பிரதி கர்ப்பம்

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.

ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.

அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.

உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.

அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.)  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.

ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.

எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.

அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.

‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.

இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.

சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.

எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.

இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.

எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading