
அன்பின் பாரா,
உங்கள் அபுனைவுகள் எளிய நடையில் பல்வேறு தளங்கள் சார்ந்த அறிவுக் களஞ்சியமாக இருக்கின்றன. புனைவுகள் ஆழமானதாக, தத்துவார்த்தமாக உள்ளன. ஒரு எழுத்தாளராக இந்த இரண்டு ஆளுமைகளை எப்படிக் கையாள்கிறீர்கள்?
ஷீலா கே
sheelakanagavel@gmail.com
—
அபுனைவுகளில் வெளிப்படுபவன் பத்திரிகையாளன் பாரா. நாவல்களில் தெரிபவன் இயல்பான பாரா. பத்திரிகையாளனாக நான் இருந்தது / இருப்பது எனக்குத் தொழில்முறை சார்ந்தது. அத்தொழிலுக்கான ஒழுக்கத்தை அந்தப் புத்தகங்களில் சரியாக வெளிப்படுத்துவேன். அரசியல் நூல்களில் என் நோக்கம் இரண்டுதான். சரியானவற்றை மட்டும் எழுதுகிறேனா? சரியான விதத்தில் வெளிப்படுத்துகிறேனா? மற்ற எதைப் பற்றியும் எனக்கு அதில் அக்கறையில்லை.
நாவல்கள் அப்படியல்ல. அது எனக்காக மட்டுமே நான் செய்கிற பணி. வாழ்க்கை எனக்களிக்கும் அனுபவங்களின் மீதான விசாரணையை அதில் மேற்கொள்கிறேன். அடிப்படையில் நான் தத்துவங்களை வெறுப்பவன். எல்லா விதமான தியரிகளையும் அப்புறப்படுத்திய ஒரு வாழ்க்கைக்காகக் கனவு காண்பவன். சாதாரண மனிதனின் அன்றாடங்களில் தத்துவங்களுக்கு வேலையே இல்லை. மழைக்குக் குடை. பசி நேரத்துக்கு உணவு என்பான் பாரதி. அவ்வளவுதான் எல்லாமே. எண்ணிப் பார்த்தால் என்னுடைய ஒவ்வொரு நாவலிலும் தத்துவங்களைத் தகர்க்கும் முயற்சியை மட்டுமே மேற்கொண்டு வந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதேயில்லை. எழுதத் தோன்றுவதை எழுதுகிறேன். திருப்தி வந்தால் பிரசுரிக்கிறேன். இல்லாவிட்டால் இல்லை. மதிப்புரைகள், பாராட்டு, சால்வைகள், விருதுகள், ஜதிபல்லக்கு வகையறாக்களைச் சிந்திப்பதில்லை. இலக்கிய மடாலயங்களின் பூரண கும்ப ஆசீர்வாதங்களை அடியோடு பொருட்படுத்துவதில்லை. முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். அடுத்தபடியாக வாசகருக்குப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்ப்பேன். இரண்டாவது நடக்காவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இடையில் இன்னொரு சாராருக்கு இடமளித்ததில்லை. இறுதிவரை இப்படியேதான் இருப்பேன். இதுதான் எனக்கு வசதியாகவும் இருக்கிறது.
உங்கள் வினா, புனைவு/அபுனைவுகளில் பயன்படுத்தும் இருவேறு மொழி சார்ந்து இருக்குமானால், அது பெரிய விஷயமே இல்லை. உங்களாலும் முடியும், யாராலும் முடியும். போதிய பயிற்சி மட்டுமே தேவை.
முதலில், மொழியை உணர்வுத்தளத்தில் அணுகுவதை நிறுத்த வேண்டும். தொட்டதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் அதை ஒரு வெளிப்பாட்டுக் கருவியாகப் பார்க்கப் பழக வேண்டும்.
அடுத்து, நமது கருவியின் கூர்மை சரியாக உள்ளதா என்று எப்போதும் கண்காணிக்க வேண்டும். பிழைபட்ட மொழியில் எழுதும் ஒருவர் எந்நாளும் உயர்ந்த இடத்தை அடைய மாட்டார்.
மொழிக் கட்டமைப்பைச் சிதைக்காமல், அதன் இலக்கணச் சட்டகங்களுக்குள்ளேயே நூதனங்களை முயற்சி செய்ய முடியும். இடைவிடாத பயிற்சி அதனை சாத்தியமாக்கும். அது சாத்தியமாகும்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதற்கு நமது மொழி பழகி வந்திருக்கும்.
ஆனால் ஒன்று. மொழியைப் பழக்குவது என்பது நாய்–பூனையைப் பழக்குவது போன்றதல்ல. வீட்டில் ஒரு சிறுத்தை அல்லது சிங்கத்தைச் சோறு போட்டு வளர்ப்பது போன்றது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.