எதிர்வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் எழுத்துப் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்குகிறேன். எழுத்தார்வமும் கற்கும் ஆர்வமும் உள்ள புதியவர்கள் வரலாம்.
இந்த வகுப்புகளைத் தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்றும் ‘எழுத்துக் கலையை எல்லாம் கற்றுத்தர முடியுமா’ என்று கேட்கச் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் என்றும் இருப்பார்கள். எத்தனை முறை விளக்கம் சொன்னாலும் இதையே கேட்டுக்கொண்டும் இருப்பார்கள். கலையை யாரும் கற்றுத்தர முடியாது. அது தன்னியல்பாக வருவது. ஆனால் நுட்பங்களைக் கற்றுத்தான் தேற முடியும். இளையராஜா ஏன் தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோ கற்கச் சென்றார் என்று ஒரு விநாடி சிந்திக்க முடிந்தால் இது புரிந்துவிடும். இசை, எழுத்து, ஓவியம் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான். இதற்கு வெளியே நின்று எட்டிப்பார்த்துக்கொண்டிருப்போரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
நிற்க. சென்ற வருடம் என் தனிப்பட்ட எழுத்துப் பணிகள் அதிகம் இருந்தபடியால் ஒன்றிரண்டு வகுப்புகளுக்கு மேல் நடத்த முடியாமலாகிவிட்டது. இந்த வருடமும் அநேகமாக இது தொடரலாம் என்று தோன்றுகிறது. ஆனால் தொடர்ச்சியாகப் பலர் வகுப்பு எப்போது தொடங்கும் என்று கேட்டுக்கொண்டிருப்பதால் முதல் வகுப்பை மட்டுமாவது இப்போது நடத்திவிட நினைத்தேன்.
உண்மையில் இது என் நேரத்தை உறிஞ்சும் விஷயம். நான்கு வகுப்புகள், பதினாறு மணி நேரம் என்பது என்னுடைய நான்கு வார இறுதிகளை முழுதாக உண்பது. ஆனால் இந்த வகுப்புகளிலிருந்துதான் பல நல்ல-புதிய எழுத்துக் கரங்களை இனம் காண முடிகிறது. அவர்களைத் தொடர்ச்சியாக மெட்ராஸ் பேப்பர் வார இதழில் எழுத வைக்க முடிகிறது. தேறி வருபவர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். போட்டிகளில் வெல்கிறார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மகிழ்ச்சிதான் உற்சாகம் குறையாமல் செயல்பட வைக்கிறது. எல்லாம் ஒன்றோடொன்று பிணைந்தவை.
எனவே இம்முறை பிப்ரவரி 8. புனைவு, அபுனைவு, மொழி நடை, சமூக ஊடகங்களில் எழுதுவது என்று நான்கு பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு பாடமும் நான்கு மணி நேரம். சனி-ஞாயிறுகளில் இந்திய நேரம் மாலை 7 மணிக்கு வகுப்பு தொடங்கும். இதர விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கும் வகுப்பில் இணைவதற்கும் +91 8610284208 என்னும் வாட்சப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.