யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]

பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது.

ஒரு குடும்பத்தில் பிறந்த நால்வரும் ஏதோ சாபத்தின் விளைவாக வெவ்வேறு சூழ்நிலைகளில் துறவை மேற்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் தொடர்பின்றி தேசம் முழுதும் எங்கெங்கோ சுற்றி அலைகிறார்கள். இந்த அலைச்சலும் உள்ளங்களுக்குள் நிகழும் ஓயாத அலைச்சலும் எங்கு சங்கமிக்கப்போகின்றன என்ற ஆர்வம் நம்மை விடாது துரத்துகிறது. நாவலின் தொடக்கத்தில் மூத்தவன் விஜய் வெளிக்காட்டும் சித்தனைப் போன்ற நடவடிக்கைகளும், செயல்களும் விமல் மட்டுமல்ல வாசிக்கும் நம்மையும் வியக்கவைக்கிறது. விமல் கதையின் ஹீரோ மட்டுமல்ல; கதைசொல்லும் பாங்கில் நிஜத்தில் ராகவனையே விமலாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு வர்ணனையும், காட்சிகளும் விமலின் பாத்திரத்தில் ராகவனையே முன்னிறுத்துகின்றன.

அம்மாவும்,அப்பாவும் திருப்போரூரில் நிறம் மாறாத பூக்கள் படம் பார்த்தது முதல் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் கோவளம் தர்காவுக்குச் செல்வதும் சம்சுதீன் பாயிடம் ஓதிக்கொண்டு வருவதும், அதே சம்சுதீனை ஒரு சித்தராக வினய் சொரிமுத்து மூலம் மறு அறிமுகம் பெறுவது வரை நிகழும் சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்பற்றது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் யோசிக்கும்போது வேறு பல உண்மைகளை விளக்குகின்றன.

ஸ்ரீரங்கத்தில் வினோத்துக்கு ஆற்றில் லிங்கம் கிடைக்கிறது. ஆனால் அவன் ஏன் கிருஷ்ண பக்தனாகிவிடுகிறான்? வினய் திருவானைக்காவல் சொரிமுத்து சித்தனிடம் வித்தைகளைக் கற்றுக்கொள்கிறான். ஆனால் எப்படித் தடம் மாறி ஆவிகளின் பிடியில் போய் விழுகிறான்? வாழ்வின் புதிர்த்தன்மைகள் ஒவ்வொன்றும் சுவாரசியமானவை. அவற்றை அவிழ்ப்பதும், அவிழ்க்க முடியாமல் போவதுமேகூட.

நாவலின் மிக முக்கியக் கட்டம் என நான் கருதுவது, அந்த சித்ரா கதாபாத்திரத்தின் உக்கிரம். திருமணத்துக்கு முதல் நாள் வினோத் ஓடிப் போக அவனுக்கு உள்ள நியாயம் சித்ராவுக்குத் தெரியாது. தற்கொலை செய்துகொண்டு அவள் இறந்து போகிறாள். தனது மரணத்துக்குப் பிறகு தவமிருந்து, காத்திருந்து வினோத்தைக் கொலை செய்ய அவள் தேர்ந்தெடுக்கும் வழி உண்மையிலேயே திகைக்கச் செய்துவிடுகிறது. மூன்று சகோதரர்களையும் அவள் ஆட்டிப்படைத்து வினோத்தை அவன் லட்சியத்தை நெருங்க விடாமல் செய்ய அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாரும் கற்பனை செய்யக்கூட முடியாது.

திருவிடந்தையில் தொடங்கி, திருவண்ணாமலை, பொதியமலை,மடிகேரி,காசி,அலகாபாத் திரிவேணி சங்கமம், கொல்கத்தா,இமயம்,நேபாளம் என்று எங்கெங்கோ பயணிக்கிறது நாவல். அத்தனை அலைச்சலுக்கும் உச்சம் விஜய் தணலாகி வந்து தாய்க்குக் கொள்ளி வைக்கும் தருணமே. எதைத் தேடிச் சென்று என்ன பெற்றோம் என்று எல்லோருமே எப்போதேனும் தமக்குள் கேட்டுக்கொள்வதுண்டு. அதையே வாழ்வாக்கிக்கொண்டவர்களின் உலகில் கிடைப்பதல்ல; தேடலே எல்லாமாக இருந்துவிடுகிறது.

மறக்க இயலாத வாசிப்பு அனுபவத்தை அளித்த பா.ராகவனின் எழுத்தாளுமைக்கு என் உள்ளார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

-ஏ.கே. சேகர் [ஆசிரியர், ஆகாசம்பட்டு]

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி