இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் தான் ஆசிரியர் பா ராகவன் அவர்களது குரலை முதல் முறையாகக் கேட்டேன். புத்தகங்கள் வழியாக அரசியலைப் புரிய வைத்தவர், அன்று எழுத்து எனும் தீவிர அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரது எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தவர்கள் அறிமுகமாகிக் கொண்டு, சேர்ந்து பயணிக்கத் தொடங்கினோம்.
முதல் வாரம் கதை பேசினோம். கதை என்றால் என்ன என்று ஆரம்பித்து ஒரு நல்ல கதையை எப்படி எழுத வேண்டுமென்று பேசினோம். ஆம், உரையாடல் மற்றும் உதாரணங்கள் வழிதான் வகுப்புகள் நடந்தன. ஒரு வழிப் பிரசங்கத்திற்கு நாங்களும் தயாராக இல்லை, ஆசிரியருக்கும் அப்படியெல்லாம் வகுப்பில் சர்வாதிகாரம் செய்யத் தெரியாது. கதைக்குத் தேவையானவை என்ன, மறந்தும் சேர்க்கக் கூடாதவை என்னென்ன என்றுக் கற்றுத் தந்தார். அதையொட்டிய வீட்டுப்பாடங்களையும் ஒவ்வொரு வகுப்பிலும் தந்தார். நாங்கள் அனுப்பியவற்றை திருத்தி, குறைகளையும் நிறைகளையும் வகுப்பிலேயே விவாதித்தோம். புனைவு, அபுனைவு இரண்டிற்குமுள்ள வித்தியாசம் எனக்கு அன்று தான் புரிந்தது.
இரண்டாவது வாரம் நாவல் பற்றியது. உண்மை மட்டுமே ஒரு நாவலாகக் கூடிய தகுதி உடையது என்பதை ஆணித்தரமாகப் புரிய வைத்தார். ஒரு வார்த்தை உண்மையிலிருந்து மிகுந்து விட்டால் கூட, வாசகன் அந்த நாவல் பயணத்திலிருந்து தன்னை விலக்கிக் கொள்வான் என்றார். சிறுகதையிலிருந்து நாவல் எப்படி வேறுபடுகிறது என்பதைப் பார்த்தோம். ஆனால் எழுத்துக்குத் தேவையான அடிப்படைத் தரம் எவ்வகை படைப்பிலும் தாழ்ந்துவிடக் கூடாது என்பதையும் நினைவுறுத்திக் கொண்டே வந்தார். வீட்டுப்பாடங்களும் தொடர்ந்தன. ஒரே கதையை வகுப்பிலிருந்த ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் யோசிக்கிறோம் என்பது உற்சாகப்படுத்தியது.
தொடர்கதை, நெடுங்கதை என்று எல்லாவற்றையும் அலசிவிட்டு முக்கியமான ஒரு சவாலை எங்கள் முன் வைத்தார். அந்த வருடத்திற்குள் வகுப்பிலிருக்கும் ஒருவராவது ஒரு நாவலை முழுமையாக எழுதி முடித்துவிட்டால், அதை அவரே படிப்பதாகவும் வாக்குக் கொடுத்தார். நாவல் எழுத ஒரு எழுத்தாளன் தன்னை எப்படித் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். ஹாருகி முரகாமியிலிருந்து அவர் வரையிலும் எப்படி நாவல் எழுதுகிறார்கள் என்று சொல்லியிருந்தார். அவர் வாக்குத் தவறுகிறாரா என்று சோதிக்கும் நிலைக்கு நாங்கள் யாரும் அவரை உட்படுத்தவில்லை என்பதே உண்மை. கேட்கும் போது எளிதாகத் தோன்றியது எழுத்தாளனின் உலகம். அது அன்றாடம் கோரிய தொடர் ஒழுக்கத்திற்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மூன்றாவது வாரம் அபுனைவு உலகத்திற்குள் நுழைந்தோம். இதுவரை நாம் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு, ரப்பர் வைத்து அழித்துவிட்டு இதில் நுழையுங்கள் என்றார் ஆசிரியர். அதுவரை வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதி வைத்திருந்த எனக்கு, அதுதான் அபுனைவு என்பது அன்று விளங்கியது. ஆனால் அப்படிக் கூப்பிடக்கூட தகுதியில்லாதவை என்பதும் விளங்கியது. ஒரு வாக்கியத்தை ஒரு பத்தி அளவுக்கு எழுதுபவள் நான். ஒரு வாக்கியத்தில் ஏழு சொற்கள் தான் இருக்க வேண்டு என்று கேட்டதே பேரதிர்ச்சியாக இருந்தது. வாழ்வில் மறக்க முடியாத பாடம் என்றால் நான் இதைத்தான் சொல்வேன். அதற்குப்பிறகு பழகத் தொடங்கி, இன்னும் பழகிக் கொண்டிருக்கிறேன்.
இதிலும் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை இரண்டையும் விவாதித்தோம். ஜாங்கிரி பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்தில் ஜாங்கிரி பிழியக் கூடாது என்றார். சம்பவங்கள், நபர்களின் அறிமுகம் என்று விதவிதமாக விடியவிடிய வீட்டுப்பாடம் செய்தோம். ஆசிரியரின் எழுத்தைப் போலவே வகுப்பும் விறுவிறுப்பாகச் சென்றதால், சோர்வு தெரியவில்லை. பரபரப்புடன் இயங்கினோம். ஒரு கட்டுரைக்கான சரிபார்ப்புப் பட்டியலையும் விளக்கினார். உதாரணங்கள் வழியே புரிந்து கொண்டோம். புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. அதன்படி எழுதும்போது தான் தடுமாறினேன். அவ்வப்போது தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தியது பெரிதும் உதவியது.
கடைசி வாரம் எங்களை எழுத்தாளராக்கி விடுவது என்ற முடிவோடு வந்தார். எழுத்து ஒழுக்கத்தைப் பழக, வாழ்விலும் ஒழுக்கம் தேவை என்பதை விளக்கினார். ஒரு புத்தகத்தின் முழு பயணத்தையும் விளக்கி, நாங்கள் செய்ய வேண்டியதைக் கற்றுக்கொடுத்தார். எப்படி எழுதத் திட்டமிடுவது என்பதில் தொடங்கி, வாசகனுக்கு அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பது வரை விவாதித்தோம். அன்று பேசியதை எல்லாம் இந்த இரண்டு வருடங்களில் எங்கள் புத்தகங்களுக்குச் செய்து பழகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது எழுத்துப் பயிற்சி வகுப்பு நண்பர்களோடு, இல்லையில்லை எழுத்தாளர்களோடு இன்றும் சேர்ந்து பயணிக்கிறேன். கற்றலின் தொடக்கம் சரியாக அமைந்ததால், எழுத்தும், கற்றலும் இன்றும் தொடர்கின்றன.
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
வினுலா
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.