
எழுதுவது எனக்கு எவ்வளவு சுலபமான வேலை என்பது நான் எழுதியதை எடிட் செய்ய அமரும்போதுதான் எப்போதும் புரியும். இத்தனைக்கும் நான் எழுதுவதில் எழுத்துப் பிழைகள் வராது. இலக்கணப் பிழைகள் இருக்காது. சொற்றொடர்களில் குழப்பம் இராது. நீண்ட சொற்றொடர்களை நான் அமைப்பதில்லை என்பதால் புரிந்துகொள்ளவும் சிரமம் ஏற்படாது. சுருக்கமாகச் சொல்வதென்றால் என்னுடைய பிரதிகளுக்குத் தேவைப்படும் எடிட்டிங் என்பது மொழி சார்ந்ததல்ல. தொனி சார்ந்த எடிட்டிங் மட்டுமே. அதற்கு அப்பால், அபூர்வமாக ஒன்றிரண்டு இடங்களில் டைப்போ எரர்ஸ் இருக்கலாம். அவ்வளவுதான்.
சலம் நாவலை எடிட் செய்ய எடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இன்னும் இருபத்தைந்து அத்தியாயங்கள்கூடத் தாண்டவில்லை. இது எனக்கு மிகுந்த அச்சமூட்டுகிறது. சில நாள் ஓரிரு அத்தியாயங்களை முடித்துவிடுகிறேன். பெரும்பாலான நாள்களில் ஐந்நூறு-அறுநூறு சொற்களைக் கடக்கவே ஆறேழு மணி நேரம் பிடிக்கிறது. இதன் நிகர விளைவு, சகிக்க முடியாத கழுத்து வலியும் எப்போதும் பரவச நிலையில் இருப்பவனைப் போலக் கண்ணீர்ப் பெருக்கும்.
கழுத்து எக்சர்சைஸ் செய்து வலி தீரவில்லை. டாக்டரைப் போய்ப் பார்த்து உரிய கப்பம் செலுத்தி ஊசி போடக் கேட்டால் அவர் எக்ஸ்ரே எடுத்துக்கொண்டு வா என்றார். அதைக் கொண்டுபோய்க் கொடுத்தால், எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க காலர் அணிய வேண்டியது அவசியம் என்கிறார்.
இந்தக் கண்ணீர்ப் பெருக்கு இன்னொரு பெரிய இம்சை. ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் வருவது, அடிக்கடி எழுந்து செல்ல வேண்டும், இயற்கையை ரசிக்க வேண்டும், கண் மூடி ஆழ்நிலை தியானம் செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு ஆயிரம் கருத்துகளை அள்ளித் தருகிறார்கள். உண்மையில் என் ஸ்கிரீன்தான் என்னைப் பார்த்துக் கண்ணீர் உகுக்க வேண்டும். அந்தளவுக்கு நிறங்களைக் கொன்று வெறும் சாம்பல் நிறமாக வைத்திருப்பேன். திரை வெளிச்சம் என்பது இரண்டு புள்ளிகளைத் தாண்டியதே கிடையாது. எல்லா இணையத்தளங்களும் எல்லா செயலிகளும் டார்க் மோடில் திறக்கும்படியாகவே அமைத்திருப்பேன். கண்ணைப் பறிக்க அதில் ஏதும் இராது. கொசகொசா கிடையாது. எழுத்துகள்கூடப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை அளவுக்கே இருக்கும். என்ன இருந்து என்ன? அசோக வனத்து ஆண் சீதையாக எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாகவே இருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன். புலம்பிப் பயனில்லை. இது இவ்வளவுதான்; இப்படித்தான்.
சலத்தை எடிட் செய்வதில் எனக்குள்ள சவால், இதுவரை நான் எதிர்கொள்ளாதது. இந்நாவலில் மூன்றே கதாபாத்திரங்கள்தாம் திரும்பத் திரும்ப வருகின்றன. மூவருமே ஆண் தடியர்கள். மூவரில் இரண்டு பேர் ஆரியர்கள். ஒருவன் அதர்வ வேத காலத்தில் இருந்த கிராத குலத்தைச் சேர்ந்தவன். இரண்டு ஆரியர்களில் ஒருவன் பிராமணன். இன்னொருவன் சூத்திரன். அவன் படித்தவன், பண்டிதன் என்றால் இவன் பிறவி ஞானி. படிப்பெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையில் இருப்பவன். இரு பெரும் ஞானஸ்தர்களை மொழி அளவில் வேறுபடுத்திக் காட்டும்போது குல பேதமும் மொழியில் இறங்கி வர வேண்டும். ஆனால் என் கதைப்படி சூத்திரனின் மொழி, பிராமணனின் மொழியினும் வீரியம் மேலோங்கி இருந்தாக வேண்டும்.
நாமறியாத மொழியில் பேசிக்கொண்டிருந்தவர்களின் கதையைச் சொல்வதற்குப் பேச்சு மொழி / கொச்சை மொழி உதவாது. இலக்கணம் வழுவாத மொழிதான் அதற்குச் சரி. அதில் இருவேறு தொனிகளைக் கொண்டு வருவது என்பது விளையாட்டல்ல. சொற்கட்டமைப்பு, சொற்றொடர்களில் இடம்பெறும் சொற்களின் எண்ணிக்கை என்கிற இரண்டு வழிகளில் மட்டுமே அதைச் சாத்தியமாக்க வேண்டும். சொல் சொல்லாகப் படித்து, தேவைப்படும் இடங்களில் அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.
இதற்கிடையில் என் பதிப்பாளர் இரண்டு முறை அழைத்து, எப்போது முடியும் என்று கேட்டுவிட்டார். என்னைக் கேட்காதீர்கள், என் கழுத்தைக் கேளுங்கள் என்றா சொல்ல முடியும்? பிப்ரவரி இறுதியில் முடித்துவிடுவேன், மார்ச் பாதியில் கொடுத்துவிடுவேன் என்று வாய்க்கு வந்தபடி சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஏப்ரல் ஆகிவிடுமோ என்று இப்போது தோன்றுகிறது.
இவை அனைத்துக்கும் அப்பால் இந்தப் பணி எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையைத் தருகிறது. எழுதவே முடியாது என்று நினைத்த ஒரு கருப்பொருளை எழுதி முடிக்க முடிந்தது போல, ஏதோ ஒரு கட்டத்தில் அதன் சுருதி நகர்ந்த இடங்களை இழுத்துக் கோத்துக் கட்டிவிடுவேன் என்று ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போது சொல்லிக்கொள்கிறேன். இந்நாவலுக்காகச் செலவிடும் உழைப்பில் இன்னும் நான்கு வட கொரியா எழுதிவிட முடியும். அதை வாங்கிப் படித்த வாசகர்களுள் பத்தில் ஒரு பங்குகூட இதற்கு இருக்க மாட்டார்கள் என்பதும் தெரியும்.
ஆனாலும் விடாப்பிடியாக இதனைச் செய்து முடிக்க நினைப்பதற்கு ஒரே காரணம்தான். இன்னொருவர் இதைச் செய்யவே முடியாது. பொதுவான ஒரு கதைக்களம் என்றால் எனக்கு நாவலை எடிட் செய்து தர ஒன்றிரண்டு எடிட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த சப்ஜெக்டை எடிட் செய்ய அவர் குறைந்தபட்சம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் படித்துப் புரிந்துகொண்டவராக இருக்க வேண்டும். மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை, இனக்குழுக்களை, ஏழு நதிகளைக் கடந்து வந்த ஆரியர்களை, அவர்களுக்குள் இருந்த வர்ண பேதங்களை, அவர்களது தெய்வங்களை, நம்பிக்கைகளை, அவர்களது படையெடுப்புகளை, இம்மண்ணின் மக்கள் அவர்களுக்கு எதிராக நடத்திய உரிமைப் போர்களை, எதிர்கொண்ட சூழ்ச்சிகளை, அடைந்த வெற்றிகளை, வீழ்ச்சிகளை, இல்லாமல் போன இனங்களை, உருமாறிய இனங்களை, நிகழ்ந்த கலப்புகளை, அதன் காரணங்களை, இன்னும் பலவற்றைக் குறித்த வாசிப்பறிவு இல்லாமல் இப்பிரதியினை எடிட் செய்யவே முடியாது. அதனால்தான் நானே செய்ய வேண்டியதாகிறது.
தொழில் அடிப்படையில் நான் ஒரு எடிட்டர். இன்னொருவர் பிரதி என்றால் இந்நேரம் முடித்துக் கொடுத்திருப்பேன். சொந்தப் பிரதியை எடிட் செய்வது எத்தனை பதற்றம் தரக் கூடியது என்பதை இதில் கற்கிறேன். வசூல்ராஜா படத்தில் பிரகாஷ் ராஜின் வசனம் ஒன்று உண்டு.
‘இதுவரைக்கும் நான் ஆயிரம் ஆப்பரேஷன் பண்ணியிருப்பேன். எப்பவும் என் கை நடுங்கினதில்ல. ஒருவேள நாளைக்கு என் பொண்ணுக்கு நான் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா என் கை நடுங்கலாம்.’
எனக்கு இது அப்படி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.