உருப்படாதது

புத்தக அடுக்கை எப்போதெல்லாம் சுத்தம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் புதைபொருள் ஏதாவது கிடைக்கும். அவை என் முந்தைய காலத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை நிச்சயமாக நினைவூட்டும். எண்ணிப் பார்த்தால் சிறிது வியப்பாகவே இருக்கிறது. புத்தக அடுக்குகள் தவிர, வீட்டில் வேறெங்கும் எதிலும் என் தடயங்களை என்றுமே கண்டெடுத்ததில்லை.

முன்பெல்லாம் அடிக்கடி ரயில் டிக்கெட்டுகள் எந்தப் புத்தகத்திலிருந்தாவது கீழே விழும். ஓரிரு முறை சீசன் டிக்கெட்டைக் கண்டெடுத்திருக்கிறேன். அவை குமுதம் காலத்துப் பொருள்கள். போஸ்ட் கார்ட்கள், இன்லண்ட் லெட்டர்கள் அகப்பட்ட காலமும் முடிந்துவிட்டது. போஸ்ட் கார்டுகள் பெரும்பாலும் திகசி அல்லது லாசராவிடமிருந்து வந்தவையாக இருக்கும். தொடக்க காலத்துக் கதை நிராகரிக்கப்பட்ட கடிதங்கள், பிரசுரத்துக்குத் தேர்வான கடிதங்கள், ஆஃபர் லெட்டர்கள் எனப் பலவற்றையும் புத்தகங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிறக்கும்.

இந்தக் கடிதங்கள் எல்லாம் சாதுவானவை. அவை போக பான்பராக் கவர்கள், மானிக்சந்த் கவர்கள், மாவாத் தூள், மாவா பாக்கெட்டுகள் எப்போது புத்தக அடுக்கைக் கலைத்தாலும் எதிலிருந்தாவது கீழே விழும். பான்பராக் ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலத்தில் அதை மென்றிருக்கிறேன். பிறகு மானிக்சந்த். அது சற்று விலை அதிகமென்றாலும் ருசியின் பொருட்டு அங்கே சிறிது காலம். இவை இரண்டுமே வாங்க முடியாத விலைக்குச் சென்றதும் ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு பிராண்டை சில காலம் பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கும் பிறகுதான் மாவா.

பதினெட்டு வயதில் தொடங்கிய இந்தப் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இரண்டாண்டுகள் ஆகின்றன. கொடுமை என்னவென்றால், சென்ற வாரம் புத்தக அடுக்கைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஏதோ ஒரு புத்தகத்துக்கு உள்ளே இருந்து ஒரு ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் கீழே விழுந்தது. 1996 முதல் 2000 ஆவது ஆண்டு வரை அது என் பக்கத்துணையாக இருந்திருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டு குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதுதான் புரசைவாக்கம் சேட்டுகளின் மாவாவுக்கு ரசிகனாகிப் போனேன்.

நிற்க. அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட்டைப் பார்த்ததும் ஒரு தருணம் நினைவுக்கு வந்தது. நியாயமாக ஒரு கதையாகவே எழுதக்கூடிய சம்பவம்.

நான் அவ்வளவு ஒன்றும் யோக்கியமில்லை என்று என் பெற்றோருக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு அயோக்கியன் என்று சரியாகத் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களுக்கு மூன்று பெண்கள். அந்த மூவரில் ஒருத்தி பார்க்கக் கொஞ்சம் ஸ்டைலாக இருப்பாள். இரவெல்லாம் ஸ்டீரியோவில் பாட்டுப் போட்டு அலறவிடுவாள். படியிறங்கி வரும்போதும் போகும்போதும் அவளது ஹீல்ஸ் செருப்பு பிரத்தியேகமாக ஒரு சத்தமெழுப்பும். வாரப்படாத கூந்தலும் தொளதொளவென்ற சட்டைக்காரிச் சட்டையும் தொடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுமாக, அவள் எப்போதும் என் அம்மாவின் கண்களுக்கு ஒரு ‘உருப்படாதது’.

உண்மையில் அந்தப் பெண் பரம சாது. தங்கமான குழந்தை. ஆனால் உலகம் தோற்றத்தைக் கொண்டல்லவா யாரையும் மதிப்பிடுகிறது?

சரி, எனக்கென்ன. நான் ஒரு ஃபூல்சந்த் சூப்பரை உரித்து வாயில் கொட்டிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே குப்பையை வீசிவிடுவேன். வீடு பெருக்க வருகிற பெண்மணி காம்பவுண்டுக்கு உட்புற இடைவெளியையும் பெருக்கித் தள்ளுவார் என்கிற நம்பிக்கையில் செய்தது அது.

ஆனால் அவரோ, நமது பண்பாடு மீறாத பெண்மணியாக இருந்திருக்கிறார். அந்த ஓரடி இடைவெளியில் யார் வரப் போகிறார்கள், என்ன பெரிய குப்பை இருந்துவிடப் போகிறது என்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார் என்பது மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.

என்றைக்கோ எதற்கோ அந்தப் பக்கம் சென்ற என் அம்மா, ஜன்னலுக்கு வெளியே குவிந்து கிடந்த ஃபூல்சந்த் சூப்பர் பொட்டலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இயல்பாக அவரது தலை உயர்ந்து மாடி ஜன்னலைப் பார்த்தது. அதுதான் அந்த ‘உருப்படாதது’ வசிக்கும் அறை. அங்கிருந்துதான் ஸ்டீரியோ அலறும்.

‘நான் சொல்லல, அது உருப்படாதுன்னு? பாரு. பான்பராக் போட்டு, பாக்கெட்டை வெளிய கொட்டிக் குவிச்சிருக்கா. இதெல்லாம் நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப் போயி என்ன பாடு படுத்தப் போகுதோ?’ என்று புலம்பிக்கொண்டே குப்பைகளை அள்ளிக் கொட்டிவிட்டு வந்தார்.

அதன் பிறகு வீட்டில் நான் பாக்குப் போடுவது இன்னும் எளிதாயிற்று. எத்தனை பாக்கெட்டுகளை ஜன்னலுக்கு வெளியே வீசினாலும் அது நான் போட்டதல்ல. மாடி வீட்டு உருப்படாதது போட்டது. அந்தப் பெண்ணை என்னைக் காக்க வந்த பெண் தெய்வமாகவே எண்ணிக்கொண்டேன்.

பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் தெய்வம் வந்தது. இது சற்று உக்கிரமான தெய்வம். அநீதிகளுக்கு அடிபணியாததும், சுட்டிக்காட்டினால் பிரச்னையாகும் என்று தெரிந்தால், அழுத்தந்திருத்தமாகவே சுட்டிக்காட்டும் இயல்பு கொண்டதுமானது.

வீட்டுக்குத் தெரியாமல் நான் செய்துகொண்டிருந்த காரியத்தை முதல் முதலில் போட்டுக் கொடுத்து மாட்டிவிட்ட புண்ணியவதி என் மனைவியே.

‘பாக்குப் போட்டுத் துப்பறதும் குப்பைய வெளிய கொட்றதும் மாடி வீட்டு சுப்ரியா இல்ல. உங்க புள்ளதான்’ என்று அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரே போட்டு உடைத்தாள்.

இல்லவே இல்லை, இருக்கவே இருக்காது என்று அப்போதும் என் அம்மா சொல்லத்தான் செய்தார். ஆனால் உண்மைக்கென்று ஒரு வாசனை உண்டு. அது ஃபூல்சந்த் சூப்பர் குட்காவின் வாசனையைக் காட்டிலும் வீரியம் மிக்கது.

இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் ஒன்று ஒரு புத்தகத்தினுள் பதுங்கியிருந்து வெளிப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மாடி வீட்டு சுப்ரியா இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ தெரியாது. அவளுக்கே ஒரு குழந்தை பிறந்து, அது வளர்ந்து பெரிதாகியிருக்கும். ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு குட்கா பிராண்ட் ஒரு காலத்தில் இருந்ததென்ற தகவல்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. அவ்வளவு ஏன்? எந்தக் காலத்திலோ கீழ் வீட்டில் குடியிருந்த என் முகமே அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. என் அம்மா அவளை உருப்படாதவற்றின் பட்டியலில் வைத்திருந்த சரித்திரக் குறிப்பும் தெரிந்திருக்காது.

எல்லாவற்றையும் இருபத்தெட்டு வருடங்களாகத் தனக்குள் சேகரித்து வைத்திருந்த அந்தப் பழைய குட்கா பாக்கெட்டை ஒருமுறை முகர்ந்து பார்த்துவிட்டுக் குப்பையில் போட்டேன். பிறகு இதை எழுதினேன்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading