திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கனவுகள் என்னவாக இருக்கும்?
காது வலிக்கும் இரைச்சலை கறுப்பு நிற ஒலிபெருக்கிகளின்மூலம் வழங்கிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துக்கொண்டே யோசிப்பேன்.
ஒவ்வொரு குழுவிலும் டி.எம். சவுந்தரராஜனைப் போல் பாடும் ஒருவர் இருப்பார். அநேகமாக அவரது தலைமுடி தோள்வரை நீண்டிருக்கும். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். வியர்வையில் அது கரைந்து மூக்கில் ஒழுகிக் காய்ந்திருக்கும். பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி என்று தன்னை மறந்து கண்மூடி அவர் பாடும்போது மண்டபத்தில் ஏதாவது ஒரு குழந்தை ஜட்டியை அவிழ்த்துவிட்டுக்கொண்டு அம்மா, ஆய் என்று சொல்லும்.
சந்திரபாபு, கண்டசாலா குரல்களில் பாடுவதற்கென்றே ஒருவர் இருப்பார், எல்லா குழுக்களிலும். அநேகமாக இவர் ஒல்லியாக, மிகப் பழைய முழுக்கை பட்டுச் சட்டை அணிந்து முழங்கை வரை சுருட்டிவிட்டவராகவே இருப்பார். கடைவாயோரம் ஒதுக்கிய பன்னீர்ப் புகையிலையை அவ்வப்போது உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்… உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ் என்று இழுத்துவிட்டுக்கொண்டு குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே என்பார்.
இடையிடையே டிரம்ஸ் அல்லது கிடார் வாசிப்பவர் மைக்கைக் கையில் வாங்கி மணமக்களை வாழ்த்துவார். அடுத்த பாடல், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி பாடிய.. என்று அறிவிப்பு கொடுப்பார்.
இத்தகு சிறு குழுக்களில் பாடும் பெண்களைப் பிரத்தியேகமாக கவனிப்பேன். எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி சைதாப்பேட்டை ரசாக் மார்க்கெட்டில் ஒரு கடையில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தாள். மாலை வேளைகளில் இம்மாதிரியான திருமணக் கச்சேரிகளுக்குச் சென்றுவிடுவாள். ஒருநாள் கச்சேரிக்கு முன்னூறு அல்லது முன்னூற்றைம்பது ரூபாய் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாள். டி.எம். சவுந்தரராஜனுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் கண்டசாலாவுக்கும் சந்திரபாபுவுக்கும் மனோவுக்கும் ஹரிஹரனுக்கும்கூட அவள்தான் ஃபீமேல் வாய்ஸ் பார்ட்னர். அவ்வப்போது சுருதி தப்பினால் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள். சிறு ஆலாபனைகளிலும் சுரப் பிரஸ்தாரங்களிலும் சொதப்பினால் கண்டுகொள்ளமாட்டார்கள். முன்னால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் 1987 என்று போட்ட டைரியில் பாடல் வரிகளையும் இசைக்குறிப்புகளையும் எழுதிக் கொடுத்தவர் ஒருவேளை தவறு செய்திருக்கலாம்.
உண்மையில் இம்மாதிரியான சிறு குழுக்களுக்குப் பாடகிகள் கிடைப்பது மிகவும் சிரமம் என்று கேள்விப்பட்டேன். ஒரு சுசீலாவாகவும் சித்ராவாகவும் ஜானகியாகவும் ஆசைப்பட்டு, முடியாதவர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். அதிலும் வீட்டார் சம்மதம் கிடைத்து, ரெகுலராக வருபவர்கள் மிகக் குறைவு. ஒவ்வொரு குழுவிலும் ஒன்றிரண்டு கச்சேரிகளுடன் காணாமல் போகும் பாடகிகள் அதிகம். இருப்பவரின் பாடலில் சொற்குற்றம், பொருட்குற்றம், இசைக்குற்றம் இருந்தால் இதனாலேயே யாரும் பெரிதுபடுத்துவதில்லை.
நேற்றைக்கு அலுவலகச் சகா ஒருத்தரின் மகள் திருமண வரவேற்பு மேற்கு மாம்பலத்தில் நடந்தது. இதே போலொரு இன்னிசைக் குழு. அவர்களை தாராளமாக உட்கார, நிற்கவைக்க மண்டபத்தில் இடமில்லை. ஒரு ஓரத்தில் கரண்டி ஸ்டாண்டில் தொங்கும் கரண்டிகள் போல் கலைஞர்கள் ஒட்டிக்கொண்டு பாடிக்கொண்டிருந்தார்கள். மெஜந்தா நிறத்தில் சுடிதார் அணிந்து, பளபளவென்று ஜிகினா ஒட்டிய செருப்புடன் காலால் தாளம் போட்டபடி பாடிய பெண் சற்றே அழகாகவும் இருந்தாள். குரல் வளம் இருந்தது. ஆனால் விடாப்பிடியாக மேல் ஸ்தாயிக்குப் போக மறுத்தார். மெட்ராசுக்கா, திருச்சிக்கா திருத்தணிக்கா என்று பாடகர் உச்சஸ்தாயியில் உக்கிரம் காட்ட, சட்டென சொல்லுவை நிறுத்தி நிதானமாகத்தான் இவர் உச்சரித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீரங்க ரங்க நாதரின் பாதத்தை இவர் நாதரின் தாளமாக்கிவிட, தவறைப் பார்வையால் சுட்டிக்காட்டிய கிடாரிஸ்டை அலட்சியமாக முறைத்தார். அதன்பிறகு அந்த கிடாரிஸ்ட் கண்ணைமூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
கோபித்துக்கொண்டு அவர் இறங்கிப் போய்விட்டால் பல்லேலக்கா பாடமுடியாது. பல்லேலக்கா பாடாவிட்டால் மண்டபத்தில் இருக்கும் குழந்தைகள் குதித்து ஆடாது. அவர்கள் குதூகலமடையாவிட்டால் பேசிய காசு கைக்கு வராது.
பெரும்பாலும் கேட்கச் சகிக்காமலேயே நிகழ்ச்சி வழங்கும் இத்தகைய குழுக்களில் சமயத்தில் சில ரத்தினங்களும் அகப்படும். வெகு நாள்கள் முன்னர் கோயமுத்தூரில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மதியம் மூன்று மணிக்கே இன்னிசைக் கச்சேரிக் குழுவின் சார்பாக ஒரு சவுண்ட் இஞ்சினியர் அரங்குக்கு வந்து எதிரொலி அளவு போன்றவற்றை ஆராய்ந்துவிட்டுச் சென்றார். மாலை நிகழ்ச்சி தொடங்குமுன்னரே குழுவின் தலைவராக இருந்தவர் மைக்கைப் பிடித்து, இன்றைய நிகழ்ச்சியில் மெலோடி பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்று அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், டிரம்ஸ் உபயோகித்தால் இரைச்சல் அதிகமாகக் கேட்கும், இந்த அரங்கம் அதற்குச் சாதகமாக இல்லை என்பதுதான்.
அன்றைய நிகழ்ச்சி முழுதும் இடம்பெற்ற எந்தப் பாடலிலும் டிரம்ஸ் கிடையாது. இரண்டு தபலாக்கள், ஒரு ரிதம் பாக்ஸ். அவ்வளவே. பாடியவர்களும் சுருதி சுத்தமாகப் பாடினார்கள். எழுந்து யாரும் டின்னருக்குப் போகாமல் உட்கார்ந்து முழுக்கக் கேட்டார்கள். இறுதியில் நேயர் விருப்பமெல்லாம் இருந்தது.
திருமண வரவேற்புகளில் சினிமாப் பாட்டுக் கச்சேரி என்கிற கலாசாரம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. சிறு முன்னேற்பாடுகளின்மூலம் இந்தக் கலைஞர்கள் பலரது எரிச்சல்களை அவசியம் தவிர்த்துவிடமுடியும். நேற்றுப் பாடிய டி.எம். சவுந்தரராஜன், பூ முடிப்பால் இந்தப் பூங்குலலி என்றதைக் கண்டிப்பாக மணப்பெண்ணின் தந்தை ரசித்திருக்கமாட்டார். அவரது நாக்கில் கரெக்ஷன் போட பேனா நிப்பைத் தூக்கிக்கொண்டு இவர் ஓடாமலிருக்கவேண்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.