
அன்பின் பாரா
உங்களின் நிலமெல்லாம் ரத்தம் ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல்லலாம் என்று நினைக்கும் போது குறுக்கால இந்த கௌசிக் வந்தால் என்பது போல டாலர் தேசம் வந்து நிற்கும்.
சரி தான் இரண்டுமே மாஸ்டர் பீஸ் என்று பட்டியலில் சேர்க்கும் போது மாயவலை இல்லாமல் ஏதடா மாஸ்டர் பீஸ் என்று எனக்குள்ளே சொல்லுமளவுக்கு மாயவலை மனசெல்லாம் நிறைந்திருக்கும்.
பா ராவின் நூல் பட்டியலை எடுத்தால் எத்தனை மாஸ்டர் பீஸ்களை இணைப்பது என்ற மிகப்பெரிய ஆராய்ச்சியில் நுழைந்திருந்த தருணத்தில் இதோ இன்னொரு மாஸ்டர்பீஸ்! “வட கொரியா பிரைவேட் லிமிடெட்”.
கொரியன் வெப்சீரிஸ், கொரியன் மொபைல் செட் என்பதன் மூலமாக எல்லாருக்கும் அன்றாட வாழ்வில் ஐக்கியமான ஒரு வார்த்தை கொரியா. இது வார்த்தை மட்டுமல்ல ஒரு தேசம். ஆனால் இந்த வெப்சீரிஸ் மற்றும் மொபைல் செட் மற்றும் இன்னும் பிற தொழில்நுட்ப இத்யாதிகள் எல்லாம் புழக்கத்துக்கு வருவது தென் கொரியாவிலிருந்துதான். ஆனால் அதற்கு மேலே இருக்கும் வட கொரியாவைப் பற்றி யாருக்குத்தான் தெரியும்?
உலக அரசியலை வாசிப்பவர்களும் கவனிப்பவர்களும் கண்டிப்பாக தவற விடக்கூடாத நாடாகவும் அதே சமயத்தில் அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆராயும் ஆர்வலர்களுக்கும் பரிச்சயமான நாடுதான் இந்த வட கொரியா.
வட கொரியாவைப் பற்றி உண்மை தகவல்கள் எதுவும் பொது வெளியில் அதுவும் சாமானியனுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதில் எத்தனை சதம் பொய்யும் மெய்யும் இருக்குமென்பதை பிரித்தறிய முடியாது. வெளி உலகில் பெரும்பாலும் கட்டுக்கதைகளாலும், பேய்க்கதைகளாலும், வதந்திகளாலும், ஊகங்களாலும் மட்டுமே அறியப்படுகிறது வட கொரியா.
சரி இந்த நாட்டை எப்படித்தான் முழுமையாக அறிந்து கொள்வது என்கிற கேள்விக்கான பதில்தான் எழுத்தாளர் பா. ராகவன் எழுதியிருக்கும் வட கொரியா பிரைவேட் லிமிடெட் புத்தகம்.
கிம்-1, கிம்-2 மற்றும் கிம்-3 என கிம்களால் மட்டும் ஆளப்பட்ட மற்றும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வட கொரியாவின் வரலாறு, ஜப்பானின் காலனியாதிக்கத்திலிருந்து துவங்குகிறது.
ஜப்பான் வசம் காலனியாதிக்கத்தில் இருந்த கொரியா, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பங்கு போட கடைசியில் 38வது அட்சரேகைக் கோட்டில் மீது இன்னுமொரு கோடு வரைந்து மேலே இருப்பது வட கொரியா சோவியத்துக்கு சொந்தமென்றும் கீழே இருப்பது தென் கொரியா அமெரிக்காவுக்கு சொந்தமென்றும் துண்டாடப்படுகிறது. அதாவது வட கொரியாவுக்கு முழு ஆதரவாக பின்னால் இருப்பது சோவியத் யூனியன். அதனால் வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. தென் கொரியா அமெரிக்க வசமானதால் முதலாளித்துவ நாடு.
கம்யூனிசம் என்ற போர்வையை வட கொரியா போர்த்திக் கொண்டு இருப்பதெல்லாம் சோவியத்தின் மூலமாக நிதி ஆதரவை பெறுவதற்காகத்தானே தவிர கம்யூனிசத்திற்கான வாடையே இல்லாத நாடுதான் வட கொரியா.
கிம் இல் சுங் – ல் (அதாவது இப்போதிருக்கும் கிங் ஜான் உன்னின் தாத்தா) இருந்து ஆரம்பிக்கிறது வட கொரியாவின் வரலாறு.
இப்போதிருக்கும் வட கொரியவை கட்டமைத்தது இவர்தான். இவர் வகுத்த பாதையில்தான் இவரது மகனான கிம் ஜாங் இல்-லும்,பேரனான கிம் ஜாங் உன்-னும் சர்வாதிகார ஆட்சியை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கால்வாசி நூற்றாண்டில் கிம் 1, கிம் 2, கிம் 3 என தலைவர்கள்தான் மாறியிருக்கிறார்களே தவிர வட கொரிய மக்களின் தலையெழுத்து மாறவே இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா இந்நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலமாக மற்ற பிற நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாததால் நிதிப் பற்றாக்குறை எப்பொழுதும் உண்டு. தென் கொரியாவில் விவசாயம் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வட கொரியாவில் விவசாயம் கிடையாது. மாறாக கனிம வளம் அபரிமிதம். சரி கிடக்கட்டும். அவற்றை வைத்துக் கொண்டு எப்படி சாப்பிடுவது. பொருளாதாரத் தடைகளோ ஏராளம். என்ன செய்வது பணத்துக்கு? இந்த கேள்வியை அந்த நாட்டின் சாமானியன் மட்டுமல்ல அரசாங்கமும் கூட தன்னைக் கேட்டுக் கொள்கிறது.
சோவியத் யூனியன் ஆதரவு இருக்கும் வரை பசியும் பஞ்சமும் எட்டிப் பார்க்கவில்லை வட கொரியாவில். ஆனால் என்று சோவியத் யூனியன் உடைந்ததோ அன்றிலிருந்துதான் வட கொரியாவின் ஆட்டம் ஆரம்பம். சோவியத் யூனியன் ஆதரவு இருக்கும் போதே நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே கிம் 1- ன் குறிக்கோள். ஆனால் கொரியப் போரில் ஏற்பட்ட சேதாரங்களிலிருந்து வெளியே வருவதற்கும் நகரத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கும் முனைப்பு காட்டியதால் தன்னிறைவு எனும் குறிக்கோள் என்பது தடுமாறிப் போய்விட்டது.
சரி. என்ன செய்வது பணத்துக்கு? என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். கள்ள நோட்டு அடிப்பது,கடத்தல் செய்வது மற்றும் பிற கள்ளத்தனங்கள் என “அறை எண் 39″என்கிற அத்தியாயம் படு சுவாரசியமாக சொல்கிறது இந்த கேள்விக்கான பதிலை.
கிம் 1க்கு பிறகு அடுத்த வாரிசாக கிம் 2 எப்படி வந்தார். அதற்கு கிம் 2 செய்த தகிடுதத்தங்கள் என்ன, சர்வாதிகார ஆட்சியை கிம் 1 ஐப் போல கிம் 2 தொடருவதற்கு, கிம் 1 சொன்ன அந்த மூன்று பாடங்கள் என்ன என்பதையும் அடுத்து மூன்றாவது தலைமுறை வாரிசாக கிம் 3 வருவதற்கான பின்னணி என்ன என்பதையும் விலாவரியாக விவரிக்கிறார் பா.ரா.
இப்படி மூன்று தலைமுறைகளாக அதாவது முக்கால்வாசி நூற்றாண்டாக கிம் தலைமுறை வம்சத்துக்குள் சிக்குண்ட அந்த நாட்டு மக்கள் இதை எதிர்த்து ஏன் கிளர்ச்சியோ புரட்சியோ செய்யவில்லை என்பதற்கான காரணத்தையும், புரட்சிக்குத்தான் வழியில்லை என்றாலும் நாட்டை விட்டு வெளியேறுவதில் இந்த மக்களுக்கு என்ன சிக்கல் என்ற கேள்வி எழலாம். இன்று வரையும் இந்த நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளான ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் தப்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் உயிரை பணயம் வைத்து.
வட கொரியாவில் ஐடென்டிடி போன்றதொரு தனிமனிதனுக்கான அடையாள எண் இருக்கிறதா எனத் தெரியாது. ஆனால் அங்கு ஒவ்வொரும் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டத்தை மற்றவர்களிடம் புலம்புவது கூட முடியாது. ஏனென்றால் அங்கு ஐந்தில் ஒருவர் உளவாளியாக இருப்பார். உண்பதற்கு உணவில்லை என்றாலும் வருத்தப்படாமல் இருக்க வேண்டும். கிம் வாழ்க! கிம் வாழ்க! என்று புகழாரம் பாட வேண்டும்.
இப்படியான ஒரு இருண்ட தேசம்தான் வட கொரியா.
மொத்தம் 55 அத்தியாயங்களில் வட கொரியாவை அக்கு வேறு ஆணி வேறாக 360 டிகிரியில் அலசி ஆராய்ந்து தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார் பா.ரா. அத்தனை உழைப்பு.
அத்தனை எழுத்தும் அவ்வளவு தெளிவு. அவ்வளவு எளிமை.
நாடுகளின் அரசியல் மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் இதை வாசிக்கலாம். இந்தப் புத்தகம் இருண்ட தேசமான வட கொரியாவை வெளிச்சம் போட்டு காட்டும். வாசகனை நிச்சயம் ஏமாற்றாது.
வட கொரியா பிரைவேட் லிமிடெட் கிண்டில் பதிப்பு | அச்சுப் பதிப்பு
Abdullah Ibnu Naseer (M.N.Abdullah – From Sri Lanka)
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.