
சலத்தை எழுதி முடித்து, ஒரு மாதம் விலகியிருந்துவிட்டு, எடிட் செய்ய அமர்ந்தபோது வினோதமான ஓர் உண்மை பிடிபட்டது. இதை உண்மை என்று ஒப்புக்கொள்வது, ஒரு வகையில் என் மனைவியிடம் என் தோல்வியை ஒப்புக்கொள்வது ஆகும். இக்கணம் வரை அவளிடம் இதைச் சொல்லவில்லை. எப்படியும் இக்குறிப்பினைப் படித்துத் தெரிந்துகொள்வாள் என்பதால் சேர்த்து வாங்கிக்கொள்கிறேன்.
இரவு சீக்கிரமாகப் படுத்துத் தூங்கிவிட்டுக் காலை எழுந்து எழுது என்று அவள் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பாள். நான் மறுத்ததில்லை. ஆனால் அன்றாடப் பணி என்று ஏற்றுக்கொண்ட எது ஒன்றையும் முடிக்காமல் என்றுமே படுத்ததில்லை. ஆகக் குறைந்தபட்சம் நள்ளிரவு பன்னிரண்டுக்குத்தான் பெரும்பாலும் என் வேலை முடியும். முடித்த மறு விநாடி படுத்துவிடுவேன். காலையும் சீக்கிரமாக எழுந்து, எழுதியதில் திருத்தம் செய்வேன். அவள் சொன்னதைக் கேட்டது போலவும் இருக்கும்; என் வழக்கம் குலையாதது போலவும் இருக்கும்.
இதன் நிகர லாபம், தூக்கம் என்பதே இல்லாமல் போய், சைதன்ய மகாபிரபுவினைப் போல, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல எப்போதும் பரவச உணர்வில் திளைக்கும் தோற்றத்தில் கண்ணீர் பெருக்கிக்கொண்டே இருந்தேன். பக்கத்துணையாகக் கழுத்து வலி, முதுகு வலி போன்றவை இருந்தன. வோலினி ஸ்பிரே, Jenburkt ஆயின்மென்ட், மசாஜ் கன் போன்றவற்றைத் தொழில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டியதானது.
இரவுப் பொழுதுகளைத் தவிர இதர நேரங்களில் ஏன் என்னால் எழுத முடிவதில்லை என்பது புரிந்ததேயில்லை. என் வீட்டைப் போல, எழுத்து வேலைக்கு இணக்கமான சூழலை உருவாக்கித்தரும் இன்னொரு வீடு இருக்கவே முடியாது. குடும்பப் பணிகள் எதுவானாலும் என் மனைவி பார்த்துக்கொள்வாள். காய்கறி வாங்கி வருவது, இட்லிக்கு மாவு அரைத்து வருவது போன்ற ஒன்றிரண்டு அற்ப வேலைகள் மட்டும்தான் எனக்கு இருக்கும். அதுவும் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள். மற்றபடி கட்டற்ற கயவனாகப் படிப்பது, எழுதுவது, தூங்குவது போன்ற சொந்த வேலைகளை மட்டுமே நான் நாளெல்லாம் செய்துகொண்டிருப்பது என்றுமே இங்கு சிக்கலானதில்லை.
அப்படி இருந்தும், நாவல் என்று வந்துவிட்டால் என்னால் பகலில் வேலை பார்க்க முடியாமல் போய்விடும். நாளெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பேன். இரவு ஒன்பது மணிக்குப் பிறகு மெல்ல ஆரம்பித்து இரண்டு, இரண்டரை வரை எழுதுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. இம்முறை அதில் ஒரு சிறிய மாற்றமாக நாளெல்லாம் யோசித்துக்கொண்டிருந்துவிட்டு மாலை ஆறு-ஆறரைக்கு எழுதத் தொடங்கிப் பன்னிரண்டு, பன்னிரண்டரைக்கு அன்றன்றைய கடமையைச் செய்து முடித்துவிட்டுப் படுத்தேன். இந்த ஒழுங்கீன ஒழுக்கம் இம்முறை மூன்று நாள்கள் மட்டும் மாற்றம் கண்டது.
அவள் திரும்பத் திரும்பச் சொல்கிறாளே என்று ஒருநாள் மட்டும் இரவு எழுதாமல் படுத்துவிட்டு, காலை நான்கு மணிக்கு எழுந்துதான் முதல் சொல்லையே எழுத ஆரம்பித்தேன். இன்னொரு நாள் வெளி வேலை இருந்தது. இரவு அலுவலகத்திலேயே தங்கும்படி ஆனது. அன்றைக்கும் இரவு சீக்கிரமே தூங்கிவிட்டுக் காலை மூன்றரைக்கு எழுந்து எழுதினேன். மூன்றாவது அனுபவம் முற்றிலும் வேறு விதம். இரவு எழுதி முடித்துவிட்டேன். காலை படித்துப் பார்த்தபோது சரியாக வரவில்லை என்று தோன்றிவிட்டது. திருத்திப் பணிகொள்ள எடுக்கும் நேரத்தைக் காட்டிலும் முற்றிலும் புதிதாக எழுதிவிடுவது எளிதென்று தோன்றியது. எனவே இரவு எழுதியதை அப்படியே டெலிட் செய்துவிட்டு, அந்த ஓர் அத்தியாயத்தை மட்டும் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து, எட்டு மணிக்கு எழுதி நிறைவு செய்தேன்.
எடிட்டிங்கில் அமர்ந்தபோது நாவலின் பிற அத்தியாயங்களைக் காட்டிலும் காலை எழுந்து எழுதிய மூன்று அத்தியாயங்கள் கை வைக்கவே அவசியமற்ற தரத்தில் இருந்ததைக் கண்டேன். இது எனக்கு வியப்பல்ல; அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில், உறங்க எத்தனை நேரமானாலும் வேலை என்று உட்கார்ந்துவிட்டால் நான் களைப்பை உணர்வதில்லை. ஆனால் ஒன்றுமே செய்யாமல் படுத்துறங்கினாலும் எழுந்த பிறகு, குறைந்தது ஒரு மணி நேரம் மப்பாகவே இருக்கும். அது மதியமானாலும், அதிகாலை ஆனாலும் அப்படித்தான்.
தூக்கக் கலக்கம் என்பது ஒரு மாயை என்பதை இந்த அனுபவம் எனக்குச் சொன்னது.
ஆனால், மனிதன் பழக்கங்களின் அடிமை. பெரும்பணி என்று மனம் சுட்டுவதையெல்லாம் ஊர் உறங்கிய பின்பு செய்வதே சரியாக இருக்கும் என்று எப்படியோ நம்பத் தொடங்கியிருக்கிறேன். நம்பத் தொடங்கிவிட்டால் அதற்குக் காரணங்களைத் தேடிப் பிடிப்பதா சிரமம்? இந்த முரட்டுத்தனமான நம்பிக்கை என்பது ஒருவிதமான அடிப்படைவாத மனநிலையின் கூறு. எப்படியாவது போராடி இதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் என்ன பெரிய வித்தியாசம்? நான் எழுத அமரும் நேரம் எதுவானாலும் அதை நள்ளிரவாக எனக்கு நானே அறிவித்துக்கொண்டால் ஆயிற்று. என் நேரம் மொத்தமும் என் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்காக நான் கொடுத்த விலை சிறிதல்ல. நேரம், நாள், வாரம், மாதம், வருடம் என்ற காலப் பிரிவுகள் அனைத்தும் எனக்குத் துச்சம். செய்யும் பணி உன்னதமாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் பொருட்டல்ல.
சலத்தின் அந்தக் குறிப்பிட்ட மூன்று அத்தியாயங்கள் எனக்கு உணர்த்திய பாடம் ஒன்றுண்டு.
எந்த வேலையையும் முதல் நாள் இரவே முடித்துவிடுவது என்பது கடைசி நேரப் பதற்றங்களைத் தவிர்ப்பதற்காக நான் மேற்கொள்ளும் உத்தி. எண்ணிப் பார்த்தால் என்றுமே அந்தப் பதற்றத்தைத் தவிர்த்ததாக நினைவில்லை. எனவே, இனியொரு நாவல் எழுதத் தோன்றுமானால் அதை முழுக்க முழுக்க அதிகாலைப் பொழுதில் மட்டுமே எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.
அதுவும் ஓர் அடிப்படைவாத மனநிலைதான் என்று என்றைக்குத் தோன்றுகிறதோ, அப்போது மதியப் பொழுதுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.