யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]

குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள் பணிந்தேன். பின்னாளில் விதவிதமாக எவ்வளவோ சன்னியாசிகள் எங்கெங்கிருந்தோ முளைத்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல்வேறு விதமான செய்திகள், தகவல்கள், பரபரப்புகள். காலம் சன்னியாசிகள் மீதான என் மதிப்பைக் குறைத்தது.

பாராவின் யதி, சன்னியாசிகளின் தோற்றம் தாண்டி அவர்களுடைய மனத்தை ஊடுருவி ஆன்மாவைத் தொடுகிற முயற்சியாக இருக்கிறது. முதல் சில வாரங்கள் இந்நாவலை அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் போகப் போக, தினமும் யதியைப் படிக்காதிருக்கவும் முடியவில்லை. காலையில் அலுவலகத்தில் அவசரமாக ஒரு வாசிப்பு, பின் மாலையில் முதல் நாளுடன் சேர்த்து நிதான வாசிப்பு என்று பழக்கப் படுத்திக்கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் மனைவியிடம் யதி புராணம்தான். தேவியின் கருணைக்காக அலைந்த வினய், கண்ணனின் தரிசனத்திற்காகக் கடுந்தவம் செய்த வினோத், மரணத்தை வெல்ல முயன்ற விஜய், உலகைத் தன் காலடியில் கிடத்தி வைக்க நினைத்த விமல், அக்காவை அன்னையாக்கிய கேசவன் மாமா, நித்ய கல்யாண பெருமாளையே சபித்து தண்டிக்க நினைத்த பத்மா மாமி, கோவளத்து பக்கிரி, சொரிமுத்து, திருப்போரூர் சாமி… எதைச் சொல்ல? யாரை விட? இது ஒரு பிரும்மாண்டமான அனுபவம். விவரிக்க முடியாதது.

விழிப்புநிலை கற்பிக்காத ஒன்றை உறக்கம் சொல்லித் தரும் என்றால், அந்த விழிப்பில் தேவியின் பார்வைக்காக அலையும் வினய்தான் யதிகளின் சிறப்பு. அம்மாவின் இறுதி நாட்களை, அவள் நிலை கேள்விபட்டு கிளம்பும் விமலின் யாத்திரை தொடங்கி வரும் கதை, நடுநடுவே எல்லா பாத்திரங்களையும் தொட்டு ஊருக்கு வருகிறது. கதைப் போக்கில் ஆங்காங்கே பளிச்சிடும் “அறிவுரைகள் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டவனுக்கு அறிவுரைகள் ஒவ்வாமை ஏற்படுத்தும்”, “வெளியே கிடக்கிற காத்து உள்ளே கிடந்தா பொண்ணு, இல்ல பொணம்”, “மௌனத்தின் விஷச் சாறில் ஊறப்போட்ட துயரம்”, “மரணத்தை தரிசிக்க நுழைவு சீட்டுடன் வந்தவர்கள் நாம்” இதெல்லாம் வாசிக்கையில் என்னைத் தடுமாறவும் திடுக்கிடவும் வைத்த வார்த்தைக் கோவைகள்.

சமயங்களில் விமலின் நடவடிக்கைகள் சந்த்ராசாமி போன்றோ… என்று கூட என்னை எண்ண வைத்தன. ஏன் வார இறுதி நாட்களில் தொடர் வருவதில்லை என்று குறையாகக் கூட எண்ணியதுண்டு.
காடுகள், மலைச்சரிவுகள்,குருவாயூர், இலங்கை, திருவண்ணாமலை,மெக்ஸிகோ சென்று எங்கெங்கோ பயணித்து கடைசியில் வாழ்ந்த ஊருக்கு வருகிறது கதை. குளிரை வெல்வது, உணவை மறுப்பது என்ற அனுபவங்களில், வெற்றி காணும் நால்வரும் காமத்தை மட்டும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் / சந்தர்ப்பங்களில் வெல்வதில்லை .

அம்மாவைப் பார்க்க அருகில் வர வர சீக்கிரம் வரமாட்டார்களா என்று மனது துடிக்கிறது. அம்மா ரோமம் போல உதிர்ந்து கிடந்தாள் என்ற வரியைக் கடக்கையில் மனதை ஏதோ பிழிகிறது. இறந்தவர் திதி பார்க்கக்கூடாது, நட்சத்திரம் பார்க்க வேண்டும், அதனால் அவர்களுக்கு ஏற்பட இருக்கும் அடைப்பு என்பது எனக்குப் புது தகவல். எனக்குப் பிடித்த பாத்திரப் படைப்பான வினய் பற்றிய வரிகள்… “கலைஞன் மனதுடன் படைக்கப்பட்ட கொலைகாரன் வாள்முனையால் எழுதப்பட்டான்”, ஆனால் கடைசி வரை “அமுக்கிராங்கிழங்கு” விஜய் ஒரு புதிர்தான்.

என்னுடைய வாழ்விலும் எனது மாமா (அம்மாவின் தம்பி) அம்மாவின் கடைசி காலம் வரை அக்கா அக்கா என்று உருகி நின்றதைப் பார்த்து இருக்கிறேன். கேசவமாமா எனக்கு அவரேதான்.

வயதானவர் என்று பாராவை நினைத்து இருந்தேன். அந்த உண்மை தவிடுபொடியாகிவிட்டது. எழுத்தின் இந்த இளமையும் வேகமும் பிரமிப்பைத் தருகிறது. சமயங்களில் சில வர்ணனைகள் சிரிப்பைக் கொடுத்தன.. மாமண்டூர் விபத்தில் ‘நாய் காலைத் தூக்கிச் சிறுநீர் கழிக்கும் தோற்றத்தில் பேருந்து நின்றது’ எனும்போது விபத்து அப்படியே கண்ணெதிர்க் காட்சியாகிவிடுகிறது.

அன்னமயகோசம் , மனோமயகோசம், பிராணமாயகோசம், ஆனந்தமயகோசம் போன்றவை உடல்,உடலுடன் கூடிய பொறிகள் என விளக்கப் பெற்றமை அற்புதம்.

மொத்தத்தில் யதி இன்னும் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறது. இன்னும் பல வாசிப்புகள் தேவைப்படுகிறது, முழுதாகப் புரிந்து கொள்ள.

-இரா. ஶ்ரீதரன்

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter