நமது துயரங்களின் ஆழம் அல்லது அடர்த்தி எத்தகையது? துயரங்களில் பெரிது, சிறிதென்ற பேதமில்லை. எனவே எத்தகையதானாலும் அதன் ஆழமும் அடர்த்தியும் ஒரே மாதிரிதான் இருந்தாக வேண்டும். சந்தர்ப்பங்களுக்கேற்ப வெளிப்பாட்டு விதம் மாறுமே தவிர, அதை எப்படி அளவிடுவது?
நெடுங்காலமாக எனக்குள்ள வினா இது. என்றாவது விடை கண்டறிவேன் என்று எப்போதும் நினைத்துக்கொள்வதுதான். ஆனால், நடந்தாலும் இல்லாது போனாலும் அது என்னை பாதிக்க அனுமதிக்க மாட்டேன். நான் இருக்கும் வரை மட்டுமே என் துயரங்களுக்கும் வாழ்க்கை. மீதம் வைத்துவிட்டுச் செல்பவை மகிழ்ச்சியின் துளிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஐம்பது வயதுக்குப் பிறகு தோன்றத் தொடங்கியிருக்கிறது.
துன்பத்தின் காரணம் ஆசையே என்ற முடிவுக்கு வர, கீதை தயங்கவில்லை. புத்தரும் அதைத்தான் சொன்னார். என்னைப் பொறுத்த வரை சாமானியர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றை அறுதிச் சொல்லாக வைத்துவிட்டு நகர்ந்துவிடுவதில் பயனில்லை. நாம் ஆசைப்படத்தான் செய்வோம். அதைக் குறைத்துக்கொள்ள முடியாது. துன்பம் வரத்தான் செய்யும் என்றால் வந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். நீரிழிவு இருந்தாலும் இனிப்பைக் கண்டால் எடுத்து வாயில் போட்டுக்கொள்வதை நிகர்த்தது இது. ருசிகளற்ற வாழ்வில் ஒன்றுமில்லை. ஒன்றுமற்ற வாழ்க்கை நமக்குத் தேவையில்லை.
ஆனால் நாம் அனுபவிக்கும் துன்பங்களின் நிறையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். திட்டமிட்டுச் சேமிக்கிறோம். திட்டமிட்டுச் செலவு செய்கிறோம். திட்டமிட்டுச் சுற்றுலாக்கள் செல்கிறோம். வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்குகிறோம். சீரற்ற வாழ்க்கையை வாழ்வோரிடம்கூடக் குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ஒன்று இருந்தே தீரும். திட்டங்கள் அனைத்தும் நமது மகிழ்ச்சியின் பொருட்டு நம்மால் உருவாக்கப்படுபவை என்பதை எண்ணிப் பாருங்கள்.
துயரங்களையும் அப்படித் திட்டமிட முடியாதா?
இது சிறிது சிக்கலான விவகாரம். துக்கம் என்பது ஓர் உணர்ச்சி. எதிர்பாராத, நாம் விரும்பாத தருணங்களில் பிறப்பது. அதைத் திட்டமிடுவது எப்படி சாத்தியம்? என்றால், எதிர்பாராத தருணங்களில் எதிர்கொள்ள நேரிடுகிற மகிழ்ச்சியின் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று தோன்றுகிறது.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு எனக்கொரு விருது கிடைத்தது. எதிர்பாராத, பெரிய அங்கீகாரம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விருது என்பதால் நாளிதழ்களில் செய்தி வந்தது. உடனே, இந்தியாவின் கவனிக்கத் தகுந்த இளம் படைப்பாளிகள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா அப்போது வெளியிட்ட நூறு பேர் பட்டியலில் என் பெயரைச் சேர்த்திருந்தது. காரணம், அந்த விருது.
எனக்குத் தலைகால் புரியவில்லை. அம்மகிழ்ச்சியை அக்கணமே எனக்குத் தெரிந்தவர்கள், என்னைத் தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துவிடத் துடித்தேன். அறிவிப்பு வந்த நேரம், ஆம்பூரில் ஒரு விழா மேடையில் இருந்தேன். மாலன் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் முதல் முதலில் அதைப் பொதுவில் அறிவித்தவர். அதன்பிறகு என்னால் மேடையில் அமர்ந்திருக்கக்கூட முடியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சி. யார் என் பெயரைப் பரிந்துரை செய்திருப்பார்கள் என்று அப்போதே யோசிக்கத் தொடங்கிவிட்டேன்.
மாலன் பேசி முடித்துவிட்டு வந்து அமர்ந்ததும் அவரிடமே கேட்டேன். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார். ஆம்பூரில் இருந்தபடி நான் தொடர்புகொண்ட யாருக்கும் விவரம் தெரிந்திருக்கவில்லை.
மறுநாள் சென்னைக்கு வந்தவுடன் ஜெயமோகனை அழைத்து விவரம் சொல்லிக் கேட்டேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாரே தவிர, அவருக்கும் எப்படி என் பெயர் அந்த விருது கமிட்டிக்குச் சென்றது என்பது தெரியவில்லை. பிரபஞ்சனிடம் கேட்டேன். தெரியவில்லை. விருதுக்கு விண்ணப்பம் செய்வது, நடுவர் யார், பரிந்துரையாளர் யார் என்று அதற்கு முன்பே தெரிந்துகொள்வதெல்லாம் இப்போதுதான். இருபதாண்டுகளுக்கு முன்பு எந்த விருது கமிட்டியில் யார் இருந்திருக்கிறார்கள் என்பது விருது அறிவிக்கப்பட்ட பின்னர்கூடத் தெரியாத சூழ்நிலைதான் இருந்தது. தவிர, இன்றளவுக்கு இணையம் பரவலாகாத காலம் என்பதால் தகவல் தொடர்புகளும் வரையறுக்கப்பட்டவையாகவே இருந்தன.
அந்த விருதுத் தகவல் வந்த இரண்டாம் நாள் மாலை அசோகமித்திரனைக் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை அவரேகூட என் பெயரைப் பரிந்துரை செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.
போன் செய்து விவரம் சொன்னபோது என் குரலில் இருந்த குதூகலத்தை அவர் கண்டுகொண்டார்.
‘அவார்டா? சந்தோஷம். இன்னும் நல்லா எழுதணும்னு மட்டும் நினைச்சிக்கோ. வேறெதையும் நினைக்காத’ என்று சொன்னார்.
ஒரு விநாடி நிலைகுலைந்து விட்டேன். வாழ்வில் நான் பெற்ற விலைமதிப்பே இல்லாத பெரும்பாடம் அது. மகிழ்ச்சியைச் செயலாக மடை மாற்றி விடும் நுட்பத்தை அல்லவா அவர் சுட்டிக்காட்டுகிறார்?
மகிழ்ச்சியில் திளைப்பதென்பது நிகரற்ற பரவச அனுபவம். அதை வேண்டாம் என்று யாராலும் நினைக்க முடியாது. ஆனால் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு வலு சேர்க்காத வெறும் மகிழ்ச்சியால் பயனில்லை. ஒரே ஒரு சிறிய வெற்றியை வாழ்நாள் முழுதும் நினைவுகூர்ந்துகொண்டு, பொழுதைப் போக்குவதாகிவிடும். அது அந்த வெற்றியின் பெருமதியையே அவமதிப்பது போன்றதல்லவா?
அன்று அசோகமித்திரன் இன்னொன்றும் சொன்னார்.
‘பேப்பர்ல வந்துடுத்து. நீயா போன் பண்ணி எல்லாருக்கும் சொல்லிண்டிருக்காத. வீண் செலவு.’
அவர் செலவெனச் சொன்னது பணத்தையல்ல என்று புரிந்துகொண்டேன். அதன் பிறகு யாருக்கும் போன் செய்யவில்லை.
கல்கத்தாவில் விருது பெறச் சென்றபோதுதான் முதல் முறையாக சௌரி என்பவரைப் பார்த்தேன். அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதும் பாரதிய பாஷா பரிஷத் தேர்வுக் குழுவின் அந்த வருட உறுப்பினர் என்பதும் அங்கே தெரிந்துகொண்டதுதான். அவருமேகூட மிகச் சாதாரணமாகத்தான் என்னை எதிர்கொண்டார்.
‘நல்லா எழுதறப்பா. குட்’ என்று தட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவ்வளவுதான்.
இந்தச் சம்பவத்தைச் சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு.
சொற்களின் வலு, சிக்கனத்தில் உள்ளது. மகிழ்ச்சியின் பூரணம் அடக்கமாக இருப்பதில் உள்ளது. என்றால் துயரத்தின் அடர்த்தி மட்டும் கண்ணீரிலும் கதறலிலுமா இருக்கும்?
துக்கமான நினைவுகளைத் தவிர்ப்பதற்கு நான் கையாளும் உத்தி, தூங்கிவிடுவது. பெரிதோ சிறிதோ. உறக்கத்தின்போது அது மறைக்கப்பட்டுவிடுகிறது. அப்படி நினைத்த கணத்தில் உறக்கம் வருவதற்கு ஏற்ற விதத்தில் எப்போதும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இதர சிந்தனைகள் இல்லாமல் பார்த்துக்கொண்டும் இருப்பது அவசியமாகிறது. மூளை ஓய்வுக்காகக் கெஞ்சிக் கதற வேண்டும். அப்படியே அதை எப்போதும் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதும் இதனாலேயே அவசியமாகி விடுகிறது.
கவலைகளை ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்லாதிருப்பது ஒரு சாகசம். அது கைவரப் பெறுவதற்கு, இயற்கையாக நேர்பவை தவிர, நடக்கும் பிற அனைத்துக்கும் நாமே காரணம் என்று உறுதியாக நம்புவது அவசியம். நேரும் பிழைகள் நாம் செய்வனதாம்; கடவுளோ விதியோ அல்ல என்று உறுதியாக நம்பும்போதுதான் அதைச் சரி செய்வது சார்ந்து சிந்திக்கத் தொடங்குகிறோம். இன்னொரு முறை அப்படி நிகழாதிருக்கத் திட்டங்களை மாற்றி அமைக்கிறோம். ஆழ்மனம் அதைச் செய்யத் தொடங்கும்போது கவலைப்பட்டுக்கொண்டிருக்கவோ, துயரத்தில் திளைக்கவோ அதற்கு நேரமில்லாது போய்விடும்.
இதுதான் சரியா என்று இன்னமும் தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் இதுநாள் வரை இருந்து வருகிறேன். ஏமாற்றங்கள், துரோகங்கள், மோசடிகள், இழப்புகள், தோல்விகள், சறுக்கல்கள், உபாதைகள் என்று எதை எதிர்கொள்ள நேர்ந்தாலும் உடனே எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக்கொண்டு படிக்கவோ எழுதவோ தொடங்கிவிடுகிறேன். படிப்பதும் எழுதுவதும் மட்டுமே என்னோடு சம்பந்தப்பட்டவை என்று மீண்டும் மீண்டும் மனத்துக்குச் சொல்லித் தருகிறேன்.
செயல் சிறக்க இது எவ்வளவு உதவுகிறது என்று இன்னும் கணக்கிட்டதில்லை. ஆனால் துயரத்தின் கனம் அழுத்தாதிருக்க இது ஓர் எளிய உபாயமாக, நிச்சயமாக உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.


