தில்லிக்குப் போன விண்வெளி வீரன்

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி.

ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும் இணைந்து வந்து சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்ததும் என்னை அணைத்தன. [செபுகாவில் கொசுத்தொல்லை அதிகம்.] கொஞ்சம் சொஸ்தப்படுத்திக்கொண்டு சங்கர் தயாள் சர்மா மாதிரி நடந்து, ஒருவாறு சமாளித்து தில்லிக்குச் சென்று விட்டாலும் அங்கே பிரகதி மைதானில் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் சிக்குன் குன்யா வலி அதன் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.

மொத்தம் பதினான்கு அரங்குகள். ஒவ்வொரு அரங்கும் கிட்டத்தட்ட சென்னை புத்தகக் கண்காட்சி அளவில் பாதியாவது வரும். ஓர் அரங்குக்கும் அடுத்ததற்குமான இடைவெளி வேறு பல நூறு மீட்டர்கள். எனவே நடை, நடை, நடை என்று நடந்து தீர்த்ததில் இரு பாதங்களும் தனியே கழண்டுவிடும்போலாகிவிட்டன. தவிரவும் தமிழனுக்கு தில்லி குளிர் எல்லாம் ஒத்துக்கொள்ளாது என்பது உலகறிந்த உண்மை.  பலபேர் பயமுறுத்தியதில், விண்வெளி வீரர் மாதிரி மைனஸ் டிகிரிகள் தாங்கக்கூடிய ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்கொண்டு கெத்தாகப் போயிருந்தேன். [பார்க்க: மேலே உள்ள படம்]

ஆனால் என் துரதிருஷ்டம், இம்முறை குளிர் குறைந்துவிட்டிருந்தது. வெறுப்பேற்றும் விதமாக வெயில்கூட அடித்தது. ஸ்கொலாஸ்டிக் அரங்கின் வாசலில் மிக்கி உடை அணிந்து நின்று குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிய சிப்பந்தியைப் பார்த்த அதே பார்வையில் தில்லிப் பெண்கள் என்னைப் பார்த்தார்கள். ஆனபோதிலும் நான் கழட்டவில்லை. என் பிராண சிநேகிதன் பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிலிருந்து அன்போடு வாங்கி அனுப்பியது அது.

பிரச்னை அதுவல்ல. என் ஸ்தூல சரீர கனம், விண்வெளி ஜாக்கெட்டின் கனம், ஏற்கெனவே இருந்த பாத, மூட்டு வலிகள், அரங்கு அரங்காக நடந்து தீர்த்தது எல்லாம் சேர்ந்து முற்றிலும் வலியாலானவனாகிவிட்டேன். காலை அசைக்கக்கூட முடியவில்லை. கை விரல் மூட்டுகளும் வலிக்கின்றன. அதிகம் எழுத முடியவில்லை. விதிக்கப்பட்ட பத்திரிகைத் தொடர்களை மட்டுமே இப்போது எழுதுகிறேன். கொஞ்சம் வலி சரியானதும்தான் மற்றவை.

ஊர் திரும்பியதும் கொஞ்சம் வலை சுற்றியதில் ஜெயமோகனின் மனைவி இதே சிக்குன் குன்யாவால் அவதிப்படுகிறார் என்று படித்தேன். என் வீட்டிலேயே என் அப்பா, அம்மா, மனைவி என்று அனைவருக்கும் ஒரு சுற்று வந்து போய்விட்டது. என் நண்பர் வட்டத்திலேயே பலபேருக்கு சிக்குன் குன்யா. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மாநிலம் முழுதும் ஒரு நோய் பேயாட்டம் ஆடுகிறது. அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

ஜெயமோகன் சொல்படி அரசாங்கம் வழங்கும் சிக்குன் குன்யாவுக்கான மருந்து இலவச கலர் டிவி. எனக்குத் தெரிந்து நிலவேம்புக் குடிநீர்.

நாட்டு மருந்துக் கடைகளில் இந்த நிலவேம்பு கிடைக்கும். வாங்கி கஷாயம் போட்டுச் சாப்பிட்டால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கிறது. மூன்று நாள், மூன்று வேளைகள் சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் மூன்றுநாள். இப்படி வலிக்கும்வரை சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நிலவேம்பு மிகவும் கசக்கும். சிலர் சர்க்கரை போட்டுச் சாப்பிடுகிறார்கள். ஆனால் அது வேண்டாம். அந்தக் கசப்பில்தான் நிவாரணம் உள்ளது என்று எனக்குத் தெரிந்த ஓர் ஆயுர்வேத மருத்துவர் சொன்னார்.

எந்த நோயை வேண்டுமானாலும் தாங்கிவிடலாம், இந்தப் பாழாய்ப்போன சிக்குன் குன்யா வலியை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எதிரிக்கும் வந்துவிடக்கூடாத நோய்.

கொஞ்சம் இருங்கள். சரியானதும் வந்து வழக்கம்போல் எழுதுகிறேன்.
 

Share

16 comments

  • பாரா,இம்ப்காப்ஸ் வெளியிடும் நிலவேம்புக் குடிநீர் ஒரளவு தரமானது.பல தயாரிப்புகள் இதிலும் மலினமாக வந்து விட்டன,நீர்த்துப் போன தரத்துடன்!
    உண்மையில் நிலவேம்புக் குடிநீர் அல்லது கஷாயத்துக்கான சேர்மானங்கள் நிலவேம்பு,பற்படாகம்,முட்காய்வேலி என்று சுமார் 12 மருந்துகள் அடங்கியது.
    ஜஸ்ட் வலி மட்டும் போக்குவதல்ல;நான் இந்தியா சென்ற போது பாதிக்கப்பட்ட இதிலிருந்து நிலவேம்புக் கஷாயத்தினால்தான் தப்பித்தேன்-மூன்று நாட்களுக்குள்..
     
    ஆனால் என்னது,அதென்டிக் நிலவேம்புக் கஷாயம்,சொந்தத் தயாரிப்பு..அம்மா!
     
    அருகில் நல்ல சித்த மருத்துவர் எவராவது இருந்தால் இந்த மருந்துகளின் முழு பட்டியலை நீங்கள் பெறலாம்,சென்னை பூக்கடையில் மருந்துகள் வாங்க இயலும் என்று நினைக்கிறேன்.

  • எழுத்தாளர்கள்,அவர்கள் குடும்பத்தினரை இன்னும் அதிக அன்புடன் சிக்கன் குனியா மற்றும் மலேரியா தாக்குகின்றனவோ :). ஒருவேளை ‘ரைட்டர்’ ரத்தம் குடித்த கொசுக்கள் நாவல் எழுதுமோ? :).

  • அன்பு பாரா, விரைவாக நலம் பெற வாழ்த்துக்கள்.

  • என்னையும் சிக்குன்குனியாவின் ஒரு துணை வகைதான் தாக்கியிருக்கிறது. கை-கால்களை இம்மியளவு நகர்த்துவதற்கே பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. சலைன் குழாய் மூலம் கால் லிட்டர் மருந்தை ஏற்றியிருக்கிறார்கள், ஆனால் மூட்டுகளில் தொழிற்படும் வலிகளுக்கு குரோசின் வலி நிவாரணியையே நம்பியிருக்கிறேன். நிலவேம்பின் கசப்பிற்கு நான் தயாராக இல்லை.

    • பேயோன், வருகைக்கு நன்றி. ஆனால் இதற்கும் உள்ளர்த்தம், உள்ளரசியல், உட்காரணங்கள் கற்பிக்க ஜீவாத்மாக்கள் உலகிலுண்டு. நான் அவனில்லை பார்ட் 3 அநேகமாக என்னிடமிருந்துதான் வருமென்று நினைக்கிறேன். செல்வா மன்னிப்பாராக.

    • இலவசம்: அது எழுத்துப்பிழையில்லை. சரிதான். பிராண சிநேகிதன் என்றால் பிராணனை வாங்கும் சிநேகிதன் என்றும் பாடம்.

  • அய்யா சுகம் பிரம்மாஸ்மியின் அடுத்த அத்தியாயத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்திலாவது எதிர்பார்க்கலாமா?

    • லக்கி: இந்த ஆண்டே எழுதி முடிப்பேன். கவலை வேண்டாம். கொஞ்சம் வலி சரியாகட்டும். திரும்ப வருவேன்.

  • பாரா எழுதும் 'கொசுவெல்லம் ரத்தம்' 🙂
    விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் !

     

  • //எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு.//
    என்ன விஷயம் ?

  • அன்புள்ள பாரா,
    கொசுக்கடியாலும், கடி சார்ந்த குனியாவஸ்தைகளாலும் நீங்கள் அவதியுறுகையில், அதையே கேள்விக்குறியாக்கி சிலர் கடிப்பது விசனத்திற்குரியது. டெல்லியில் அஞ்சாநெஞ்சத் தமிழன் பேச்சுக்கு மதிப்பில்லை என்பதை இது மறுமுறையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
    நிற்க. ஐயகோ, வேண்டாம், வேண்டாம். உம்மால் இப்போது அதுவும் முடியாது.
    கொசு ஒழிக்க மீன் வளர்ப்பு முறை பற்றி என் ப்ளாகில் எழுதி இருக்கிறேன். இது வரை யாரும் கொசுவை விரட்டவோ, மீனைப் பிடிக்கவோ முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.  அரசாங்கத்தைச் சொல்லிக் குற்றமில்லை. அடுத்த அவார்டு ஃபங்ஷனுக்காக அவர்கள் பாடுபடவேண்டும். ‘கொசுவா, எங்கே கொசு, ஏது கொசு, எல்லாமே எதிர்க்கட்சி அம்மையார் செய்கின்ற பூச்சியரசியல்’ என்று சொல்லிவிட்டாலே எல்லாம் சரியாகி விடும். மக்களும் கொசு அடித்தபடி கை தட்டி மகிழலாம்.
    வலி வாங்க வழியில்லை, வாழ்த்துகிறேன் கடி குறைய.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!