ஃபேஸ்புக்: ஓர் அறிவிப்பு

இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான்.

கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக் கூடப் பல போஸ்ட்கள் போய்ச் சேரவில்லை.

வேறென்ன? என்னுடைய சமீபத்திய இரண்டு புத்தகங்களின் தலைப்புகளும் உட்பொருளுமே காரணம்.

அது மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும்; குறிப்பாக Boost Post ஆசையைத் தூண்டி அதிகம் பேருக்குப் போய்ச் சேரப் பணம் கட்டவைக்கப் பார்ப்பான் என்று பலர் சொன்னார்கள்.

இந்த உலகில் இலவசம் என்று ஏதுமில்லை. அனைத்துக்கும் பின்னணியில் ஒரு வியாபாரம் இருந்தே தீரும் என்பதை அறிவேன். இருப்பினும் இந்தக் குறிப்பிட்ட விவகாரத்தைப் பரீட்சை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கே எழுதுவதைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு வாட்சப் சானலிலும் என்னுடைய இணையதளத்திலும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். புத்தகக் காட்சி மாதத்தில் எக்காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே செய்தேன். அந்நாள்களில் ஃபேஸ்புக்கில் இதைச் செய்து பார், அதைச் செய்து பார், ரீல்ஸ் போடு, ஸ்டோரி வை என்று ஏராளமான சிபாரிசு மெயில்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வந்துகொண்டிருந்தன. எதையும் பொருட்படுத்தவில்லை.

சரியாக ஒரு மாதத்துக்குப் பிறகு இரவு நேரங்களில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு போஸ்ட்கள் போடத் தொடங்கினேன். கவனமாக அவற்றில் என்னுடைய புதிய புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தேன்.

இதன் விளைவை நீங்கள்  இணைத்திருக்கும் ஸ்கிரீன் ஷாட்களில் பார்க்கலாம். பழையபடி நிறைய பேருக்கு போஸ்ட் போய்ச் சேரத் தொடங்கியிருக்கிறது.

நம் ஊரில் கட்சி ஒழுக்கம் என்ற ஒன்று உண்டு. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் உறுப்பினராக இருந்துவிடும்பட்சத்தில், அந்த அமைப்பு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அது சொல்லும்படியாக மட்டுமே இருக்க வேண்டும், இயங்க வேண்டும். அப்படி இருந்தால் காலக்கிரமத்தில் கிடைக்க வேண்டிய லாப சௌகரியங்கள் கிடைக்கும். கொஞ்சம் முன்னப்பின்ன நடந்துகொள்வோமானால், ஒழுங்கு நடவடிக்கை எடுத்துத் தள்ளி வைப்பார்கள். பிறகு சேர்த்துக்கொள்வார்கள். ஒரு படி கீழே உட்கார வைப்பார்கள்.

ஃபேஸ்புக் ஓர் அரசியல் கட்சி போலவே செயல்படத் தொடங்கியிருப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் எவனுக்கும் அல்லது எதற்கும் என்னால் ஆயுள் சந்தா விசுவாசியாக இருக்க முடியாது. எனக்குத் தோன்றுவதைச் செய்வதற்கு மட்டுமே நான் இருக்கிறேன். சாதகமோ, பாதகமோ. பலனை முழுதாக ஏற்றுக்கொள்ளும் முடிவுடன்தான் எழுதவே வந்தேன். மணிப்பூர் அல்லது பாலஸ்தீன் பிரச்னையைக் குறித்துப் பேசினாலே லோயர் ஃபீடில் போட்டுவிடுவேன் என்பானேயானால், அது அவன் இஷ்டம். ஹிட்லர் என்று குறிப்பிட்டால் தடை. பிரபாகரன் பெயரைச் சொன்னால் தடை. மத்திய அரசை அல்லது மோடியை விமரிசித்தால் போஸ்டைத் தூக்கிவிடுவார்கள்.

என்ன நடக்கிறது? இவன் யார் எனக்குத் தடை போட?

விளையாட்டுக்காக, ஒரு சில சந்தர்ப்பங்களில் ஃபேஸ்புக் அல்காரிதம் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் – அதன் தடைப் பிராந்திய சட்டதிட்டங்கள் பாயாத வண்ணம் மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் என்றென்றும் அப்படியே இருக்கவோ இயங்கவோ நான் ஆளில்லை. என்னைப் பிடிக்காதவர்கள் என்னைக் குறித்து எப்படி வேண்டுமானாலும் விமரிசித்துக்கொண்டிருக்கட்டும். எனக்கு அது பொருட்டல்ல. ஆனால் மனச்சாட்சிக்கு மாறாக எழுத்தில் எக்காலத்திலும் தப்பாட்டம் ஆடியதில்லை. அதுவே என் புருஷார்த்தம்.

மீண்டும் அறிவிக்கிறேன். நான் ஃபேஸ்புக்கில் பிறந்து வளர்ந்தவனல்லன். இந்த இடம் இலவசமாக இருக்கும் வரை இங்கும் எழுத எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் என் சுதந்தரத்தை விஞ்சி எனக்கு வேறெதுவும் முக்கியமில்லை. என்னுடைய இணையதளம், வாட்சப் சானல்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். விருப்பமுள்ளவர்கள் அங்கே வந்து படிக்கலாம். நாளை வாட்சப் சானலுக்கும் நெருக்கடி வருமானால் அதையும் கடாசிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்.

எழுதுவது ஒன்றுதான் எனக்கு முக்கியம். எங்கே என்பது பொருட்டே அல்ல.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter