ஆண்டாள் படும் பாடு

நேற்று புத்தகக் காட்சியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஆர். வெங்கடேஷின் தொலைபேசி அழைப்பு மூலம் எனக்குப் புதிய தலைமுறை டிவியில் என் தலை உருட்டப்பட்டுக்கொண்டிருந்த விவரம் தெரியவந்தது. அடுத்தடுத்து இன்னும் இரண்டு நண்பர்கள் அழைத்து அதையே சொன்னார்கள். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது பாதி நிகழ்ச்சி முடிந்திருந்தது. திமுக கண்ணதாசன் பேசி முடித்து, ஆசீர்வாதம் ஆச்சாரி பதினொரு மணி சீரியல் கதாநாயகி போல உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன்.

சிரிப்புத்தான் வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய யாருமே [திமுக கண்ணதாசன் உள்பட] நான் என்ன எழுதினேன் என்பதைப் படித்திருக்கவில்லை என்பதைப் பிறகு யு ட்யூபில் நிகழ்ச்சியை மீண்டும் பார்த்து உறுதி செய்துகொண்டேன். ஆண்டாள் விவகாரம் ஏன் வந்தது, நான் என்ன எழுதினேன், எனக்கு அரவிந்தன் நீலகண்டன் என்ன பதில் சொன்னார், அந்த விவாதம் எவ்வளவு தூரம் நீண்டது, ஜடாயுவின் பங்களிப்பென்ன – ம்ஹும்.

எதையும் படிக்காமல் நேற்று ஜடாயு தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்றிருந்த என் பெயரை மட்டும் பார்த்துவிட்டு ஒரு கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள். இதைப் பற்றி இரவெல்லாம் ஜடாயுவுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தேன்.

பாரா சொன்னால் சும்மா இருப்பீர்கள்; வைரமுத்து சொன்னால் கொதிப்பீர்களா என்று கேட்பதுதான் கண்ணதாசனின் நோக்கம். இதன் உள்ளார்ந்த சாதியக் கச்சடா திமுகவுக்கே உரித்தான ஒன்று. என்ன ஒன்று, நான் ஒன்பது அல்லது பத்து  வருடங்களுக்கு முன்னர்  என்ன எழுதினேன் என்பதை அவர் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டுப் பிறகு பேசியிருக்கலாம்.

என் விருப்பமெல்லாம் ஒன்றுதான். ஒன்றிரண்டு தினங்கள் கழித்து யாராவது கண்ணதாசனிடமும் ஆசீர்வாதம் ஆச்சாரியிடமும் என் பெயரைச் சொல்லி விசாரித்துப் பார்க்க வேண்டும். யாருங்க அவரு என்று இருவருமே கேட்காவிட்டால் நான் அரசியல் துறவறம் பூணத் தயார்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter