நாவலும் மற்றதும்

ஆசிரியருக்கு,

தங்கள் அபுனைவுப் புத்தகங்கள் மிகவும் எளிதாகவும், ஆர்வமூட்டும் நடையிலும் இருப்பதாக உணர்கிறேன். ஆனால் படிக்கத் தொடங்கிய யதி முடிக்க முடியவில்லை. ஜந்து அன்றாடம் படித்தும் மனதில் பதியவில்லை. அல்லது புரியவில்லை.  நான் என்ன செய்ய வேண்டும்?

ஆண்டனி ஃப்ரான்சிஸ்

அன்புள்ள ஆண்டனி,

புரிந்துகொள்ளக் கடினமான விவகாரங்களைப் பாமர வாசகர்களும் உணர்ந்து தெளிய வேண்டும் என்பதே நான் எழுதும் சர்வதேச அரசியல் நூல்களின் அடிப்படை நோக்கம். தமிழில் அந்த இயலைத் தொட்டுத் துலக்க அதிகம் பேர் இல்லை. அதனாலேயே தமிழ் வாசகர்கள் உலக நடப்பு அறியாமல் இருக்கக் கூடாதல்லவா?

தவிர, non fiction எழுதும்போது நான் ஒரு பத்திரிகையாளனாக மட்டுமே செயல்பட நினைப்பேன். சரியான தகவல்கள்ஆதாரபூர்வமான தகவல்கள்எளிய மொழிநேரடியான வெளிப்பாடு. இவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அப்படித்தான் செய்ய வேண்டும்; அதுதான் அதற்கான ஒழுக்கம்.

ஆனால் நாவல் என்கிற கலை வடிவம் வேறு. கருத்து சொல்வது அதன் வேலையல்ல.  கதை சொல்வதும் அதன் நோக்கமல்ல. வாழ்க்கை எனக்கு அளித்த சில சந்தர்ப்பங்கள், அனுபவங்களை விலகி நின்று பரிசீலித்து, மதிப்பிடப் பார்க்கிறேன். முடிவே இல்லாத எனது குழப்பங்களையும் வினாக்களையும் அப்பட்டமாக எடுத்து வைத்து விடை தேடிச் செல்கிறேன்.  உண்மையும் பொய்யும் யதார்த்தமும் கனவும் நறுமணமும் துர்நாற்றமும் உக்கிரமும் மென்மையும் அழகும் அருவருப்பும் கண்ணீரும் புன்னகையும் கலந்து துலங்குகிற வாழ்வனுபவங்களை அப்படி அப்படியேஅதே விதமாகத்தானே எடுத்து வைக்க முடியும்? சிறிது மிகை புகுந்தாலும் அது அலங்கோலமாகிவிடும்.  எனவே எழுதப்படும் பொருளுக்கேற்பப் புனைவின் மொழி  உருமாற்றம் கொள்கிறது.

முறுக்குப் பிழியும் அச்சு போல ஒரு மொழிநடையை உருவாக்கி வைத்துக்கொண்டு, ஏதாவதொரு கதையை உருவாக்கி அதில் போட்டுப் பிழிந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். பொழுதுபோக்குக் கதைகளுக்கு அது உதவும். நாவல் வேறு வகை. அதை அப்படிச் செய்ய முடியாது; கூடாது. என்னுடைய ஒரு நாவலே இன்னொன்றைப் போல இராது. நாவலின் கருப் பொருளுக்கேற்ப மொழி தன் முகத்தை மாற்றிக்கொள்ளும். உத்திகளைக் கூடத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதில்லை. அந்தந்த நாவல், தனக்குத் தேவையானதைத் தானே தேடிக்கொள்ளும்.

உதாரணத்துக்கு, நீங்கள் படித்த ஜந்துவை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வோர் அத்தியாயமும் தன்னளவில் ஒரு சிறுகதையைப் போன்ற நிறைவினைக் கொள்கிறது. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது ஒரு வாரப் பத்திரிகை அலுவலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விலகி நின்று சுட்டிக்காட்டுகிறதல்லவா?

இது திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. பணியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் சிக்கலில்லாமல் கழிந்தால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வோர் ஊழியரும் அன்றைய பொழுது நிறைவாகக் கழிந்ததாக நினைக்கிறார்கள். ஒரு முழுமையை ஒரு நாளைக்குள் தரிசித்துவிட்ட நிம்மதியுடன் மறுநாள் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். ஆனால் இறுதிவரை யுத்தம்தான். அதில் சந்தேகமில்லை. அன்றன்றைய நாளின் நிறைவும் அடுத்த நாள் பற்றிய பதற்றமும் இறுதிவரை தொடரும் அமைப்பை வேறெப்படி வெளிப்படுத்த இயலும்?

தவிர அது ஒரு நபரின் கதையல்ல. ஒரு நிறுவனத்தின் கதையும் அல்ல. பத்திரிகை படிக்கும் வாசகர்களுக்கு அதன் பின்னால் இருந்து இயங்கும் ஒரு சாராரின் அன்றாடங்களை, அதன் அவலங்களை, நிச்சயமின்மையை, வலிகளை, வேதனைகளைத் துலக்கிக் காட்டுவதன் வாயிலாக என் அனுபவங்கள் எனக்குப் பயிற்றுவித்தவற்றை மீள எடுத்துப் பார்த்து மதிப்பீடு செய்துவிட்டுக் கடந்து செல்கிறேன். அவ்வளவுதான்.

கட்டுரை நூல்களைப் படிப்பது போல நாவல் படிக்கக் கூடாது. நாமறியாத ஒரு புதிய உலகம், புதிய வாழ்க்கைஅது நமது வாழ்வோடு எந்தப் புள்ளியில் ஒன்றிணைகிறது என்கிற ஆர்வமே ஒரு வாசகரை நாவல்களுக்குள் வாழ வைக்கும்.

விடாமல் படித்துக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒருநாள் அதன் வாசல் உங்களுக்குத் திறந்தே தீரும். அப்போது அகப்படும் தரிசனம் மகத்தானதாக இருக்கும். வாழ்த்துகள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading