விஷயம்தான் என்னை மிகவும் சீண்டுகிறது. கோபம் கொள்ளச் செய்கிறது. ஓர் உதாரணம் சொல்கிறேன்.

இப்போது கசடதபற இலவசம் போய்க்கொண்டிருக்கிறது. விக்கிரமாதித்யனின் புத்தகங்கள் கிண்டிலில் இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. நண்பர் அழிசி சீனிவாச கோபாலன் பல அரிய நூல்களை அவ்வப்போது இலவசமாகத் தந்துகொண்டிருக்கிறார். இந்த இலவச அறிவிப்புகளைக் கண்டதும் பாய்ந்து சென்று டவுன்லோட் செய்கிற எத்தனைப் பேர் அவற்றை முழுதும் படிக்கிறார்கள்?

‘நான் படிக்கிறேன், நான் படிக்கிறேன்’ என்று யாரும் கொடி தூக்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள். அப்படி டவுன்லோட் செய்யும் அனைவரும் அதைப் படித்தால், எழுத்தாளனுக்கு அதுவும் பணமாக மாறும். பெரிய தொகை கிடையாது. பக்கத்துக்கு 0.09 பைசா. அதாவது நீங்கள் ஒரு நூறு பக்கம் முழுதாகப் படித்தால் எழுத்தாளருக்கு ஒன்பது ரூபாய் போய்ச் சேரும். ஒரே எழுத்தாளரின் ஆயிரம் பக்கங்களைப் படித்துவிட்டீர்கள் என்றால் அவருக்குத் தொண்ணூறு ரூபாய் கிடைக்கும். இது விற்பனை ராயல்டி அல்ல. குழப்பிக் கொள்ள வேண்டாம். அன்லிமிடெட் பேஜ் ரீடின் மூலமாக வருகிற தொகை.

ஆனால் நடப்பதென்ன? ஆயிரம் பேர் டவுன்லோட் செய்கிறார்கள். முழுக்கப் படிப்பது நாற்பது பேர் கூடக் கிடையாது. இலவசம்தானே? பிறகு படித்துக்கொள்ளலாம்; இப்போதைக்கு சேர்த்து வைப்போம் என்கிற மனநிலை. இதுதான் ஒரு கட்டத்தில் உங்கள் கிண்டிலைக் குப்பை லாரியாக்கிவிடுகிறது. ஏராளமான புத்தகங்கள் சேரும். ஆனால் எதையும் படிப்பதில்லை. இலவசமாகக் கொடுத்தாலும் எழுத்தாளர் வருமானமின்றியே வாழ்வார.

இதனால்தான் நான் நிர்த்தாட்சண்யமாக இலவசத்தை நிறுத்தினேன். அப்படி படித்தே தீரவேண்டும் என்று நினைக்கும் வாசகர் காசு கொடுத்து வாங்கிப் படிப்பார். எனக்கு அதில் சந்தேகமேயில்லை. இலவச விரும்பிகள் டவுன்லோட் செய்தாலும் படிப்பதில்லை என்பதால் அவர்களை இனி கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன்.

என்னை விடுங்கள். நான் சாகா இலக்கியம் ஏதும் படைக்கவில்லை. வெகு ஜன வாசகர் தளத்தில் சிறிது மாறுபட்ட முயற்சிகளைச் செய்து பார்ப்பவன் மட்டுமே. என்ன எழுதினாலும் பணம் வாங்கிக்கொண்டுதான் எழுதுகிறேன். இதில் ஒளிவு மறைவே இல்லை. எழுத்தும் எழுத்து சார்ந்த பிற நடவடிக்கைகளும் மட்டுமே எனக்கு வருமானம். வருகிற சம்பாத்தியத்துக்கு வருடம் தவறாமல் முறையாக வரி கட்டுகிறேன். யாரும் விரல் நீட்டிக் கேள்வி கேட்டுவிட முடியாது.

ஆனால் கைக்காசு போட்டு சிற்றிதழ் நடத்தி நொடித்துப் போனவர்களும் வாழ்நாளில் தனது எழுத்துக்காக ஒரு ரூபாய்கூட சம்பாதித்திராதவர்களும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். உண்மையில் மகத்தான எழுத்தெல்லாம் அவர்களிடமிருந்து வந்தவைதாம். நவீன தொழில்நுட்ப சௌகரியங்கள் கூடியிருக்கும் இந்நாளில், அத்தகைய புதையல்கள் நமக்கு கிண்டிலில் படிக்கக் கிடைக்கிறதென்றால் – என்னைப் பொருத்தவரை அவற்றைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பதே சரி. அவ்வளவு செலவு செய்ய முடியாது என்போர், அன் லிமிடெடில் உறுப்பினராகி வாசிப்பதில் தவறில்லை. அதுவும் முடியாது; இலவசமாகத்தான் படிப்பேன் என்றால், டவுன்லோட் செய்வதையாவது தயவுசெய்து படித்துவிடுங்கள்.

அது உங்கள் அறிவுச் செயல்பாடோ இல்லையோ. சிற்றிதழ் நடத்துவதற்காகத் தங்கள் சொற்ப வருமானத்தையும் தொலைத்தவர்களுக்கு இப்போது கிடைக்கும் மிகச் சிறு பென்ஷனாகவாவது அமையும்.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி