வேஷம்

என் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் இன்று மாறுவேடப் போட்டி. பெற்றோருக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை. வேஷம் போட்டு வாசலில் கொண்டு  விட்டுவிட வேண்டியது. முடிந்ததும் வந்து அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

பொதுவாக பள்ளி மாறுவேடப் போட்டிகளுக்கு ஒரு டச்சப் உதவியாளராகவாவது பெற்றோர் இருவரில் ஒருவர் அனுமதிக்கப்படுவதுதான் வழக்கம். இங்கே ஏதோ புதிய புரட்சி முயற்சி செய்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

காலை எட்டரைக்குப் பள்ளி வாசலுக்குப் போய் நின்றேன். இதைவிட உன்னதமான ஒரு தினத்தை என் வாழ்நாளில் நான் அனுபவித்ததில்லை. பலப்பல குழந்தைகள். பலவிதமான வெட்கங்கள். சிணுங்கல்கள், அழுகைகள், கெஞ்சல்கள். பயங்கள். பல்வேறு வேடங்கள். ஆறு பாரதியார். பன்னிரண்டு ஏஞ்சல்கள். ஒரு பரமசிவன். ஒரு ராமன். ஒரு காந்தி. ஏழெட்டு போலீஸ்காரர்கள். ஒரு மாகாளி பராசக்தி. ஒரு தெரெசா, ஒரு பகத் சிங். ஒரு விவேகானந்தர். விண்வெளிவீரர்கள் இரண்டு பேர். ஆதிசங்கரர் ஒருவர். [சங்கராசாரியார் என்று யாரோ பொத்தாம்பொதுவாகச் சொல்லிவைக்க, வளாகத்தில் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.] ஒரு பாதிரியார். இன்னும் முருகன் 2, பிள்ளையார் 1, அவ்வையார் 1, புலிவேஷம் இரண்டு.

வந்துகொண்டே இருந்தார்கள். வாசல்வரை சிரித்தபடி வந்துவிட்டு, பெற்றோரை விட்டுத் தனியாக உள்ளே போக [தினசரி போகும் பள்ளியே எனினும்] திடீரென்று மக்கர் செய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்த குழந்தைகள். கால் தடுக்கிறது, காது வலிக்கிறது. தலை அரிக்கிறது என்று வேஷத்தின் விளைவுகளால் பாதிப்புற்றுச் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தைகள். கடைசிக் கணப் பரீட்சைப் படிப்புபோல் என்னென்னமோ பாடல்களை, சுலோகங்களை, கோஷங்களைப் பரபரப்பாக ஒப்பித்துப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள்.

அவர்களைவிட சுவாரசியம், அவர்தம் அம்மாக்கள். என்ன பதற்றம், எத்தனை கவலைகள்! ஒழுங்கா சொல்லு. வாய்க்குள்ளயே முனகாதே. கண்ண கண்ண மூடாத. அரிச்சா கீழ வந்து சொறிஞ்சிக்கலாம். ஜட்ஜஸைப் பாத்ததும் முதல்ல வணக்கம் சொல்லிட்டு ஆரம்பிக்கணும். இயல்வது கரவேலுக்கு அப்பறம் ஈவது விலக்கேல். இக்கு அப்பறம் ஈ. அத ஞாபகம் வெச்சிக்கோ. மறந்துபோச்சுன்னா பேபேன்னு நிக்காம சட்னு வணக்கம் சொல்லிட்டு கீழ இறங்கிடு.

இந்தப் பெற்றோர் அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கள் கலையுணர்வையும் கற்பனை வளத்தையும் தேடித்திரட்டித் தத்தம் குழந்தைகளின் மேனியில் விளையாடி எடுத்து வந்து காட்சிக்கு வைத்திருப்பவர்கள்.

ஒரு போலீஸ்காரக் குழந்தை உள்ளே போகவே மாட்டேன், தொப்பியைக் கழட்டினால்தான் ஆச்சு என்று ஆகாத்தியம் பண்ணிக்கொண்டிருந்தது. அதன் டாக்டர் தந்தையும் குஜராத்தி அன்னையும் தோப்புக்கரணம் போடாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தது பார்க்கத் தமாஷாக இருந்தது.

யாரோ யாரையோ கேட்டார்கள், ‘உங்க பொண்ணா, பையனா?’

‘பொண்ணு’

‘என்ன கெட்டப்?’

‘இந்திரா காந்தி’

‘பரவால்லிங்க. புதுசா இருக்கும்னு எங்க பையனுக்கு பாரதியார் வேஷம் போட்டு கூட்டிட்டு வந்தேன். இங்க பாத்தா பத்து பாரதியார். இது என்னத்த சொல்லி ப்ரைஸ் வாங்கப்போகுதோ.’

திடீரென்று யாரோ கிளப்பிவிட்டார்கள். யாரும் எதையும் பேசவோ, ஒப்பிக்கவோ, நடித்துக்காட்டவோ அனுமதி இல்லை. வெறுமனே வந்து நிற்க வேண்டும். பாடி லேங்குவேஜ் பார்ப்பார்கள். அவ்வளவுதான். நேரம் அதிகமில்லை.

‘ஐயோ எம்பையன் ஓடி விளையாடு பாப்பா ஃபுல்லா சொல்லப்போறானே.’

தின்னத்தகாத சின்னக்கவலைகளுடன் வெயிலில் வெளியே நின்றிருந்தவர்களும் சுவாரசியமளிக்கவே செய்தார்கள். போட்டி முடிந்ததும் குழந்தையைத் தானே வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதாகவும் நான் வீட்டுக்குப் போகலாமென்றும் என் மனைவி உத்தரவு கொடுத்ததை அடுத்து, ஒரு முடிவுடன் வீட்டுக்கு விரைந்தேன்.

எப்படியும் ஒரு மணிநேரமாவது ஆகும். ஒரு பாரதியார் வேஷம் போட்டுப் பார்த்தாலென்ன?

சற்றும் எதிர்பாராமல் வந்த ஆசையில், குளிர் கோட்டைப் போட்டு, ஒரு பஞ்சகச்சம் முயற்சி செய்து, தலைப்பாகையும் தயார் செய்தாகிவிட்டது. பெரிய ஸ்டிக்கர் பொட்டும் கிடைத்துவிட்டது.

என்ன துரதிருஷ்டம். இந்தச் சமயம் பார்த்து மீசை இல்லாதுபோய்விட்டது.

Share

16 comments

  • சுவாரஸ்யம் 🙂

    அதிருக்கட்டும் குழந்தை மேக்கப்போடு நின்றுகொண்டிருக்க, பதட்டத்துடன் பலரும் அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்க நீங்கள் மட்டும் எல்லோரையும் – டயலாக் உள்பட- கவனித்துக்கொண்டு நின்றிருக்கிறீர்கள் !

    உங்களுக்கு பதட்டமே ஏற்படாதா? சொல்லுங்க எதாச்சும் மேக்கப்ல சரி செய்யணுமேன்னு பதட்டமே வராதா? :))

  • //என்ன துரதிருஷ்டம். இந்தச் சமயம் பார்த்து மீசை இல்லாதுபோய்விட்டது.
    //

    பாப்பாவுக்கு பொட்டு வைக்கிற மை டப்பா வெச்சி அஜ்ஜஸ்ட் பண்ணிக்கலாமே?

    நான் டெய்லி இப்படித்தான் மீசையை அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் 🙂

  • ஒரு ஆம்பளையா அழகா மீசை வச்சுக்காம, இப்ப பாரதியார் வேஷம் போடணும்னு ஆசை வந்ததும் மனதளவில் புலம்பலோடு நிறுத்தாமல் இப்படி ஒரு இடுகை போட்ட உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.

    Jokes apart… நல்ல பதிவு ஐயா. நன்றி.

  • சிறுகதை மாதிரி சும்மா சிக்குனு.. இருக்கு.. அனுபவம்னு போட்டிருக்கீங்க! நச் கட்டுரை

  • உங்க பாரதியார் படத்தைப் போடாததற்கு மிக்க நன்றி.

    • லஷ்மி, அது என் மகளல்ல. பெண் குழந்தையுமல்ல. பள்ளியில் நான் பார்த்த ஆறேழு பாரதியார்களுள் ஒருவர். அவரது இயற்பெயர் தருண்.

  • நான் சின்ன வயசுல போட்ட பெண்வேஷம் ஞாபகத்துக்கு வருது. யோசிச்சு பார்க்குறேன். நான் சின்ன வயசுல போட்டது.. ஐ மீன்.. எனக்கு கிடைச்சது எல்லாமே பெண்வேஷமாத் தான் இருந்திருக்கு.. ஓ.. காட்..

  • //போட்டி முடிந்ததும் குழந்தையைத் தானே வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதாகவும் நான் வீட்டுக்குப் போகலாமென்றும் என் மனைவி உத்தரவு கொடுத்ததை அடுத்து, ஒரு முடிவுடன் வீட்டுக்கு விரைந்தேன்.//

    இந்த‌ வ‌ய‌சுல‌ பொண்ணா???????????????????? உன்மைய‌ சொல்லுங்க‌, ஸ்கூலுக்கு நீங்க‌ கூப்பிட‌ போன‌து உங்க‌ பொண்ணா? இல்ல‌ பேத்தியா?

  • i have read so many articles of u. U are very outspoken. Next thing is the way of presenting the things. It is really a fantastic presentation of the scene we come over commonly in our life.

  • ஆண்டாளுக்கு வேஷப்போட்டியில் முதல் பரிசு கிடைத்ததாக சி.என்.என்.ஐ.பி.என். வாயிலாக அறிந்தேன்.

    ஆண்டாளுக்கும், ஆண்டாளின் அப்பாருக்கும், அம்மாவுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துகள்!

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!