சென்னை புத்தகக் காட்சி 2022

சென்னை புத்தகக் காட்சி 2022 இன்று தொடங்குகிறது. வழக்கம் போல ஜனவரியில் திட்டமிடப்பட்டு, அது தள்ளிப் போனபோது ஒரு திருமணம் ஒத்தி வைக்கப்பட்ட உணர்வே இருந்தது. வெளியே சொல்ல முடியாத துக்கம்; மனச் சோர்வு. கழுவித் தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டு, வலுக்கட்டாயமாகச் சில காரியங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தேன். ஆன்லைன் புத்தக ஆர்டர்களுக்கு ஒரு நாள் முழுதும் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டதெல்லாம் அப்படிச் செய்ததுதான்.

சென்னை புத்தகக் காட்சி எனக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்றால், ஓர் ஆண்டில் நான் என் கூட்டை விட்டு வெளியே வருகிற ஒரே தருணம் அதுவே. இலக்கிய விழாக்கள், புத்தக வெளியீடுகள், இசை நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள், படம் பார்க்க தியேட்டருக்குக் கூட இப்போதெல்லாம் போவதில்லை. நண்பர்களைச் சந்திப்பது என்பது கூடக் கிடையாது. விதியின் ஏற்பாட்டின்படி எனக்கு வாய்த்த நண்பர்களில் பெரும்பாலானோர் பரதேசிகள். வீடு-அலுவலகம் தாண்டி உண்மையிலேயே எங்கும் செல்வதில்லை. இதனால்தான் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் வீடடங்கிக் கிடந்தது குறித்துப் பக்கம் பக்கமாக எழுதியபோது அது என்னை பாதிக்கவேயில்லை. நான் எப்போதும் செய்வதை உலகம் இப்போது செய்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

வருடத்தில் முன்னூற்றைம்பது தினங்கள் எழுதுவது, படிப்பது அல்லது வெட்டியாக இருப்பது ஆகிய மூன்று செயல்களை மட்டுமே செய்கிறேன். உலகம் பார்க்கக் கிளம்புவது இந்தப் புத்தகக் காட்சி தினங்களில் மட்டும்தான். யாரை மனத்தில் இறுத்தி வருடம் முழுதும் எழுதுகிறேனோ, அவர்களை நேரில் சந்திப்பதும் உரையாடுவதும் நிகரற்ற அனுபவம். ஆயிரக் கணக்கான வாசகர்கள். நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள். பெருங்கூட்டத்தில் என்னைத் தேடி வருகிற ஒவ்வொருவரையும் என் அப்பன் இட்டமுடன் என் வாழ்வுக்கு எழுதி வைத்த சொத்தாகத்தான் நினைக்கிறேன். இத்தனைக்கும், வருகிற சிலரில் பலர் பேசுவது கூடக் கிடையாது. வெறுமனே கையைப் பிடித்துக்கொண்டு இரண்டு நிமிடம் நின்றுவிட்டுப் போய்விடுவார்கள். ஆண்டு முழுதும் அவர் என்ன சொல்ல நினைத்துச் சொல்லாமல் இருந்திருப்பார் என்று எண்ணியபடியே கழிந்துவிடும்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சென்ற ஆண்டா, முந்தைய ஆண்டா என்று நினைவில்லை. புத்தகக் காட்சியில் வாசக-நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவர் எங்கிருந்தோ விரைந்து வந்தார். ‘சார், ஒரு நிமிடம் இப்படி வாருங்கள்’ என்று தனியே அழைத்து நிறுத்தி, தன் மொபைல் போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தார். சில வினாடிகளில் விடியோ காலில் ஒரு பெண் தோன்றினார். என்னால் கண்காட்சிக்கு வர முடியவில்லை; இம்முறை உங்களைப் பார்க்க முடியாமல் போகிறதே என்பதால் நண்பர் மூலம் விடியோ காலில் பேசுகிறேன் என்று சொல்லித் தனது அன்பைத் தூவி விடை பெற்றார்.

எழுதுவதைத் தவிர என்ன செய்துவிட்டேன்? உண்மையில், வேறு எதுவுமே செய்யத் துப்பில்லாதவனுக்கு இந்தப் பத்து, பதினைந்து நாள்கள் வேற்றுலக சுற்றுலா போவது போலத்தான் தோன்றும். ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் காட்சி தினங்களில் என் மனைவி கிண்டல் செய்துகொண்டே அன்றன்றைக்கான உடைகளை மடிப்புக் குலையாமல் எடுத்துத் தருவார். சமூக வலைத் தளங்களிலோ, பத்திரிகைகளிலோ வெளியாகும் புகைப்படங்களில் வாசகர்களுடன் (அபூர்வமாகத்தான் அமையும் என்றாலும் சில பொழுது வாசகியருடன்) உரையாடிக்கொண்டிருக்கும்போது என் முகபாவம் எப்படி இருக்கிறது என்பதைக் கொண்டு மணிக் கணக்கில் என் மனைவியும் மகளும் ஓட்டுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கொரு முறைதான் நான் வீட்டை விட்டே வெளியே போகிறேன் என்பதால் அதுவே ஒரு திருவிழா.

இந்த ஆண்டு எனக்கு ஆறு புத்தகங்கள் புதிதாக வெளியாகியிருக்கின்றன. இவற்றில் கபடவேடதாரிக்காக உயிரை விட்டிருக்கிறேன். தொடக்கத்தில், எளிய வாசகர்களுக்குப் புரிவதில் சிறிது சிரமம் இருந்ததைக் கண்டேன். புரிந்துகொண்ட சிலர் ஃபேஸ்புக்கில் அந்நாவலைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு ‘இதற்கு என்ன பொருள்? அது எதைக் குறிக்கிறது?’ என்று கேட்டு வருகிற குறுஞ்செய்திகள் நின்றுவிட்டன.

‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ குறித்துச் சொல்ல வேண்டும். சென்ற புத்தகக் காட்சியில் இப்படி ஒரு நூலை நான் எழுதலாம் என்று விதை போட்டது ராம்ஜி. பயிற்சி வகுப்புகளுக்கான பாடத் திட்டம் தயாரிக்கும் பணியில் இருந்ததால் அப்புத்தகம் எழுதுவதில் மொழிச் சிக்கல் ஏற்படும் என்று நினைத்தேன். பாடநூல் மொழியில் அப்புத்தகம் இருந்துவிடக் கூடாது என்பதில் எனக்கு மறு யோசனையே கிடையாது. எழுத்துதான் நம் துறை என்று முடிவு செய்து, பயிலத் தொடங்கியபோது நான் பெற்ற அனுபவங்களை, கற்ற பாடங்களை வாய்த்த சம்பவங்களின் ஊடாகவே எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். இன்று ஏராளமான வாசக நண்பர்கள் அந்தப் புத்தகத்தை உருகி உருகி வாசிப்பதையும், உணர்ச்சி வயப்பட்டு அது குறித்துப் பேசுவதையும் பார்க்கும்போது மிகுந்த நிறைவாக உள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கையெழுத்துப் போடுவதற்காக என் மகள் ஒரு புதிய பேனா வாங்கிக் கொடுத்திருக்கிறாள். இங்க் பேனா, ஜெல் பேனா என்றால் தாளில் மை ஊறும். சென்ற ஆண்டு இதனை யோசிக்காமல் ஃப்ளோரஸண்ட் நீல நிற இங்க்கில் மயங்கி, ஒரு இங்க் பேனாவை வாங்கிவிட்டேன். இம்முறை அந்தப் பிரச்னையே கிடையாது. கண்ணைப் பறிக்கும் வயலட் நிறத்தில் எழுதும் அருமையானதொரு பால் பாயிண்ட் பேனா கிடைத்திருக்கிறது. எழுதும்போது லிக்விட் சீஸ் போல வழுக்கிச் செல்கிறது. ஒரே புத்தகத்தில் பத்துக் கையெழுத்துகூடப் போடலாம் போலத் தோன்றுகிறது.

இம்முறை இருபது நாள்களுக்கு மேல் புத்தகக் காட்சி நடக்க இருக்கிறது. பத்து தினங்களாவது கண்டிப்பாக வருவேன். (27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வெளியூர் வாசகர் சந்திப்பு தனி.) திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மாலை ஜீரோ டிகிரி அரங்கில் (F45) இருப்பேன். இதர நாள்களில் நான் சுற்றிப் பார்க்கவும் புத்தகங்கள் வாங்கவும் வருவேன். முன்பே சொன்னபடி, சனி-ஞாயிறுகளில் மட்டும் மாலை நேரம் வர இயலாது.

வாசக நண்பர்கள் அனைவரையும் சென்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்கிறேன். அனைவருக்கும் திருவிழாக் கால வாழ்த்துகள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி