கண்காட்சி, பயிலரங்கம், கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம், அதிக விற்பனை, அதிக சுவாரசியங்கள். பதினோறாம் தேதியே இதனை எழுதாததன் காரணம், உடம்புக்கு முடியாமல் போய்விட்டதுதான்.

கண்காட்சி சமயம் என்னவாவது படுத்தல் ஏற்படுவதென்பது என் ராசி. சென்ற வருடம் மாதிரி கால் கட்டு போட்டுக்கொண்டு வீட்டோடு முடங்கிவிடாமல் இம்முறை பத்து நாளும் செல்ல முடிந்தது பெரிய விஷயம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் கடைசி நாள் ஜுரம் வந்துவிட்டது. மதியத்துக்குமேல் நிற்க, உட்கார முடியாதபடிக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல் சூடும் வலியுமாக ரொம்ப அவஸ்தை. கிழக்கு அரங்கில் என்னைப் போல் பிரசன்னா உள்ளிட்ட வேறு சிலருக்கும் அதே அவஸ்தை இருந்ததும், நலம் ஆசிரியர் பார்த்தசாரதி அன்னாருக்கெல்லாம் மாத்திரை சப்ளை செய்துகொண்டிருக்கிறார் என்றும் அறிந்தேன்.

மாத்திரை சாப்பிட்டு இரவு வரை அங்கேயே இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது. வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். நல்ல காய்ச்சல். ராத்திரி குளிரும் சேர்ந்துகொள்ள, பத்து மணிக்கு மேல் புறப்பட்டுப் போய் ஆசுபத்திரியில் ஓர் ஊசி போட்டுக்கொண்டு திரும்பினேன். மறுநாள் மலேரியா என்று ரத்தப் பரிசோதனை முடிவு சொன்னது.

அவ்வாறாக இவ்வாண்டுப் பொங்கல் பண்டிகை படுக்கையில் கழிந்தது. வாங்கிய புத்தகங்கள் எதையும் இன்னும் பிரிக்கவில்லை. வள்ளலாரை மட்டும் வேள்வி மாதிரி ஒரே மூச்சில் முடித்தேன். பழைய தமிழ் நடையில் மனம் லயிக்கிறது. ரொம்பப் பிடித்திருக்கிறது. திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. வள்ளலாரைப் பற்றித் தனியே எழுதவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்.

*

என்னுடைய இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, நாற்பத்தி எட்டுப்பேர் புத்தகம் எழுத ஆர்வம் தெரிவித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். கொஞ்சம் பயமாகிவிட்டது. வகுப்பெடுப்பது மாதிரி இம்சையான காரியம் வேறில்லை. தவிரவும் மொத்தமாக எதிரே உட்காரவைத்துக்கொண்டு மைக் பிடித்துப் பேசுகிற செயலால் உருப்படியான விளைவு ஏதும் நேராது என்பது என் அனுபவம். இதனாலேயே பயிற்சி அரங்குகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.

ஆனால் நண்பர்களின் இந்த ஆர்வத்தை மதிக்காதிருக்க விருப்பமில்லை. நான் முன்னரே சொன்னமாதிரி முதலில் கடிதமெழுதிய பதினைந்து பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பினேன். அவர்களுள் இரண்டு பேர் வரவில்லை. பதிமூன்று பேர் வந்தார்கள். பதிவு செய்யவில்லை என்றாலும் நட்புரிமையின் அடிப்படையில் அராஜகமாக வந்து உட்கார்ந்தார் என் நண்பர் கே.என். சிவராமன். அவசியமே இல்லை என்றாலும் அடாவடிக்காகப் பதிவு செய்து வந்து உட்கார்ந்தார் சுரேஷ் கண்ணன். எங்கள் அலுவலகத்தின் மொட்டை மாடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை முதல் ஒரு மணி வரை அவர்களுக்குக் கதையல்லாத, புத்தக எழுத்தின் அடிப்படைகளை எனக்குத் தெரிந்த அளவில் சொல்லிக்கொடுத்தேன்.

உடல்நலக் குறைவினால் என்னால் உரக்கப் பேசமுடியவில்லை. ஏற்பாடு செய்திருந்த மைக்கும் சரியாக வேலை செய்யாதபடியால் கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் நண்பர்கள் அனைவரும் நெருக்கமாக வந்து அமர்ந்துவிட, நினைத்த விஷயங்களைத் தடையற்றுப் பேசிவிட முடிந்தது.

எழுதுவது என்றல்ல. எதையுமே சொல்லிக்கொடுத்து சாதித்துவிட முடியாது. எந்தக் கலையும் இடைவிடாத பயிற்சியின்மூலம் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. ஆயினும் சில அடிப்படைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆரம்ப அச்சங்களை விலக்குவதற்கு நமது அனுபவங்களை உரமாக்க முடியும். அதைத்தான் செய்தேன்.

இதன்மூலம் நாலைந்து பேராவது இந்த ஆண்டு தீவிரமாக எழுத முன்வருவார்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

*

ஜனவரி 30ம் தேதி புதுதில்லி சர்வதேசப் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. பிப்ரவரி 7 வரை நடக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலேயே மிகப் பெரியதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் இதுவேயாகும். பல லட்சக்கணக்கான புத்தகங்கள், பல நாட்டு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேசப் பதிப்பாளர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கான பெரிய வாய்ப்பு.

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்தக் கண்காட்சிக்குக்
கடந்த இரு வருடங்களாகச் சென்றுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டும் 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை புது தில்லி செல்கிறேன். உண்மையிலேயே நம்மைச் சிறு துரும்பென உணரச் செய்யும் கண்காட்சி இது. புத்தகத் தயாரிப்பு என்னும் தொழில்நுட்பச் செயல்பாடு முதல் என்னென்ன விஷயங்கள் பற்றியெல்லாம் உலகில் எழுதப்பட்டிருக்கிறது என்னும் பிரமிப்பு வரையிலான இக்கண்காட்சி தருகிற அனுபவம், கண்டிப்பாக ஓராண்டு வரை நினைவைவிட்டு அகலாதது. முழு வருடமும் நான் செயல்படுவதற்கான தெம்பையும் உத்வேகத்தையும் எப்போதும் தருவது.

புது தில்லி புத்தகச் சந்தையில் NHM நிறுவனம் இரண்டு ஸ்டால்கள் அமைக்கிறது. தமிழுக்கு ஒன்றும் ஆங்கிலத்துக்கு ஒன்றுமாக. ஸ்டால் எண்கள் எனக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்தபிறகு இங்கே தருகிறேன். தில்லியில் வசிக்கிற வலையுலக நண்பர்கள் அனைவரையும் புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறேன்.

Share

5 comments

 • அன்புள்ள பா.ராகவன்,
  பயிலரங்கத்திற்கு விரும்பியே வந்தேன். அனுபவமுடைய பதிப்பாசிரியர் ஒருவர் தாமாகவே முன்வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் போது அதை தவறவிடக்கூடாது எனத் தோன்றியது. மேலும் என்னுடைய மொழி நடை குறித்த அதிருப்தி எப்போதும் என்னுள் உண்டு. அதையும் சற்று சீர்திருத்த முடியுமா என்று பார்க்க விரும்பினேன். உங்களுடனான சந்திப்பு நிச்சயம் பயனுள்ளதாகவே இருந்தது. அபுனைவு உருவாக்குவது தொடர்பான சில அடிப்படை நுணுக்கங்களை அறிய முடிந்தது. புனைவை விட அபுனைவை உருவாக்குவதற்கு அதிக பிரயத்தனம் எடுக்க வேண்டும் என்பது உறுதிப்பட்டது.
  உடல் அசெளகரியத்திலும் நீங்கள் இதற்காக மெனக்கெட்டது நெகிழ்வை ஏற்படுத்தியது. உங்களுக்கும் பத்ரிக்கும் கிழக்கு தோழர்களுக்கும் நன்றி.

 • சுரேஷ் கண்ணன் விரைவில் உலக தர அபுனைவு உருவாக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.அபுனைவு 10K/10 பக்க  அளவில் இருந்தால் உலக சினிமா சினிமா வசனமாகும் தமிழ்ப் புத்தகமாகாதே :).பாரா இதைச் சொல்லிக் கொடுத்தாரா 🙂
  “இதன்மூலம் நாலைந்து பேராவது இந்த ஆண்டு தீவிரமாக எழுத முன்வருவார்களேயானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்”
  இப்ப்டி பட்டை தீட்டப்பட்ட தீவிர எழுத்துவாதிகளின் புத்தகங்கள் 2011ல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

 • அத்த விடும், கனகவேல் காக்க என்ன ஆச்சு?? பொங்கலும் போயாச்சு !!
   
  ~ நாரத முனி

 • தமிழில் நிறைய கதைகள் மற்றும் நாவல்கள் வாசிக்க வேண்டுமென்று பிரியப்படுபவன். எழுதுவதிலுள்ள சிரமங்களைத் தெரிந்துகொண்ட பொழுது மலைப்பாக இருந்தது. அதுவும் புனைவல்லாத புத்தகம் எழுதுவது கடினம் தான் போல!.

  உடம்புக்கு முடியாமல் போய்விட்டாலும் வந்திருந்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ராகவன்

  🙂

By Para

Recent Posts

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி