இந்த வருடம் நான் எழுத நினைத்த, எழுதிக்கொண்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, என்னைச் செலுத்தி, தன்னை எழுதிக்கொண்ட புத்தகம் மாவோயிஸ்ட். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.
இன்றைய தேதியில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குபவர்கள் அவர்கள். இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள். ஆனால், பரவலாக வெளியே தெரியாதிருந்தது. கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில், மாநில அரசுக்கு எதிராக இந்த இடது சாரி இயக்கமே யுத்தம் தொடங்கிய பிறகுதான் மாவோயிஸ்டுகளைப் பற்றி நாம் பரவலாகக் கேள்விப்படத் தொடங்கினோம்.
இந்தியாவில், வளர்ச்சியடையாத மாநிலங்களிலும், வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளர்ச்சியுறாத பகுதிகளிலும் மட்டும்தான் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள், செயல்படுகிறார்கள். இதனை வேறு சொற்களில் கூறுவதென்றால், அரசாங்கங்களால் அலட்சியப்படுத்தப்படும் மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குப் பெறுகிறார்கள். அவர்களுடைய செயல்பாட்டுக்கான தேவையும் வரவேற்பும் அந்தப் பகுதிகளில் கிடைக்கின்றன.
இந்தியா கிராமங்களால் வாழ்கிறது என்று வாய் வார்த்தைக்கு நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்கள் பெருமளவில் அவர்களைச் சென்றடைவதில்லை என்பதுதான் உண்மை. எத்தனை அரசுகள் மாறினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், எத்தனை நூறு வாக்குறுதிகள் வழங்கினாலும் நடைமுறையில் அவர்களது வாழ்வில் பெரிய மாறுதல்கள் எப்போதும் ஏற்படுவதில்லை.
ஒப்பீட்டளவில் தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் கணிசமான அளவுக்குப் பலனளித்திருக்கின்றன. இங்கும் அதே அரசியல்வாதிகள், அதே ஊழல்கள், அதே செயலின்மை, அதே சுரண்டல்கள் உண்டென்றாலும் வட மாநிலங்களில் உள்ள அளவுக்கு மோசமான நிலைமை தெற்கே உண்டானதில்லை. குறுகிய காலம் தமிழகத்திலும் தீவிரம் கண்ட நக்சலைட் இயக்கம், தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் விரைவிலேயே இல்லாமல் போனதை இங்கே நினைவுகூரலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.
வட மாநிலங்களில் பெரும்பாலும் இதெல்லாம் இல்லை என்பது முதல் விஷயம்.
உதாரணமாக, இரண்டாயிரமாவது வருடம் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான சத்தீஸ்கரை எடுத்துக்கொள்ளலாம். சத்தீஸ்கரி என்னும் பிராந்திய மொழி பேசும் மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பதினாறு மாவட்டங்கள் இணைந்து இந்த மாநிலம் உருவானது.
அநேகமாக இம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் எண்பத்தி ஐந்து சதவீதம் கிராமங்கள்தாம். இவற்றிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களைத் தலைநகர் ராய்பூரிலிருந்து சென்றடைவது என்பது சாத்தியமே இல்லை. முற்றிலும் சாலைகளே இல்லாத கிராமங்கள் மிகுதி. மின்சாரம் பார்க்காத கிராமங்கள் மிகுதி. அடர்ந்த கானகங்களும் வற்றாத நீர் ஆதாரங்களும் இருப்பதால் மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சத்தீஸ்கரோடு ஒப்பிட்டால், அதன் அண்டை மாநிலமான ஒரிஸ்ஸாவின் பல கிராமங்களில் விவசாயத்துக்கான வசதிகள் கூடக் கிடையாது. வானம் பார்த்த பூமியாக எப்போதும் காய்ந்து கிடக்கும் கிராமங்களே அங்கு அதிகம். அடித்தால் பேய் மழை அல்லது பிசாசு வறட்சி என்றே காலம் காலமாகப் பார்த்து வந்திருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் நிலையும் இதுதான். விவசாய சாத்தியங்கள் அற்ற கிராமங்கள் அங்கும் அதிகம்.
எல்லா மாநிலங்களிலும் இத்தகைய கிராமப்பகுதிகளைப் பார்க்கலாம். ஆனால் இவை முற்றிலுமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும்போது அம்மக்களுக்கு ஏதாவது செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் எண்ணம் ஏற்படுகிறது. ஏழைமை என்பது மட்டுமல்லாமல், தங்களது சொற்ப வளம்கூட சுரண்டப்படும்போது இந்தக் கோபம் தீவிரம் கொள்கிறது.
நகர்மயமாக்கலின் விளைவான நிலக் கையகப்படுத்தல்கள், கனிம வளங்களுக்காகச் சுரங்கங்கள் தோண்டவேண்டி, அதன் பொருட்டு நில ஆக்கிரமிப்பு செய்வது, காடுகளை அழித்து, அம்மக்களை வாழ இடமின்றி அலைய விடுவது, எத்தகைய நவீனத்துவ நடவடிக்கைக்கும் பதிலான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காதிருப்பது, வழங்கப்படும் தொகையிலும் ஊழல் புகுவது, கால தாமதங்கள் –
பல காரணிகள் இத்தகைய பகுதிகளில் மாவோயிஸ்டுகளைச் செல்வாக்குப் பெறவைக்கின்றன.
அரசாங்கங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் ஏழை எளிய ஆதிவாசி மக்களை மாவோயிஸ்டுகள் முன்னிலைப்படுத்தத் தொடங்குவதன் மூலம் அவர்கள் மனத்தில் இடம் பிடிக்கிறார்கள். உங்கள் நிலம் உங்களுக்கே என்று சொல்வதன்மூலம் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். வெறும் பேச்சாக இல்லாமல், அதிகார வர்க்கத்தினரை, நில உடைமையாளர்களைத் தாக்கி, விரட்டியடித்து நிலங்களைப் பங்குபோட்டு மக்களுக்குக் கொடுப்பதன்மூலம் அவர்களது ஆதரவையும் அன்பையும் பெறுகிறார்கள்.
சித்தாந்தம் என்பது எளிய மக்களுக்கான கருவியல்ல. பசியும் வறுமையும் வேலையின்மையும் வாட்டும்போது சித்தாந்தங்கள் எடுபடாது என்பது மாவோயிஸ்டுகளுக்குத் தெரியும். அவர்கள் அம்மக்களுக்கு அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொடுத்துவிட்ட பிறகுதான் சித்தாந்தம் பேசுகிறார்கள். இதனால்தான் படிப்பறிவில்லாத, பாமர, ஆதிவாசி மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தொடர்ந்து செல்வாக்கு இருந்துவருகிறது. மறுக்கப்படும் விஷயங்கள் கிடைக்கத் தொடங்கும்போது மக்கள் காதுகொடுத்துக் கேட்கத் தயாராகிறார்கள்.
இதனை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள, கிறிஸ்தவ மிஷினரிகள் இந்தியாவுக்கு வரத்தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலோர மீனவ மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று, மெல்ல மெல்ல தேசம் முழுவதும் பரவியதை எண்ணிப் பார்க்கலாம்.
மீன் பிடிக்கச் செல்பவர்களுக்குக் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து மன்னர்கள் தராத பாதுகாப்பை இந்த மிஷினரிகள் தந்தன. அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக சாதி இந்துக்கள் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், அரவணைத்து, உனக்கும் வேதம் சொல்லித்தருகிறேன் என்று அவர்களுக்குப் புரியும் மொழியில் கடவுள் கதை பேசி நம்பிக்கையைப் பெற்றார்கள். தென் இந்தியாவின் கடலோர நகரங்கள் அனைத்திலும் கிறிஸ்தவத்தின் வேர் வலுவாக ஊன்றப்பட்டு அதன் வலுவிலேயே அது நடுப் பகுதிகளுக்கும் பரவியது.
கிறிஸ்தவ மிஷினரிகளின் நோக்கத்துக்கும் மாவோயிஸ்டுகளின் நோக்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் பிரச்னை ஒன்றுதான். உத்தி ஒன்றுதான். புறக்கணிப்பின் துயரால் வாடும் மக்களுக்கு அடிப்படை ஆறுதல் தருவது.
இதனை அரசாங்கங்களே சரியாகச் செய்யுமானால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் அவசியமே இல்லை.
மேற்கு வங்க மாநிலத்தையே எடுத்துக்கொள்ளலாம். அங்கே ஆட்சியில் இருப்பது இடதுசாரிகள்தாம். இன்று நேற்றல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சி புரியும் இடதுசாரிகள். காங்கிரசும் திரிணமூல் காங்கிரசும் இதர பிராந்திய, தேசியக் கட்சிகளும் எத்தனை முயற்சி செய்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை அங்கே யாராலும் பதவியிலிருந்து இறக்க முடிந்ததில்லை. வலுவான, ஆணித்தரமான ஆட்சியதிகாரம் கொண்ட கட்சியாகவே அது அங்கே விளங்குகிறது.
ஆனால், மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கம்யூனிசத்தில் தீர்வு உண்டு என்பது நிஜமானால், நாட்டில் வேறெங்குமில்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் திரண்டு எழவேண்டியதன் அவசியம் என்ன? இடது சாரி மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, இடதுசாரி மாவோயிஸ்டுகளே போர் முரசு கொட்டவேண்டிய சூழலின் அவலப் பின்னணி என்ன?
சிங்கூர், நந்திகிராம், லால்கர் சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை மணிதான். முப்பதாண்டுக் கால கம்யூனிஸ்ட் அரசு, மேற்கு வங்க மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை என்பதைத்தான் இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. லால்கர் சம்பவங்கள் மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் மீள வெடிக்கலாம். அரசாங்கம் திரும்பவும் இரும்புக் கரம் கொண்டு புரட்சியாளர்களை ஒடுக்க முயற்சி செய்யலாம்.
ஆனால் பிரச்னை அப்படியே இருக்கும். அவலம் அப்படியே இருக்கும். அதிகார வர்க்கம் மாறினாலும் அடித்தட்டு மக்களின் நிலை மட்டும் அப்படியேதான் இருக்கும்.
ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா, பிகார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை, மக்கள் அவர்களுக்கு அளிக்கும் ஆதரவைப் புரிந்துகொள்ள இயலும். ஆனால் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த – நிகழும் சம்பவங்கள் யாருக்கும் மிகுந்த அதிர்ச்சியையே தரும். வளர்ந்த மாநிலம் என்றும், படிப்பறிவு பெற்றோர் சதவீதம் அதிகமுள்ள மாநிலம் என்றும், கலாசார பலம் பொருந்திய மாநிலம் என்றும் இன்ன பலவாகவும் எப்போதும் வருணிக்கப்படும் பிராந்தியம் அது.
ஆனால் ஒரு பிகாரைக் காட்டிலும் மோசமான முதலாளித்துவம், நில உடைமையாளர்களின் அராஜகம், அரசாங்கத்தின் தாதாத்தனம் மேற்கு வங்கத்தில் இத்தனை ஆண்டுக் காலமாக இருந்து வந்திருக்கிறது என்பது லால்கர் சம்பவத்துக்குப் பிறகு தெரியவரும்போது படித்த, நகர்ப்புற மக்களும் நம்பிக்கை இழந்து போகிறார்கள்.
சித்தாந்தங்களின்மீது பழி போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவது, தப்பிக்கும் செயலாகிவிடும். அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் மெத்தனமும் அலட்சிய மனோபாவமும் அடாவடித்தனங்களும் சித்தாந்தங்களோடு தொடர்புடையவை அல்ல. மாறாக அதிகாரம் கைக்குக் கிடைக்கும்போது ஜனநாயகவாதிகளே எத்தனை மோசமாக உருமாறக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில் ஆயுதப் புரட்சியின்மூலம் அதிகாரம் என்னும் செயல்திட்டத்துடன் தீவிரமாக யுத்தம் மேற்கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகளிடம் போகுமானால் தேசம் என்ன ஆகும்?
மாவோயிஸ்டுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பவர்கள். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வகையில் காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து தீவிரவாதிகளைக் காட்டிலும் அவர்களது செயல்பாடுகள் அபாயகரமானவை. மாவோயிஸ்டுகள் பிராந்தியவாதம் பேசுபவர்கள் அல்லர். மாறாக, பிராந்தியம் தோறும் தனித்தனியே மக்களை கெரில்லாப் படைகளாக உருமாற்றி, தேசம் முழுதும் ஒரே சமயத்தில் மாபெரும் புரட்சி வெடிக்கச் செய்து, ஆயுதம் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அவர்களுடைய நீண்டநாள் இலக்கு.
இதற்கான சூழ்நிலையைத் தொடர்ந்து உருவாக்கிவருவது மக்களோ, மாவோயிஸ்டுகளோ அல்லர். அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும்தான்.
மாவோயிஸ்டுகளைத் தடை செய்து, அவர்களுக்கு எதிரான காவல் துறை மற்றும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்துவதிலும் முதன்மையானது, அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக அரசியல்வாதிகள் சற்றேனும் சிந்திப்பது, செயல்படுவது. அவர்களது உரிமைகளைச் சுரண்டி வாழாதிருப்பது.
மக்கள் ஆதரித்துக்கொண்டிருக்கும் வரை மாவோயிஸ்டுகளைக் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது. அம்மக்கள், அரசாங்கத்தை ஆதரிப்பவர்களாக மாறுகிற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினாலொழிய இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்று ஏதுமில்லை.
சரியான நேரத்தில் வெளிவந்த புத்தகம்..
மேற்கு வங்கத்தில் நடந்த புரட்சிக்கு பிறகு, இதை பற்றி அறிய முற்படும் போது பல அதிர்ச்சிகள் !
மக்களின் ஒரு பிரிவுக்கு துப்பாக்கி கொடுத்து , மக்களுடன் சண்டை போட வைக்கும் மக்களாட்சி 🙁
http://www.youtube.com/watch?v=zuUiWDUBAZw
//தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.//
உண்மையை தைரியமாக எழுதியதற்கு நன்றி 🙂
ஆனால் வோட்டுக்காகவாவது என்ற சொல் யாரையோ திருப்திபடுத்த எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது 🙂
லக்கி, எனக்கு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை. என் திருப்தி ஒன்றே எழுத்தில் என் கவனம்.
//தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட இயக்கங்கள் ஆட்சி புரிந்ததில் சாதித்த மிகப்பெரிய செயல் என்று இதனைத் தயங்காமல் சொல்லலாம். வோட்டுக்காகவாவது சாலைகள், குடிநீர், அடிப்படை சுகாதாரம், மின்சாரம், விவசாயக் கடன் உதவிகள், அவ்வப்போது தள்ளுபடி, இலவசத் திட்டங்கள் என்று என்னவாவது செய்து, மக்கள் முற்றிலும் கொதிப்படைந்து போகாமல் பார்த்துக்கொள்கின்றன நமது அரசுகள்.
//
வழிமொழிகிறேன்
தமிழக சமீபத்திய நிகழ்வுகள் (ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினொ, சாலைகள்) குறிப்பாக நிராயுதபாணிகளை கைக்கூலி பெற்று கொலை செய்த ஸ்டெர்லைட் சம்பவம் மாவோயிஸ்டுகள் வளர சிறந்த நிலம் தமிழகம் என்று நிருபிக்க வாய்ப்புள்ளது.