ஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்

[அமேசான் pen to publish போட்டி தொடர்பாக ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த விவாதங்களுக்கு பதிலாக நவம்பர் 2, 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது]

மூன்று நாள்களாகப் பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு வேலை. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். அனைத்துக்கும் கருத்துச் சொல்ல ஆயாசமாக உள்ளது. பொதுவாகவே எனக்குக் கருத்து சொல்வது ஒவ்வாமை தரும். அவரவர் கருத்து அவரவருக்கு. அடுத்தவர் அபிப்பிராயத்தை நாம் எதற்கு அலசிப் பார்க்க வேண்டும்? உரியதைத் தக்க வைப்பதையும் மற்றதை மண்மூடிப் புதைப்பதையும் காலம் கன கச்சிதமாகச் செய்யும். யாரும் அச்சப்பட அவசியமில்லை.

1. அமேசான் போட்டி. இது எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு. இளம் எழுத்தாளர்களுக்கு. விரைவில் உலகெங்கும் பெயரும் புகழும் பரவ ஆர்வம் கொண்டோருக்கு. முதல் விளம்பரத்திலேயே அந்நிறுவனம் இதைச் சொல்லியிருக்கிறது. எழுதி, பதிப்பித்து, பரிசு வெல்லுங்கள் என்பதே ஒரு வரிக் குறிப்பு. (write. publish. win) இதில் இலக்கியமா மற்றதா என்ற பேச்சுக்கே இடமில்லை. இலக்கியம் கூடாது என்று யாரும் சொல்லுவதில்லை. ஓர் இலக்கியப் படைப்பு பரிசு வெல்லுமானால் மகிழ்ச்சியே.

2. எழுத்துத் துறைக்குப் புதிதாக வருவோருக்கு நவீன இலக்கியப் பரிச்சயம் பெரிதாக இருக்காது. துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகளே அவர்களது இலக்காக இருக்கும். இது ஒரு கொலைபாதகமெல்லாம் இல்லை. இங்கிருந்துதான் இலக்கியத்தை நோக்கி நகர முடியும். தரிசனம், பயிற்சி, உண்மைக்கு நம் மனம் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பது போலப் பல காரணிகளைச் சார்ந்தது அது. எழுத்தை ஒரு விசாரணைக் கருவியாகப் பயன்படுத்தும்போது அது நிகழும். அட, நிகழாமலே போனால்தான் என்ன? டாக்டர் தொழில் மாதிரி, வக்கீல் தொழில் மாதிரி, எழுத்தும் ஒரு வாழ்நாள் ‘ப்ராக்டிசிங் பணி’ தான். வெற்றி தோல்வி அப்புறம். முயற்சிக்குத்தான் முக்கியத்துவம்.

3. நடுவர்களுள் ஒருவர் திமுக அனுதாபி. இன்னொருவன் பார்ப்பான். இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு பேரையும் கட்டாய ஜாதி மாற்றம் செய்துவிடலாம். (எந்த ஜாதிக்கு என்று முட்டி மோதி நேர விரயம் செய்வது தனி.) அல்லது இருவரையுமே தூக்கிக் கடாசிவிட்டு ரிடையர்டு அபிப்பிராய சிகாமணிகள் யாரையாவது தேர்ந்தெடுத்துப் பரிந்துரை செய்யலாம். அல்லது இந்நடுவர்கள் இருக்கும் போட்டியில் பங்குபெறுவதில்லை என்று வீரமாக விலகிக்கொள்ளலாம். அத்தனை வாசல்களும் திறந்தே இருக்கின்றன.

4. முதல் சுற்றுத் தேர்வு என்பது விற்பனை எண்ணிக்கை அடிப்படையிலும் அமேசான் தளத்தில் குறிப்பிட்ட மின்நூலுக்கு வருகிற மதிப்புரைகளின் அடிப்படையிலும் நிகழ்கிறது. நடுவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இப்போது பேசப்படும் மாபெரும் பிரச்னை இதுதான். ப்ரமோஷன் மூலமும் திணிப்புகள் மூலமும் கட்சி ரகசிய ஆணை மூலமும் பல்லாயிரக்கணக்கான டவுன்லோடுகளை அள்ளி வழங்கி சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை நிரந்தர முன்னிலையில் வைப்பது அறமற்ற செயல் என்பது ஒரு வாதம்.

5. ஆனால் துரதிருஷ்டவசமாக, மார்க்கெடிங் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் உத்தி. சந்தைப்படுத்த வழி இருந்து, அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்து, அதைச் செய்யும் விருப்பமும் இருப்பவர்கள் செய்யத்தான் செய்வார்கள்.

6. இதனாலேயே தரமான இலக்கியப் படைப்புகளுக்கு இடம் இருக்காது என்ற முன்முடிவுகளுக்கு பதில் சொல்வது சிரமம். சந்தை என்பது இலக்கியவாதிகளுக்கும் பொதுவானதே அல்லவா? பெருமாள் முருகனால் உலகச் சந்தையில் போய் உட்கார முடியுமென்றால் மற்றவர்களால் மட்டும் ஏன் முடியாது? அது அதற்கான முன்முயற்சிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே ஒரு வரிப் பாடம்.

7. கண்ணுக்குத் தெரிந்து திமுக ஆன்லைன் அணி தமது பாசறையில் சிலரை ஊக்குவித்து இப்போட்டிக்கு எழுத வைத்து சந்தைப்படுத்தி வருகிறது. இதையே இந்துத்துவ அணி என்ற ஒன்று இருந்தால் செய்யலாம். கம்யூனிச அணி, நாம் தமிழர் அணி, முஸ்லிம் லீக் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, கவிஞர் அணி, கதாசிரியர்கள் அணி – யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர் சாமர்த்தியம். ஃபேஸ்புக் அணி என்றேகூடத் திரளலாம். யார் தடுப்பது?

8. ஆனால் இறுதிச் சுற்று என்பது படைப்பின் தரம் மற்றும் நடுவர்களின் தரத்தைப் பொதுவில் எடுத்து வைப்பது. அது நிகழும்வரை அது குறித்துப் பேசுவது நியாயமல்ல என்றே நினைக்கிறேன்.

9. மின்நூல் வாசிப்பு சார்ந்த அக்கறையைத் தமிழ்ச் சூழலில் பரவலாக்குவதற்காக அமேசான் நடத்தும் போட்டி இது. தமிழைக் காட்டிலும் வாசக எண்ணிக்கை அதிகமுள்ள மொழிகள் சில இருக்கையில் துணிந்து அவர்கள் தமிழைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் குப்பைதான் தேர்வாகும் என்று முன்முடிவுக்கு வருவதற்கு முன்னர், நல்லதாக நாலு படைப்புகள் போட்டிக்கு அனுப்ப உதவுவது மெய்யான அக்கறையைக் காட்டும் செயல்.

10. அமேசான் நடத்தும் இப்போட்டிக்கு என்னை நடுவராக இருக்கக் கேட்டுக்கொண்டார்கள். நியாயமாக அவர்கள் இறுதியில் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஐந்து கதைகளை / கட்டுரைகளை / கவிதைகளைப் படித்து முடிவு சொன்னால் என் வேலை முடிந்துவிடும். ஆனால் ஆர்வமும் அக்கறையும் மிக்க இளம் எழுத்தாளர்களுக்கு இந்தப் பாதையைச் சுட்டிக்காட்டி, எப்படிப் பிரசுரிப்பது என்பதில் இருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, எழுதத் தூண்டிவிடுவதன் ஒரே காரணம், நூறில், ஆயிரத்தில், பத்தாயிரத்தில் ஒன்றாவது உருப்படியான கையாகத் தேறித் தெரியாதா என்கிற இச்சைதான்.

நான் எழுத வந்த காலத்தில் தூக்கிவிடப் பத்திரிகைகள் இருந்தன. ‘நீ கல்கியில் எழுதினாயா? நீ கணையாழியில் எழுதினாயா? அப்படியானால் உன் கதைகளை நான் படித்துப் பார்க்க அவசியமில்லை; நேரே அச்சுக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்று சொல்லக்கூடிய பதிப்பாளர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக இன்றைய எழுத்தாளர்களுக்கு அவ்வாய்ப்புகள் அநேகமாக இல்லை. அச்சுக் கதவுகள் அடைபட்டிருக்கும் சூழலில் அமேசான் கிண்டில் ஒரு புதிய வாசல்.

விருப்பமிருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லை என்றால் விலகி நிற்கலாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter