யதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]

துறவறம் எனும் சத்திய தடம் தேடிச் சென்ற நாவலுடன் நானும் பயணித்தேன். மறக்க முடியாத அனுபவம் இது.

திஜாவின் கும்பகோணம் – காவிரி போல கேளம்பாக்கம் கோவளம் கடற்கரை மற்றும் திருவிடந்தை பெருமாள் இந்நாவலெங்கும் வியாபிக்கிறார்கள். அந்த விவரிப்பு தரும் சிலிர்ப்பே என்னை ஜீவத் தடத்தைத் தேடிச் செல்லுவதை உறுதிப்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சிறிய கடலோர கிராமத்தில் கிளம்பி, கேரளத்தில் மாந்திரீகம் கற்று, மடிகேரி மழையில் நனைந்து இமயமலையில் திரிந்து திருவண்ணாமலையில் உச்சம் அடைந்து கன்னியாகுமரியின் நிறைவுறுகிறது இந்தப் பயணம். அங்கேதான் பல உண்மைகள் நமக்குக் காட்டப்படுகிறது. அம்மா,கேசவன் மாமா, பத்மா மாமி,சித்ரா ஆகியோர் மைய நோக்கு விசையாகவும், நான்கு வி’ க்களும்,சொரிமுத்துவும் மைய விலக்கு விசையாகவும் இருந்து நாவலில் சுழல்கிறார்கள். இறுதியில் மைய நோக்கு விசையை நோக்கி நகர்ந்து மையம் விலகிச் செல்கிற ஒரு அற்புதமான கட்டமைப்பு படிப்பனுபவத்தையே பரவசமாக்குகிறது.

அம்மா எனும் தேர் விஜய்,வினய்,வினோத்,விமல் எனும் சக்கரங்களால் இயக்கப்படுகிறது. அம்மாதான் முதன்மையான பாத்திரம். இதற்கு இணைப் பாத்திரம் இல்லை என்பது என் கருத்து. மாமி,கேசவன் மாமா ஆகியோரின் ஆகிருதி பெரிது என்றாலும் அம்மாவின் விசுவரூபத்துக்கு முன் ஒன்றுமில்லை. சம்சுதீன் மற்றும் சொரிமுத்து இருவரும் அற்புதமான வார்ப்புகள். சித்தர்களின் பல நிலைகள் இவர்களின் மூலமே காட்டப்படுகிறது. பத்மா மாமி,பேயாய் அலையும் சித்ரா என்ற துணை பாத்திரங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.

துறவு என்பது பல நிலைகளைக் கொண்டது.காட்டில் தவம் புரிந்து மந்திரங்களை உச்சரித்து, கடவுளைக் காண நினைப்பது மட்டுமல்ல. ஒவ்வொருவரின் வாழ்வும் அதனதன் நிலைகளில் துறவறமே. உண்மையான துறவி அம்மா என்ற பாத்திரம் என்று கணிக்க முடிந்தாலும்,அந்த பாத்திரத்தின் உள்ளுக்குள் பல உண்மைகள் புதைத்து வைத்து தன்னோடு கொண்டு செல்கிறது. பாசம்,பரிவு,உண்மைகளின் உறைவிடம் என விரியும் இவளின் வாழ்வு, பாதி உண்மைகளை வெளிப்படுத்தி,மீதியை மறைபொருளாய்க் கொண்டு இருக்கும் அவளின் கடைசி பத்து வினாடிகளில் அந்த எட்டு வினாடிகளில் தெரியும் புன்சிரிப்போடு உச்சம் பெறுகிறாள். தனது கணவனின் விரல் நுனிகூடத் தன்மீது படவிடாமல் முழு வாழ்வையும் வாழ்ந்து முடிக்க ஒரு பெண்ணால் முடியுமா! அப்படியான வாழ்வில் ஒரு குடும்பத்தைக் கட்டமைத்து, அதைக் கலைத்து ஆடவும் தோன்றுமா! பெண்மையின் பெரும் சக்தியை இதுவரை காணாத வேறொரு பரிமாணத்தில் இந்நாவலில் தரிசிக்க முடிகிறது.

அடுத்து கேசவன் மாமா, அற்புதமான பாத்திரம். மனைவிக்காக சில காலம், அக்கா மற்றும் அத்திம்பேருக்காக சிலகாலம், குழந்தைகளுக்காக சில காலம் அக்கா மற்றும் பத்மா மாமிக்காக மீதிக் காலம் என மற்றவர்களுக்காவே வாழும் வாழ்வு இவருடையது. காணாமல் போனவர்களைத் தேடுவதாக இருக்கட்டும்,அக்காவை கவனித்து கொள்வதாகட்டும், அக்காவின் கடைசி நேரத்தில் படும் பாடாக இருக்கட்டும் – இவரின் பேச்சுக்கள் [வசனங்கள் ], ஒரு சாதாரண பிராமண மாமாவைத் தன்னில் வெளிப்படுத்தி, அக்கா கொள்ளி வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் மறுத்து, “அவ அக்கா இல்லடா,என் அம்மா” என்ற இடத்தில் உச்சம் அடைகிறார்.அவரின் மூலமும் முடிவும் தெரியவே இல்லை. திருவிடந்தையில் அவரின் வாழ்வு இருப்பதாலும் மற்றவருக்காகவே வாழ்வதாலும் அவரைக் கல்யாண பெருமாளாகவே நான் நினைக்கிறேன்.

பத்மா மாமி மற்றும் அவளின் மகள் சித்ரா ஒரு அற்புதம். நித்ய கல்யாணப்பெருமாள் தவிர ஏதும் அறியாத, ஜாதக நுணுக்கங்களை அறிந்தும் , சித்ரா நிலை அறிந்தும் கவலை எனும் சிலந்தி வலையில் சிக்கி , நித்திய பெருமாள் கோவிலில் படுத்து, அங்கேயே உயிரை விடத் துணிந்து, கடவுளைத் தண்டிக்கத் துடிக்கும் அந்த உக்கிரம், அப்பப்பா! சித்ராவின் திருமணம் தோல்வியில் முடிந்து, பேயாய் கோவளம் கடற்கரையில் அலைந்து திரிந்து, வெறியோடு பழிவாங்கும் எண்ணத்தோடு உலவுகிறாள். இவள்தான் இடாகினி என்றபோது ஒரு திருப்பம் உண்டானாலும் மொத்தத் தவத்தையே, தேவியின் உதிரத்தின் ஒரு சொட்டைத் தலையில் சுமந்தாலும் – பழிவாங்கத் துடிப்பதினால் அவளின் துறவு நிறைவு பெறவில்லை.

விஜய் ,வினய் ,விமல் மற்றும் வினோத் இவர்களின் மூலமாகத்தான் நாம் அனைத்து தரிசனங்களும் அடைகிறோம். ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உக்கிரம். நால்வரில் கதைசொல்லி விமல் எனக்குச் சற்று நெருக்கமாக இருந்தான். எதையும் அலட்டிக்கொள்ளாமல் அலசும் அவனது வார்ப்பு மிகவும் ஈர்த்தது.

துறவு நிலை குறித்த மேலோட்டமான, சிதறலான எண்ணங்களும் தகவல்களும் மட்டுமே நமக்கு இதுவரை கிடைத்து வந்திருக்கின்றன. யதி, இந்த இயலின் அடியாழம் வரை அழைத்துச் சென்று தரிசிக்க வைக்கிறது.

  • அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி